கதை ஆசிரியர்களின் நிலை குறித்து ஆலோசனை வழங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இணையவும் சம்மதம்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் சேரன் தலைமையில், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் R. சுந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், தமிழ் திரையுலகின் முன்னணி ஆளுமையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது ரஜினிகாந்தை சந்தித்து தங்களது வாழ்த்துகளையும், ஆசிகளையும் பெற்றனர்.
மேலும், இன்றைய சூழலில் திரைப்படக் கதை ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் நிலை குறித்து ரஜினிகாந்துடன் கலந்துரையாடப்பட்டது. கதை ஆசிரியர்களின் பிரச்சினைகளை அனைத்து தரப்பினருடனும் சுமூகமாகப் பேசி, அனைவருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் அவர் ஆலோசனைகளை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் திரையுலகில் நடிகராக மட்டுமின்றி, ‘வள்ளி’, ‘பாபா’ உள்ளிட்ட திரைப்படங்களில் கதையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இதனை கருத்தில் கொண்டு, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணையுமாறு சங்க நிர்வாகிகள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
சங்க நிர்வாகிகளின் இந்தக் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இணைய சம்மதம் தெரிவித்துள்ளார்.
நேரம் ஒதுக்கி தங்களுடன் கலந்துரையாடி, கதை ஆசிரியர்களின் நலன் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கிய ரஜினிகாந்துக்கு சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துவிட்டு விடைபெற்றனர்.
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த், திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைய சம்மதித்திருப்பது, சங்க நிர்வாகிகள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.