Home Uncategorized கண்ணீரில் வேறுபாடு- சிறப்பு கட்டுரை!

கண்ணீரில் வேறுபாடு- சிறப்பு கட்டுரை!

உண்மையிலேயே கஞ்சா கேஸில் பிடிபட்ட தன் மகனை “நிரபராதி”என்று வெளியே விடச்சொல்லி உறவினர்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தாய்!

குடிகார மகனை அனுசரித்து போகச்சொல்லி மருமகள் மீது தாக்குதல் நடத்திய அவன் தாய்!

தான் பெற்ற இரு பெண்குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய தாய்!

மகளின் கண்முன்னே வேறொருவருடன் சரசமாடிய தாய்!

தன் மகனை அடித்துக்கண்டித்த ஆசிரியரை அடிக்கப்பாய்ந்த தாய்! 

மேலே சொல்லப்பட்ட தாய்மார்களின் கதைகள் தினமும் அச்சு ஊடகங்கள், காணொலி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் அனைத்திலும் தினமும் பார்த்துப் பார்த்து சலித்துப்போன மனதிற்கு இன்று ரம்யமான தென்றல்போல ஒரு செய்தியைப் பார்க்க வாய்ப்பு கிட்டியது!

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் 18 நாள்கள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டவர் நம் இந்தியாவைச் சேர்ந்த “சுபான்ஷு சுக்லா!” அவருக்கு இடப்பட்ட கட்டளைகளைப் பின்பற்றி வெற்றிகரமான ஆய்வினை முடித்து பூமிக்கு திரும்பும் தருணம்!  

பூமியிலிருந்து நானூறாவது கிலோ மீட்டரில், அமைந்திருக்கும் அந்த நிலையத்திலிருந்து டிராகன் விண்கலத்தில் புறப்பட்டாயிற்று. சுமார் 22 மணி நேரப்பயணம். பூமிக்குத் திரும்பும்போது 22000 கிலோமீட்டர் வேகத்தில் பயணம்! 

அதேவேளையில் இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் நேரலை கண்காணிப்பில் விஞ்ஞானிகளுடன் சுபான்ஷு சுக்லாவின் தாய், தந்தை மற்றும் நெருங்கிய சிலர் காத்திருக்கின்றனர்.  

அதிவேகமாக வரும் விண்கலம் புவியீர்ப்பு விசைப்பகுதிக்குள் நுழைகிறது. உச்சபட்ச வெப்பம் தகிக்கிறது. சில நிமிடங்கள் அனைவர் முகத்திலும் பீதி.. இனி நடக்க இருப்பது நல்லதாக நடக்க வேண்டுமே.. 

அந்த திக்..திக்.. நிமிடங்களின்போது சுபான்ஷு சுக்லாவின் தாய், தந்தையர் தொலைக்காட்சியில் தெரிகிறார்கள். அவர்கள் இருவரின் கைகளிலும் நம் தேசியக்கொடி இடைவிடாமல் அசைத்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விண்கலம் கடலில் தரையிறங்கும்போது அந்த தாய் தன் பிள்ளைப்பாச உந்துதல் மிகுந்ததால் தன் கணவரின் தோள்மீது சாய்கிறார். கண்ணீர் பெருக்கெடுக்கிறது.  

எதிர்பார்த்தபடி விண்கலம் பசிபிக் பெருங்கடலில் பத்திரமாக வந்திறங்குகிறது! 

அது கடல் தண்ணீரைத்தொட்டதும் சுபான்ஷுவின் தாய் தன் இருகரங்களைக் குவித்து கண்ணீர் மல்க மானசீகமாக இறைவனுக்கு தன் நன்றியை சமர்ப்பித்துக்கொண்டே நேரலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருடன் சுபான்ஷுவின் தந்தை தன் பரிதவிப்பைக் காட்டிக்கொள்ளாமல், கண்ணீரும் சிந்தாமல், அருகில் இருப்போருடன் இயல்பாக பேசவும் முடியாமல், நேரலையில் வைத்த கண்களை சற்றும் விலக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் கண்ணிமைகள் இமைப்பதைக்கூட காண முடியவில்லை. அந்த அளவிற்கு அவர் தன்னை முழுமையாக மறந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்!

இந்தக்கட்டுரையின் முதல் ஐந்து வரிகளில் சொல்லப்பட்டுள்ளவர்களும் தாய்மார்கள்தான்! 

சுபான்ஷு சுக்லாவின் தாயும் தாய்தான்! 

இரண்டிற்குமிடையே எத்தனை வேறுபாடுகள்! 

அவரின் உணர்ச்சிப்பெருக்கை கண்டபோது அவரையும் நம் தேசத்தையும்  எண்ணி பெருமையின் உத்வேகத்தால் என் கடைக்கண்களிலும் கண்ணீர் எட்டிப்பார்த்தது.  

ஒரு தேசத்தின் மனித சமூகத்தில் காணப்படும் இந்த வேறுபாடு மனதில் பல விஷயங்களைத் தட்டி எழுப்பியது. 

நம் சங்ககால தமிழ் அறத்தை, வீரத்தை படம்பிடித்துக்காட்டும் புறநானூற்றுப் பாடலில், போரில் தன் ஒரே மகனை இழந்த ஒரு தாய் ஒப்பார் வைத்து அழுகிறாள். அவளுக்கு ஆறுதல் சொல்லப்படும்போது, ”ஐயோ.. எனக்கு இன்னும் ஒரு மகன் இல்லாமல் போய்விட்டானே..  இனி நாட்டைக் காக்க என் சார்பில் யாரையும் அனுப்ப முடியாதே..”என்று விம்மி வெடிக்கிறாள்! இப்படிப்பட்ட தமிழ் மண்ணில் இன்று எத்தனை ஒழுக்கக்கேடுகள்! பொறுப்பற்ற செயல்கள்! கீழடி அகழாய்வு, கொந்தகை ஆழாய்வு என்றெல்லாம் பழம்பெருமை பேசிக்கொண்டு இருக்கிறோமே தவிர, அக்காலத்தைய பண்பட்ட நாகரீக வாழ்க்கையை நாம் வாழ்கிறோமா? என்றால் இல்லவே இல்லை. 

உலகம் எவ்வளவோ முன்னேறிக்கொண்டிருக்கிறது! “பாம்புகளின் தேசம்” என்று நையாண்டி செய்யப்பட்ட நம் தேசம் எவ்வளவுதூரம் அரும்பாடுபட்டு, சந்திரனின் தென்பகுதியில் ராக்கெட்டை வெற்றிகரமாக இறக்கியுள்ளது! அடுத்து சந்திரனில் ஒரு இந்தியனின் காலடிச்சுவடுகளைப் பதிக்க சுபான்ஷு சுக்லாவின் வெற்றிகரமான விண்வெளிப்பயணம் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது என்றால் மிகையில்லை!

தொலைக்காட்சித்தொடர்களின் கிளிசரின் கண்ணீர்விடும் நம் தாய்மார்கள், தொலைக்காட்சியில் நடத்தப்படும் குத்தாட்ட நிகழ்ச்சியில் தங்கள் பாலின வயதிற்கு மீறிய வகையில் குழந்தைகளை ஆடவைத்து ஆனந்தக்கன்ணீர் சிந்தும் தாய்மார்கள்! பாடல் பாடும் போட்டியில் பல நிலைகளைக்கடந்து வெற்றி ஈட்ட வேண்டுமென வெறித்தனமாக உழைக்கும் தாய்மார்கள், அடுத்த வீட்டுக் குழந்தையைவிட தன் குழந்தை அதிக மதிப்பெண்கள் எடுக்கவில்லையே என அங்கலாய்த்து அழும் தாய்மார்கள், இப்படி எத்தனையோ தாய்மார்களைப் பார்த்து வருகிறோம்!

 அந்த தாய்மார்களின் கன்ணீர் வெள்ளம், சுபான்ஷு சுக்லாவின் தாயாருடைய ஒரு சிறு துளிக்கண்ணீருக்கு ஈடாகுமா! 

போக்குவரத்து நெருக்கடியான ஒரு சாலையில் ஒரு இளம்பெண் ப்ளூடூத் மாட்டிக்கொண்டு, மொபைலில் ரீல்ஸ் பார்த்துக்கொண்டே தன் குழந்தையின் கையைப் பிடித்துக்கொள்ளாமலே நடத்திச் செல்கிறார். குழந்தை கால்தடுக்கி கீழே விழுந்துவிட்டது. போவோர் வருவோர் பலரும் கத்தியபின் சுதாரித்து குழந்தையைத் தூக்கிவிட்டு அதன் கால் தொடையைக் கிள்ளுகிறார். நானே நேரில் பார்த்த துயரம் இது.   

ஏனென்றால் எது சாதனை? எது வாழ்வின் அத்தியாவசியம்? என்பது குறித்த அகலமான சிந்தனை இன்று அருகிவிட்டது. இந்த நிலை மிகவும் ஆபத்தான விஷயம்! ஒவ்வொரு குடும்பமும் தங்கள் குழந்தை வளர்ப்பு முறைகளைக் குறித்து தங்களைத் தாங்களே”ஆத்ம பரிசோதனை” செய்துகொள்ள வேண்டும். ஓடி ஓடி பணம் சேர்த்து குழந்தைகளுக்காக செலவிட்டால் மட்டும் போதாது. அது விழலுக்கு இறைத்த நீர் போல்தான். பயிர் கெட்டபின்னே பரிதவித்து என்ன பயன்? 

வளமான, வல்லமையான தேசத்தைக் கட்டமைக்க வெறுமனே கல்வியறிவும் பொருளாதார பலமும் மட்டும் போதாது. இளைய தலைமுறைக்கு பண்பட்ட, தூய்மையான வாழ்வியல் தேவை. அதை ஒழுக்கமும், உயரிய நோக்கமும் கொண்ட தாய்மார்களின் பங்களிப்பே வேர். அப்போதுதான் தேசம் புகழ்பெறும். தாய்மையும் பெருமையுறும்.

மு.பழனிவாசன்

    

Exit mobile version