Home Uncategorized தமிழ்நாட்டில் 6180 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு – அமைச்சர் பி.கே. சேகர்பாபு

தமிழ்நாட்டில் 6180 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு – அமைச்சர் பி.கே. சேகர்பாபு

சென்னை மதுரவாயல் மரகதவல்லி சமேத மார்க்க சகாய ஈஸ்வரர் கோயிலில் ரூ.73.76 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.39.58 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கோயில் அலுவலகம், மடப்பள்ளி, தரைத்தளம் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
 இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும் புதிதாக கட்டப்பட்ட கோயில் அலுவலகம், மடப்பள்ளி மற்றும் தரைத்தளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது : 
இந்த கோயிலில் 12 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட திருப்பணி கடந்த ஆண்டு முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
தமிழ்நாட்டில் 6180 ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்பட்டு உள்ளது.
கோயில் இடங்கள் அளவீடு செய்து 1,60,190 ஏக்கர் கண்டறியப்பட்டு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. 
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி கம்பீர தோற்றத்துடன் நடந்து கொண்டிருக்கிறது . அதே போல் கம்பீரமாக இந்த கோயிலுக்கு உபயதாரர்கள் உதவியுடன் ரூ.1.35 கோடி மதிப்பில் ராஜகோபுரம் அமைக்கப்படும். 

மயிலாப்பூர் கோயில் வெளியே நடந்த சம்பவம் ஏற்று கொள்ள முடியாத சம்பவம் தான். கோயில் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. யார் தவறு செய்தாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தீவிரவாத செயலாகவோ, எதேச்சையாக நடந்த செயலாக பார்க்கவில்லை. திருவேற்காடு கோயிலில் நகை திருட்டு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி, அறநிலையத்துறை இணை ஆணையர் ரேணுகாதேவி வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் நொளம்பூர் ராஜன் கோயில் செயல் அலுவலர் அன்புக்கரசன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version