அமெரிக்காவில் சாம்சங் அறிமுகப்படுத்திய புதிய கிரெடிட் கார்டு… வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான கேஷ்பேக் சலுகைகள்!
உலகின் முன்னணி மின்னணு சாதன உற்பத்தி நிறுவனமான Samsung, அமெரிக்காவில் தனது முதல் Samsung Galaxy Card கிரெடிட் கார்டை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முயற்சி மூலம், ஸ்மார்ட்போன், டிவி, வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட சாம்சங் தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வழங்கப்பட உள்ளது.
இந்த Samsung Galaxy Card-ஐ Barclays வங்கி வெளியிடுகிறது. இது Visa நெட்வொர்க்கில் செயல்படும். மேலும், இந்த கார்டு Samsung Wallet உடன் நேரடியாக இணைக்கப்பட்டிருப்பதால், விண்ணப்பிப்பது முதல் செலவுகளை கண்காணிப்பது, ரிவார்டுகளை பெறுவது வரை அனைத்தையும் மொபைல் மூலம் எளிதாக மேற்கொள்ளலாம்.
சாம்சங் தயாரிப்புகளை நேரடியாக வாங்கும் போது 5% Cash Rewards வழங்கப்படும். அதேபோல், Samsung Walletமூலம் செய்யப்படும் தகுதியான பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் ரிவார்டுகளும், குறிப்பிட்ட பிரிவுகளுக்கான செலவுகளுக்கு தனித்தனி கேஷ்பேக் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சில அறிக்கைகளின்படி, ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு 2% மற்றும் பிற அனைத்து செலவுகளுக்கும் 1% கேஷ்பேக் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கார்டிற்கு வருடாந்திர கட்டணம் (Annual Fee) இல்லை என்பதும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் ஈர்ப்பாக உள்ளது. மேலும், புதிய கார்டுதாரர்களுக்கு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலவிட்டால் வரவேற்பு போனஸ் (Welcome Bonus) உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய Apple Card-க்கு போட்டியாகவே சாம்சங் இந்த புதிய கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் தனது டிஜிட்டல் வாலெட் சேவையையும், வாடிக்கையாளர் விசுவாசத்தையும் மேலும் வலுப்படுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய முயற்சி அமெரிக்க சந்தையில் சாம்சங்கின் நிதிசார் சேவைகளை விரிவுபடுத்தும் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் கிரெடிட் கார்டைத் தாண்டி மேலும் பல நிதி சேவைகளையும் அறிமுகப்படுத்தும் திட்டம் நிறுவனத்திடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
