தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள், அரசு சார்பில் வசூலிக்கப்படும் அனைத்து வகையான கட்டணங்களையும் இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதனன் ரெட்டி அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில், கட்டிட அனுமதி சார்ந்த விண்ணப்பங்களில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட சொத்து உரிமையாளர்களை நேரில் வரவழைக்க வேண்டும் என்றும், மாறாக ஆர்க்கிடெக்ட், ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர் அல்லது வேறு எந்தவொரு மூன்றாவது நபர்களையும் அலுவலகங்களுக்கு அழைத்து வரக் கூடாது என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்டிட அனுமதி தொடர்பான அனைத்துப் பணிகளையும் எவ்விதத் தொய்வுமின்றி ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசின் புதிய அறிவுறுத்தலின்படி தகுதியான கட்டுமானப் பணிகளுக்கு எவ்விதத் தாமதமும் இன்றி உடனுக்குடன் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்;
பொதுமக்களுக்கு வெளிப்படையான, லஞ்சமற்ற மற்றும் எளிமையான சேவையை உறுதி செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள அரசின் இந்த உத்தரவை முறையாகப் பின்பற்றாத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த எச்சரிக்கை கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
