Sunday, January 18, 2026
Homeகிளாசிக்நாடக காவலர் மனோகர் மறைந்த நாளின்று!

நாடக காவலர் மனோகர் மறைந்த நாளின்று!

நம் தமிழ் சினிமா உலகில் தனி சாதனைப் படைத்த எம்.ஜி.ஆருக்கு அமைந்ததைப்போல ஒரு வில்லன் கூட்டணி வேறு யாருக்கும் அமைந்ததில்லை .

எம்.என். நம்பியார், அசோகன், ஆர்.எஸ்.மனோகர் என்ற மும்மூர்த்திகள் இல்லாத எம்.ஜி.ஆர். படமேது?

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, அதன் பிறகு கதாநாயக அந்தஸ்துக்கு உயர்ந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் நாயகனாக அறிமுகமாகி பத்துப் பதினைந்து படங்களுக்குப் பிறகு வில்லன் பாத்திரங்கள் ஏற்று நடித்தவர் ஆர்.எஸ். மனோகர். அவர் சினிமாவில் வில்லன் என்றாலும் கூட அவர் நடத்தி வந்த நேஷனல் தியேட்டர்ஸ் மேடை நாடகங்களில் அவர்தான் ஹீரோ. அதிலும் இந்து புராணங்களில் தேடித்துருவி, எதிர்மறையான கதாபாத்திரங்களுக்கும் புதுப்பரிமாணம் கொடுத்து ஹீரோவாக்கி அந்தப் பாத்திரங்களில் பிரகாசித்தவர் அவர்.

மனோகரது இயற்பெயர் லட்சுமி நாராயணன். அவருடைய அப்பா போஸ்டல் டிப்பார்மெண்டில் வேலை பார்த்து வந்தார். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அவரது அப்பாவுக்கு ஒரு வருடம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரிக்கு மாற்றலானது. அங்கே இருந்தபோது நிறைய கன்னட, தெலுங்கு நாடகங்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பெல்லாரியில் இருந்த ராகவாச்சாரி ஷேக்ஸ்பியரது நாடகங்களை மேடையேற்றுவார். அவரது நடிப்பும், வசன உச்சரிப்பும்தான் மனோகருக்கு இன்ஸ்பிரேஷன்.

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, மனோகர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ.சமஸ்கிருதம் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ‘மிருச்சிகடிகா’ என்ற சமஸ்கிருத நாடகத்தில் கதாநாயகனாக நடிக்க சற்றும் எதிர்பாராத வகையில் வாய்ப்புக் கிடைத்தது.
எப்படி? ஹீரோவாக நடிக்க வேண்டிய மாணவனுக்கு திடீரென்று அம்மை போட்டுவிட, அவனால் நடிக்கமுடியாது போனது. நிலைமையை எப்படி சமாளிப்பது என்று சமஸ்கிருத பேராசிரியர் கையைப் பிசைந்து கொண்டு நின்றபோது மனோகர் “சார்! எனக்குக் கூட நடிக்க ஆர்வம் உண்டு. அந்த ரோலில் நானே நடிக்கிறேன்” என்று சொல்லி நடிக்க, எல்லோரும் மனோகரது நடிப்பைப் பாராட்டினர்.

அதன் பிறகு சுகுண விலாச சபாவில் தோட்டக்காரன் நாடகத்தில் நடித்தபோது, அவரது நடிப்பைப் பார்த்து பாராட்டியவர் நாடகத் தந்தையான பம்மல் சம்மந்த முதலியார்.ஆனாலும் படிப்பை முடித்துவிட்டு அப்பாவைப் போலவே தபால் இலாகாவில் வேலைக்குச் சேர்ந்தார் லட்சுமி நாராயணன். கானல் நீர் என்ற படத்தில், கோட்டு, சூட்டு அணிந்துகொண்டு ஒரு படித்த கதாநாயகன் ரோலில் நடிக்க பர்சனாலிடியான, உண்மையிலேயே பட்டதாரியான ஒரு இளைஞரைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அவர்களது சாய்ஸ் லட்சுமி நாராயணன். அவரிடம் சினிமாவுக்காக உங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்றபோது, தான் கல்லூரியில் மிருச்சிகடிகா சமஸ்கிருத நாடகத்தில் ஏற்று நடித்த கேரக்டர் பெயரையே வைத்துக் கொள்ள முடிவு செய்தார். அன்று முதல் லட்சுமி நாராயணன் ” மனோகர்” ஆனார்.

மத்திய அரசாங்க வேலையில் இருக்கும்போது, சினிமாவில் நடித்தததற்காக பணம் வாங்கிக்கொண்டால் பிரச்னை ஏதாவது வருமோ என்று மனோகர் பயப்பட, தயாரிப்பாளர் சம்பளத்துக்கு பதில் அன்பளிப்பாக ஒரு கார் வாங்கிக் கொடுத்துவிட்டார். அடுத்து தாய் உள்ளம் படத்திலும் ஹீரோ ரோல். அடுத்தடுத்து ஒரு டஜன் படங்களில் ஹீரோவாக நடித்தாலும், அடுத்து வந்ததெல்லாம் வில்லன் ரோல்கள்தான்.

ஆனாலும் “நான் சொந்தமாக நாடக்குழு ஆரம்பிக்கக் காரணம் டி.கே.எஸ். சகோதரர்கள்தான்” என்பார் மனோகர். அவர்களது நாடகங்களைப் பார்க்கும் மக்கள் நேரடியாக கைதட்டி ரசிப்பதைப் பார்த்து, சினிமா பணமும், புகழும் கொடுத்தாலும், நாடகத்தில் நடித்தால்தான் மக்களின் நேரடியான பாராட்டுக் கிடைக்கும் என்பதுதான் மனோகரை 1954ஆம் ஆண்டு குழந்தைகள் தினத்தன்று ‘நேஷனல் தியேட்டர்’ என்ற தன் நாடகக் குழுவை துவக்கத் தூண்டியது.

மனோகர் ஒரு பர்ஃபக்ஷனிஸ்ட். மேடையில் எல்லாம் துல்லியமாக நடக்க வேண்டும் என்பதற்காக செம்மையாகத் திட்டமிட்டு, கடுமையாக உழைப்பார். அவரது ஒவ்வொரு நாடகத்துக்கும் முப்பது நாட்கள் ரிகர்சல் நடக்கும். இதில் கடைசி பதினைந்து நாட்களில் தினம் மூன்று முறை மேக் அப், சீன், செட்டுடன் ரிகர்சல் நடக்கும். அரங்கேற்றத்துக்கு முன்பாக இப்படிச் செய்வதால்தான் துளியும் பிசகில்லாமல் அவரால் நாடகத்தை நடத்த முடிந்தது.

கோவையில் ஒரு திறந்த வெளி அரங்கில் மனோகரது காடக முத்தரையன் நாடகம் நடந்துகொண்டிருந்தபோது, பாதி நாடகத்தில் திடீரென கடும் மழை. மக்கள் கலைந்து ஆங்காங்கே மழைக்கு ஒதுங்கிக்கொண்டார்கள். ஒரு மணி நேரம் கழித்து மழை நின்ற பிறகு, திரண்டு வந்து நாடகத்தைத் தொடரும்படிக் கேட்டுக்கொள்ள, மனோகரும் நாடகத்தைத் தொடர்ந்தார்.

இத்தனைக்கும் சினிமா உலகில் பிசியாக இருந்தாலும், நாடகம் நடத்துவதில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் மனோகர். ஒரு சமயம், சேலத்தில் ஏழு நாட்கள் தொடர்ந்து நாடகம். அதே நேரம் சென்னையில் எம்.ஜி.ஆர்.பட ஷூட்டிங். மனோகர் எப்படி சமாளித்தார் தெரியுமா? தினமும் காலை ஏழு மணிக்குத் தொடங்கி பகல் 12 மணி வரை சென்னையில் ஷூட்டிங்கில் இருப்பார். அப்புறம் காரில் சேலத்துக்குப் புறப்படுவார். மாலை சேலம் போய்ச் சேர்ந்து, நாடகத்தில் நடித்துவிட்டு, இரவே சேலத்திலிருந்து மறுபடி புறப்பட்டு காலையில் சென்னை!

2006ல் நிமோனியா வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இதே ஜனவரி 10ல் காலமாகி விட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments