இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு கூட்டத்தின் முடிவுகளை இன்று வெளியிட்டுப் பேசிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, கடந்த நிதியாண்டில் (2025-26) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7.6% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது முந்தைய கணிப்பான 7.3 சதவீதத்தை விட அதிகமாகும். தற்போதைய புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் ஈரான் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவினாலும், வலுவான உள்நாட்டுத் தேவை மற்றும் உற்பத்தித் துறையின் எழுச்சி காரணமாக இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து மீள்திறனுடன் (Resilient) செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2026-27 நிதியாண்டிற்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.9% ஆக இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரெப்போ வட்டி விகிதத்தில் (Repo Rate) எந்த மாற்றமும் செய்யாமல் 5.25% என்ற அளவிலேயே ரிசர்வ் வங்கி தொடர்ந்து பராமரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
