இன்றைய ஜனநாயக காலத்தில், அநேகமாக இந்தியாவில் உள்ள எந்த ஒரு மதத்தைச் சேர்ந்த வழிபாட்டுத்தலங்களிலும் நம் பாரத நாட்டின் தேசியக்கொடி ஏற்றப்படுவதில்லை. ஆனால், ஒரே ஒரு பிரமாண்டமான இந்து ஆலயத்தில் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது.
அது எந்த திருக்கோயில்?
இன்று “சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்” என்றழைக்கப்படும் கோயில்தான்.
தேவார காலத்தில் இதன்பெயர் சிதம்பரம் என்று கிடையாது. அப்போது “தில்லை” என்றே அழைக்கப்பட்டது.
இந்த தில்லைக்கோயில் யாருக்குச்சொந்தம்? என்கிற பிரச்சினையானது அப்போதைய அரசுக்கும் அக்கோயிலை நிர்வகித்து வந்த தீட்சதர்களுக்கும் இடையே ஏற்பட்டது. இது குறித்து வழக்கு ஒன்று 1870 களில் கடலூர் முன்சீப் கோர்ட்டுக்கு வந்தது. தில்லைவாழ் அந்தணர்கள் தரப்பின் சாட்சியத்தைக்கேட்க, அவர்கள் 15 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பாடல் ஒன்றைத் தந்துள்ளனர். அந்த ஒரே ஒரு பாடலில் காட்டப்பட்ட ஆதாரதத்தை ஏற்று ”தில்லைக்கோயில்” தீட்சதர்களே கோயிலை நிர்வகிக்க கோர்ட் உத்தரவிட்டது.
அந்தப்பாடலின் பண், தாளக்கட்டு, அழ்ந்த பொருள், தனித்துவமான தமிழ்நடை ஆகிய அனைத்தும் அந்த கோர்ட்டின் நீதிபதி, வடக்குப்பட்டி த. சுப்ரமணியம் பிள்ளை அவர்களை வெகுவாக ஈர்த்தது. அதன் இனிமையில் சொக்கிப்போனார்.
அது என்ன பாடல்? , யார் ஆசிரியர் ?, மொத்தம் எத்தனைப் பாடல்கள்? என்றெல்லாம் கேட்க,
அதற்கு அந்த தீட்சதர்கள் “ஐயா 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாத சுவாமிகள் எழுதிய ”திருப்புகழ்” என்கிற நூல். சுமார் பதினாறாயிரம் பாடல்கள்: என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், எங்களிடம் இப்போது உள்ளவை வெறும் நான்கு பாடல்களே”. என்றனர்.
அவ்வளவுதான். நீதிபதி வடக்குப்பட்டி த. சுப்ரமணியம் பிள்ளை தன் பதவியை உடனடியாக இராஜினாமா செய்தார். தன் முழுநேரப்பணியாக “திருப்புகழ்” பாடல்களை முழுமையாக எப்படியாவது தேடிப்பிடித்து, பதிப்பிக்க வேண்டுமென ஆவல் கொண்டார்.
ஊர் ஊராகச் சென்றார். வீடு வீடாகச் சென்றார். பல்வேறு பண்டிதர்களைச் சந்தித்தார். ஆதீனங்கள், ஆசிரமங்கள், குருகுலங்கள், கோவில்கள்” என சுற்றி அலைந்தார். அதன் விளைவாக அவருக்கு அவருக்கு சுமார் ஆயிரம் பாடல்கள் கிடைத்தன. சுமார் 24 ஆண்டுகள் உழைப்பிற்குப்பின் அச்சுப்பிரதியாக பதிப்பித்து, ஒரு நூல் வெளியிட்டார். அதன்பின்னரே பொதுமக்கள் அனைவருக்கும் அருணகிரிநாதரின் “திருப்புகழ்” நூலைப்பற்றி தெரியவந்தது.
அதன் பின்னர் வடக்குப்பட்டி த. சுப்ரமணியம் பிள்ளை அவர்களின் மகனும், 90 வயதுவரை வாழ்ந்தவருமான “செங்கல்வராயன் பிள்ளை” என்பவர் தொடர்ந்து திருப்புகழ் பாடல்களைத்தேடி அலைந்து, சரிபார்த்து 1300 பாடல்களாக தொகுத்து, பதிப்பித்து நூலாக வெளியிட்டார்.
அப்பழுக்கற்ற ஆன்மீகவாதியாகவும், தமிழ்ப்பற்றாளராகவும் வாழ்ந்த வடக்குப்பட்டி த. சுப்ரமணியம் பிள்ளை அவர்களின் குலதெய்வம் திருத்தணி முருகன்.
திருப்புகழ் பாடல்களைத்தொகுத்து நூலாக முதன்முதலில் பதிப்பித்த, சுப்ரமணிய பிள்ளை அவர்கள் ஏப்ரல் 17, 1909-ல் மாரடைப்பால் காலமானார். அவர் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவில் ராஜகோபுரத்தை நோக்கியவாறு அமைக்கப்பட்டு, நந்தியும் லிங்கமும் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இப்படியெல்லாம் தங்கள் கைப்பொருள், வாழ்நாள் ஆகியவற்றை தமிழுக்காகவும், தமிழ்மக்களின் அறிவு வளத்திற்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர்களை சாதிபேதம், பகுத்தறிவு, தமிழ்தேசியம் என்கிற பெயரால் இழிவுபடுத்தி, வசைபாடி, பகுத்தறிவு என்னும் பெயரால் பண்பற்ற வாழ்க்கைப்பாதையில் பயணிக்கும் தமிழனால் தமிழகத்திற்கு என்ன பயன்?
