கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன் தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச் சிறு பேரழைத்தனவும் சீறி யருளாதே இறைவா! நீ தாராய் ]#பறையேலோ_ரெம்பாவாய்… !!!
பொருளுரை:- பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்டு உடல் வளர்ப்பவர்களும், ஞானமிலாத சொற்ப அறிவு படைத்தவர்களும் ஆன நாங்கள், எங்கள் (ஆயர்) குலத்தவனாக உன்னைப் பெற்றடைய பெரும் புண்ணியத்தைச் செய்துள்ளோம். யாதொரு குறையும் இல்லாத ‘கோவிந்தன்’ என்னும் பெயரினைக் கொண்ட கண்ணபிரானே!
உன்னுடன் நாங்கள் கொண்டுள்ள உறவை யாராலும் எக்காலத்திலும் பிரிக்க முடியாது. அற்ப அறிவுடைய, சூதுவாது தெரியாத சிறுமியரான நாங்கள், உன்னிடம் கொண்டுள்ள மிகுந்த அன்பினால் உன்னை (நாராயணன், மாயன், மாதவன் போன்ற பெயர்களிட்டு) ஒருமையில் அழைத்தமைக்கு கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் வேண்டி வந்த பொருட்களை நீ தந்தருள்வாயாக !
