Home செய்திகள் தமிழகத்திற்கு மாபெரும் நிதி வெட்டு? வேலைவாய்ப்பு நிதியில் அதிர்ச்சி!

தமிழகத்திற்கு மாபெரும் நிதி வெட்டு? வேலைவாய்ப்பு நிதியில் அதிர்ச்சி!

மத்திய அரசால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய ‘விபி-ஜி ராம் ஜி’ (VB-G RAM G Act) சட்ட வரைவுத் திட்டத்தால், தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டில் மாபெரும் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கிடைத்த விவரங்களின்படி, வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ள இப்புதிய திட்டத்தில், 16-ஆவது நிதி ஆணையத்தின் மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பு), தனிநபர் வருமானம் (GSDP) மற்றும் மக்கள் தொகையியல் செயல்பாடு போன்ற புதிய அளவுகோல்களின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது;

இதனால் தமிழ்நாட்டிற்கு இதுவரை கிடைத்து வந்த தேசிய நிதிப் பங்கான 9.97 விழுக்காடானது, அதிரடியாக 4.10 விழுக்காடாகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த 2014 முதல் இத்திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி, 87,639 கோடி ரூபாய் நிதியைப் பெற்றுப் பயனடைந்த முக்கிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிற்கு, மொத்த மத்தியப் பங்கான 95,692 கோடி ரூபாயில் இனி வெறும் 3,923 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும் என அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். வேலைவாய்ப்புத் திட்டத்தின் அடிப்படை நோக்கமே மக்களின் உண்மையான வேலைத் தேவையைப் பொறுத்து நிதி வழங்குவதுதான் என்ற நிலையில், தற்போது மாநில வாரியாக முன்கூட்டியே நிதியைத் தீர்மானிக்கும் இந்த புதிய முறையானது சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களைத் தண்டிப்பது போல் அமைந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டைப் போலவே ஆந்திரா (8.80%-லிருந்து 4.20%), கேரளா (3.94%-லிருந்து 2.38%), தெலங்கானா (3.94%-லிருந்து 2.17%) போன்ற இதர தென்னக மாநிலங்களும் 30% முதல் 40% வரை கடுமையான நிதி இழப்பைச் சந்திக்கவிருக்கிறது. ஆக., மக்கள் தொகை அதிகம் உள்ள வட மாநிலங்களுக்கு மட்டுமே சாதகமாக அமையும் இப்புதிய வழிகாட்டுதல்களுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உடனடியாக மத்திய அரசிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்று தகுந்த அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.

Exit mobile version