”டேய் அஸ்வின்… உனக்கு கொஞ்சமாவது சென்ஸ் இருக்கா?”
“போடா… ஸ்டுபிட் மாறி பேசாத”
“நான் குமாரோட ஒரு கெட் டூ கெதர் போறேன். நாளைக்கு நைட்டுதான் வருவேன். இ மிஸ் யூடா… டேக் கேர்டா”
இதெல்லாம் யார் பேசியது?
இன்றைய நவநாகரீக இளம்வயது “திருமதி” தன் கணவனிடம் பேசியவை.
”ஏய் சுதா… ஆல்வேய்ஸ் யூ ஆர் டார்ச்சரிங் மீ? … உன்னை உன் புருஷன் என்னண்ணே கேட்கமாட்டானா?”
“உனக்கு எத்தனை தடவை சொல்றது… சே… மூஞ்சப்பாரு…”
இன்றைய இளைஞன் தன் அம்மாவிடம் பேசியவை.
இதெல்லாம் வெறும் சாம்பிள்தாங்க. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டுலேயும் இதுபோன்ற உரையாடல்தான் நடக்கிறது.
ஒருகாலத்தில் உரையாடல்களின்போது “ங்க” என சேர்த்து ”அவங்க வருவாங்க, நான் போயிட்டு வர்றேங்க, நல்லா சாப்பிடுங்க, நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க” என்றெல்லாம் பேசுவதுதான் வழக்கம். அது ஒரு மரபு. அதுவே மரியாதைக்குரிய வார்த்தைகள். ஆனால், இன்றைய நிலையில் எல்லாம் தலைகீழாகி விட்டது. இருவர் பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் அருகில் இருப்பவர்களுக்கே “யார் யாருடன் பேசுகிறார்கள்?” என்று பிடிபடுவதில்லை.
என் தூரத்து உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கே அவரது மகள் “உனக்கு எப்பவும் இதே வேலையாப்போச்சு.. நான் டாடிக்கிட்ட பேசிக்கிறேன்” என்று எதற்காகவோ கத்திக்கொண்டிருந்தாள். சுமார் 1 ½ நிமிட உரையாடலுக்கிடையில் அந்த மகள் தன்னைப்பெற்றவளை “அம்மா” என்று அழைக்கவேயில்லை. அது மட்டுமில்லை …”டாடி”, ”அந்த பொறுக்கி”, என்றெல்லாம் வார்த்தைகள் உதிர்க்கப்பட்டன.
அந்த பெண் தற்செயலாக நான் வந்ததை கவனித்தாள். உடனே என்னைப்பார்த்து ”ஹாய் அங்கிள்…”என்று சிறுமுறுவலுடன் கூறிவிட்டு அலைபேசியில் ஏதோ தேடியபடியே சென்று விட்டாள். உண்மையில் நான் அந்த பெண்ணுக்கு “ஒன்று விட்ட சித்தப்பா முறை!”. ஆக, நம் கலாச்சாரத்தில் உறவுமுறைகளுக்கான பெயர்க்காரண விவரங்கள் எதுவுமே இந்த தலைமுறைக்கு தெரியாமல் போய்விட்டது. ஆனால் பாருங்கள்… சமூக வலைதளங்களில் “நாங்க தமிழண்டா…” என கம்பு சுற்றுகிறார்கள்.
இதுவரை உறவுமுறைகளை அழைக்கும்போது ”வாங்க, போங்க, உட்காருங்க, சாப்பிடுங்க, போயிட்டு வாங்க” என்றெல்லாம் மரியாதைக்குரிய வார்த்தைகளாகவும், ஒரு பண்பார்ந்த முறையாகவும் இதுவரை தமிழ்ச்சமூகம் கருதி வந்ததோ … அவையெல்லாம் இன்று ஏளனமாக கருதும் நிலை வந்து விட்டது. இது அறியமையா? அலட்சியமா? என்று புரியவில்லை. ஆனால், கலாச்சார சிதைவு, மொழியறிவு அற்றுப்போகுதல், பாரம்பரியப்பெருமைகள் என எதையுமே அக்கறை கொண்டு அணுகாத மனோபாவம் மட்டுமே தலைதூக்கி நிற்கின்றன என்பது மட்டும் உண்மை.
தான் வணங்கும் இறைவனை, புலவனை, மாண்புமிகுந்த பெரியோர்களை பெருமையுடன் குறிப்பிடும்போது தோழமை உணர்வுடன் “அவன், இவன்” என்ற்%எல்லாம் சொல்வதுண்டு. ஆனால், அது பாசத்தின் உச்சமாகவே இருக்கும். ஆனால் தற்போது எல்லோரையும் மிகச்சாதாரணமாக குறிப்பிடுவது, மிகவும் சர்வசாதாரணமான விஷயமாகிப்போனது.
ஒரு பெண் தன் கணவர், குழந்தைகள், தோழிகள், தன் வீட்டுப் பணியாளர்கள், பொதுசுகாதாரப் பணியாளர்கள், இன்னும் பொதுவெளியில் சந்திக்கும் நபர்கள் என அனைவரையும்”நீ, வா, போ” என “ஒருமையில்” விளிக்கின்றனர். அவரவர்க்குரிய மதிப்போ, மரியாதையோ தரப்படுவதில்லை.
சரி… இவற்றால் என்ன ஆகிவிடப்போகிறது? சக மனிதர்களிடையே மதிப்புமிகுந்த வார்த்தைகளை பரிமாறிக்கொள்ளாமல் போவதால், அவரவர் பற்றிய முக்கியத்துவம் தெரியாமல் போகிறது. அவர்களுக்குள் ஒரு பிணைப்பு அற்றுப்போகிறது. வாழ்க்கை வெறுமையுறுகிறது.
மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், கட்டுரைகள், புதினங்கள் போன்றவற்றால் மட்டுமே ஒரு செம்மொழி உயிர்ப்போடு இருந்துவிடாது. அம்மொழியினைக்கையாளும் சமூகம் தன் அன்றாட வாழ்வில் அம்மொழியின் மாண்புகள் குறைந்துவிடாமல், வளமான பாரம்பரியப் பண்பாடுகள் மிகுந்த சொற்களைக் கையாள்வதால் மட்டுமே மொழியின் பெருமை, தன் இனத்தின் பெருமையை, தான் வாழும் மண்ணின் பெருமையைக் காக்க இயலும்.
அவ்வகையில் இன்று பெயரளவிற்குத் தமிழராக வாழ்வோர் மிகப்பெரிய தவறிழைத்து வருகிறார்கள். மெத்த படித்தவர்கள், சமூகத்தின் அடிமட்டத்தில் வாழும் மக்களிடையே, ஆண், பெண் பேதங்களின்றி, மேலேகூறப்பட்ட அனைத்தும் நிலவி வருகிறது. இது தமிழின் மாண்பு, தமிழரின் புகழ் போன்ற அனைத்துமே “கழுதை தேய்ந்து கட்டெறும்பாக”மாறும் கதையாக, அதுவும் மிக விரைவாக சென்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞரான தெய்வத்திரு. “நாமக்கல் கவிஞர்” வெ.இராமலிங்கம் அவர்கள் தன் கவிதையில் ,
”தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்”
அன்பே அவனுடை வழியாகும்” என பாடினார். அவை பொருளற்றுப் போயின. இதையெல்லாம் இன்றைய கார்பரேட் வாழ்வியல் முறை கேலி செய்கிறது.
உலகில் சிறந்த ஓர் இனமான தமிழைனத்தை, தங்கள் அரசியல் பிழைப்பிற்காக “இந்தி, சம்ஸ்க்ருதம் ஆகிய மொழிகளைப்படிக்காதே”என ஒரு கூட்டம் திட்டமிட்டு தமிழரை மூடர் கூட்டமாய் மாற்றுகிறது.
மதமாச்சரியங்கள் மிகுந்து, பாரம்பரிய கலாச்சாரம், பண்பாடுகளை மறுபக்கம் அழித்து வருகிறது வேறு ஒரு கூட்டம்.
மேலே சொல்லப்பட்டுள்ள அக்கூட்டங்களுக்கு பலம் சேர்க்க “பகுத்தறிவுப் பாலை புகட்டுவேன் “ என்கிறது இன்னொரு கூட்டம்.
இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கல்வித்துறையில் கால்பதித்து, தமிழரின் கொஞ்சநஞ்ச அறிவையும் தீய்ந்துபோகச் செய்து வருகின்றன.
மொழியை, கலாச்சாரத்தை மறந்து, இனத்தின் பெருமைகலைத் தொலைத்துவிட்டு, பொருளாதாரத்தை மட்டுமே மெய்யான வாழ்வியல் என்று முடிவுகட்டிவிட்ட தமிழர்களைப் பார்த்து, இனியும் “தமிழனென்று சொல்லாதே… தலைகுனிந்து நில்லாதே…” என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.
