Home Uncategorized திருமணத்தடை நீக்கும் தஞ்சையின் காளஹஸ்தீஸ்வரர் !

திருமணத்தடை நீக்கும் தஞ்சையின் காளஹஸ்தீஸ்வரர் !

ராகு-கேது பரிகாரத்தலம் என்றாலே ஆந்திர மாநிலம் காளஹஸ்திதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அதற்கு நிகரான ஒரு பரிகாரத்தலம் ஒன்று தஞ்சையிலும் உண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

    இராஜராஜசோழன் தனது ஆயுட்காலத்திலேயே எழுப்பிய திருக் கோயில் இது! அதன் பின்னர் மராட்டிய மன்னர்களின் புனரமைப்புப் பணிகளால் பொலிவுற்றது.

    தஞ்சை நகரிலிருந்து சுமார் 8 ஆவது கிலோ மீட்டரிலும், புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயிலில் இருந்து சுமார் 3 ஆவது கிலோ மீட்டரிலும் உள்ள “கத்திரி நத்தம்” என்னும் அழகிய கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

முற்காலத்தில் சப்த ரிஷிகள் இங்கே சிவனை வழிபட்டு நற்கதி பெற்றதால் இவ்வூர் “சப்தரிஷிகள் நத்தம்” என்கிற பெயர்பெற்று, காலப்போக்கில் மருவி “கத்திரிநத்தம்” என்றானதாம்!

    அமைதியான சூழலில் ஒரு திருக்குளம் இருக்க, அதன் நேர் எதிரே ராஜகோபுரமோ, கொடிமரமோ இன்றி கம்பீரமான விமானத்தின் கீழ் “காளஹஸ்தீஸ்வரர்” லிங்கத்திருமேனி கொண்டு எழுந்தருள்கிறார்.

    தனித்த சன்னதியில் அன்னை சக்தி தேவி ஞானாம்பிகை என்னும் பெயருடன் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறாள். 

spiritual

வேண்டுதலின் வலிமை:

    ”சோமவாரம்” எனப்படும் திங்கட்கிழமை காலை ராகுகால நேரம் தொடங்கும் காலை 7.30 மணிக்கெல்லாம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருகையால் இத்திருக்கோயில் களைகட்டத் தொடங்கிவிடுகிறது. ராகு-கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஜாதகக்குறிப்பு அல்லது ஜாதகப் புத்தகத்துடன் நவக்கிரக சன்னதியில் ஆஜராகிறார்கள். அப்போது அர்ச்சனைத் தட்டுடன் தங்கள் ஜாதகத்தையும் வைத்து வழிபாடுசெய்து விளக்கேற்றுகிறார்கள். அதன் பின்னர் தங்கள் ஜாதகத்தைப் பெற்றுக்கொண்டு கருவறையில் கம்பீரமாக காட்சிதரும் “காளஹஸ்தீஸ்வரர்” சன்னதியில் மனமுருக வழிபாடு செய்து தங்கள் வேண்டுதலை சமர்ப்பிக்கிறார்கள். அதன்பின் தொடர்ந்து 10 வாரங்கள் திருக்கோயிலுக்கு வருகைதந்து வழிபாடு செய்கிறார்கள். அதன்பின் 11  ஆவது வாரம் முதல்வாரத்தில் செய்ததுபோல் மீண்டும் தங்கள் ஜாதகத்துடன் வந்து வேண்டிக்கொள்கிறார்கள்!

    இவ்வாறு செய்வதன்மூலம் ராகு-கேது தோஷத்தால் திருமணத் தடை, குழந்தை பாக்கியம் கிட்டாதவர்கள் என அனைவரும் தங்கள் வேண்டுதலுக்கு நற்பலன் பெறுவர் என்பது கண்கூடான உண்மை என்கிறார்கள். மேலும் பல்வேறு விஷயங்களில் காரியத்தடையால் மனம் சோர்ந்து போனவர்களுக்கு உள்ளங்கை நெல்லியாய் அருள்மிக் காளஹஸ்தீஸ்வரர் விளங்குவதாக அவர் அருளைப்பெற்றவர்கள் மெய்சிலிர்க்க கூறுகிறார்கள்.

    மிகவும் புராதனமான இத்திருக்கோயிலுக்கு விரைவில் குட முழுக்கு செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்பது ஆன்மீக உணர்வாளர்களுக்கு நற்செய்தி!

    அனைவருக்கும் தஞ்சை காளஹஸ்தீஸ்வரர் பேரருள் புரியட்டும்!

                                மு.பழனிவாசன்

Exit mobile version