பாரதியின் கனவை நினைவாக்கிய பெண்
மு.பழனிவாசன்
அப்போதைய சென்னை மாகாணத்தில் (இப்போதைய சென்னை)1919 ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று ஒரு பெண்குழந்தை பிறக்கிறது.
அந்த குழந்தையின் தந்தை சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் துறையில் பேராசிரியர். தனக்குப் பிறந்த பெண்குழந்தையை பள்ளி இறுதி வகுப்புவரை படிக்க வைக்கிறார். அதன் 15 ஆவது வயதில் திருமணம் செய்து வைக்கிறார். அந்த பெண்ணுக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.
விதி விளையாடியது. எதிர்பாராத விதமாக குழந்தை பிறந்த நான்கு மாதங்களில் அந்தப்பெண்ணின் கணவர் இறந்து போகிறார். அக்கால குடும்பங்களின் மரபுப்படி அவளது ”இளம் விதவை” என்கிற கோலத்தைக்கொடுத்தது. மடியில் தன் குழந்தையை கிடத்தி, நிலைகுத்திய கண்களுடன் தன் விதியை அலசுகிறாள். ”இனி என் வாழ்க்கைப் பயணம் எதை நோக்கி? உற்றார் உறவினர் உதவியுடன் தான் பெற்ற குழந்தையை ஆளாக்க வேண்டுமா?” என்றெல்லாம் யோசித்தபோதுதான் அவள் மூளைக்குள் ஒரு மின்னல் வெட்டியது.
தன் தந்தையிடம் மனம் விட்டு பேசினாள். அவள் கூறிய விஷயத்தைக் கேட்டு முதலில் அவள் குடும்பம் அதிர்ந்தாலும், அவளது மனத்துணிவையும், அவள் தன் வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்விற்காக அவள் எடுத்த முடிவையும் கேட்டு மெச்சியது.

1939-ம் ஆண்டு சென்னை ராணிமேரி கல்லூரியில் முதல் வகுப்பில் இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றார். பின்பு தன் தந்தை பணிபுரிந்த பொறியியற் கல்லூரியில், முறைப்படியான தகுதிகளுடன் மின் பொறியியல் பாடப்பிரிவில் மாணவியாக சேர்ந்து, இந்தியாவின் சுதந்திரத்திற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1943 ஆம் ஆண்டு”இந்தியாவின் முதல் பெண் பொறியியலாளர்” (India’s First Lady Engineer) என ஆகச்சிறந்த தகுதியுடன் வெளியுலகம் வருகிறார். அந்தப் பெண்தான் “அய்யல சோமையஜுலு லலிதா” அவர்கள். தன் கணவர் இறந்தபின் மறுமணம் செய்துகொள்ளவில்லை. அபாரமான திறமைகளுடன் கல்லூரியிலிருந்து வெளிவந்த அவருக்கு பக்ரா நங்கல் அணைக்கட்டிற்கான மின் டிரான்ஸ்மிஷன் சம்பந்தமாக வரைதல், வடிவமைத்தல் ஆகிய பணிகளில் கொல்கத்தா அசோசிடியேட்டட் எலக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸில் சிஸ்டம் டிசைனிங், பழுதுகளை சரி செய்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டார். பெண்கள் வீட்டிற்குள்ளேயேதான் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக விதவைகள் பயணம் செய்யக்கூடாது என்றெல்லாம் ஆச்சாரங்களைக் காரணம் காட்டி சமூகம் பெண்களை சங்கடத்தில் ஆழ்த்திய காலம் அது. ஆனால், அதற்காக கலங்கி விடவில்லை. பெண்ணியப் போராளி, பெண் சமூக செயற்பாட்டாளர் என்றெல்லாம் முழங்கி மாய்மாலங்கள் செய்து, தன் வயிற்றுப் பாட்டைப் பார்த்து கொண்டு விபரீதங்களை விளைவிக்கவில்லை. தன் திறமையை பட்டை தீட்டிக்கொண்டார். தனது துறை சார்ந்த பணிகளில் அர்ப்பணிப்பு காட்டினார். தேசத்தினை நவீனத்தில் கட்டமைக்கும் சிற்பிகளில் ஒருவராக திகழந்தார்.
1964 அமெரிக்காவின் நியூயார்க்கில் முதல் சர்வதேச மகளிர் இன்ஜினியர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட அய்யல சோமையாஜுலு லலிதா அவர்கள் மட்டுமே. இந்திய பாரம்பரிய கலாச்சார உடையான சேலை உடுத்தி கொண்டு கம்பீரமாக அம்மாநாட்டினை தன் அறிவால் அலங்கரித்தார். அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் லலிதா “150 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தால், என் கணவரோடு சேர்ந்து தீயில் எரிந்திருப்பேன்.” என்று தான் கடந்த வந்த கடுமையான பாதையையும் பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.
லண்டனின் இன்ஸ்டிட்யூட் ஆப் எலக்ட்ரிக்கல் பொறியியல் துறையின் முழு நேர உறுப்பினர் ஆனார். நவீன இந்தியாவின் கட்டமைப்புகளில் மின்னாற்றலில் “வால்டேஜ்” என்பதை வரையறுத்தவர் லலிதா அம்மையார் மட்டுமே.
தன் வாழ்நாளின் இறுதி வரையில் தன் ஒரே மகளை தன் மைத்துனியின் துணையுடன் வளர்த்து ஆளாக்கி, தன் வாழ்நாள் முழுவதையும் இந்திய அறிவியல் துறையின் முன்னேற்றத்திற்காக செலவிட்ட தியாகி லலிதா அம்மையார் என்றால் மிகையல்ல.
சாதனைகளால் சரித்திர நாயகியாய் மிளிர்ந்த ல்லிதா அம்மையார் அவர்கள் 1979 ஆம் ஆண்டு மூளை அனீரிஸம் (மூளையின் இரத்த நாளம் வீக்கம்) நோயினால் இயற்கை எய்தினார்.
இன்றைய சமூக வலைதளங்களில் இளம் பெண்கள் பலரின் குத்தாட்டம், குதியாட்டம், அங்க அவயங்களை பொதுவெளியில் பந்தி வைப்பது, லிவிங் டு கெதர், இரட்டை அர்த்த பேச்சுகள், புகைப்பிடித்தல், மதுவிருந்து போன்றவற்றை தாங்கள் செய்கின்ற புரட்சியாகக் கருதும் பெண்கள் லலிதா அம்மையார் போன்ற அறிவியலாளர்களை முன்னுதாரணமாக கொண்டு தங்களுக்கு, தங்கள் குடும்பத்திற்கு, தாய்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
அய்யல சோமையாஜுலு லலிதா அம்மையாரைப்பற்றி சமீபத்தில் நான் கூட அறிந்து கொண்டேன். உடனே ஆர்வம் மிகுதியால் பொறியியல் படிக்கும் சில மாணவியர், ஒரு பெண் ஆசிரியர் போன்றோரைத் தொடர்பு கொண்டு கேட்டேன். உண்மையில் அவர்கள் யாருக்குமே லலிதா அம்மையாரைப்பற்றி துளிகூட தெரியவில்லை என்பது சோகமான உண்மை. அதற்கு காரணம், நம் பாட்த்திட்ட வடிவமைப்புகளின் லட்சணம் அப்படி. பெண்களுக்கான எத்தனை கல்லூரிகளில் லலிதா அம்மையாரைப்பற்றி விவரம் உள்ளது? எத்தனை மாணவிகளுக்கு அவரைப்பற்றித் தெரியும்?
சரி போகட்டும். இன்றைய திராவிட மாடல் அரசாங்கம் என்னதான் செய்கிறது?
கல்லூரி, பல்கலைக்கழகங்கள், அரசாங்க அளவில் விருதுகள் உண்டா? அந்த அம்மையாரின் பெயரை, மாணவ, மாணவியர் அறிந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டாரா? என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள்!
மத்தியில் ஆளும் மோடிஜியின் அரசங்கம் இவ்விஷயத்தை கவனத்திற் கொண்டு, பாரதியின் கனவை நினைவாக்கிய பெண் விஞ்ஞானி லலிதா அம்மையாரைப் பற்றி இளையதலைமுறையிடம் பிரகடனப் படுத்தி, அதன் மூலம் பெண்கள் நல்வழியில் அறிவார்ந்த பண்புகளுடன் தேசத்தின் பெருமைகளுக்கு மேலும் பெருமை சேர்க்க ஆவன செய்ய வேண்டும்.
மு.பழனிவாசன்