Home Uncategorized காலம் மறந்துபோன கலைஞன் – M.பழனிவாசன்

காலம் மறந்துபோன கலைஞன் – M.பழனிவாசன்

காலம் விசித்திரகுணம் படைத்தது.

குப்பைகளை கோபுரத்தில் வைக்கும்.

கோபுரங்களை குப்பைக்குள் தள்ளும்.

அதிலும் ”சினிமா உலகம்” என்பது முற்றிலும் மாறுபட்டது.

ஆம்… பொருளும் புகழும் சேரும் காலத்தில் , பிரம்மனுக்கு இணையாக போற்றிக்கொண்டாடும்.

இரண்டுமோ அல்லது ஏதாவது ஒன்று மட்டுமோ ஒருவரை விட்டு நீங்கி விட்டால் போதும்….

அவ்வளவுதான்.

சேறுநிறைந்த புதைகுழிக்குள் சிக்கிய கால்கள்போலத்தான். மீண்டுவர இயலாது.

வரலாறும் அப்படித்தான்.

வில்லங்கம் செய்வோரை வரலாற்றில் பதிக்கும்.

வெகுளியாக இருக்கும் தியாகிகளுக்கு, சாதனையாளர்களுக்கு, சான்றோர்களுக்கு வெளிச்சம் தராது.

சினிமாவும் வரலாறும் இணைந்து பல நேரங்களில் பல திறமைசாலிகளை இருட்டடிப்பு செய்துவிடுகிறது.

மேலும், அடுத்தடுத்து வரும் புதிய தலைமுறைகள் ஏதோ சினிமாவை தாங்கள்தான் கண்டுபிடித்தது போல, செய்யும் அலப்பறைகள் குறித்து கேட்கவே வேண்டாம்.

தங்கள் வரலாற்றை கனக்கச்சிதமாக வரும் தலைமுறைக்கு பதிய வைக்காமல் போனவர்கள் எத்தனையோ பேர். அவர்களில் ஒருவர்தான் ….

“கவி. தஞ்சை. இராமையா தாஸ்”.

·தமிழ்த்திரையுலகில் கதை, வசனம், பாடல்களை ஒரே நபர் எழுதும் சகாப்தத்தையும், ஒரே நபரே வசனமும், பாடல்கள் எழுதும் நிலையும் தொடங்கி வைத்தவர் .

·1914-இல் தஞ்சை நகரில் பிறந்தவர்.

·சுதந்திர வேட்கை – காந்தியக்கொள்கையில் பற்று- கர்ம வீரர். காமராஜர், சிறந்த மனிதர். கக்கன் ஆகியோருக்கு நண்பராக இருந்தவர்.

·ஆனாலும் நேரடி அரசியலில் கால் பதிக்காதவர்.

·ஆசிரியர்ப் பணியில் இருந்து விலகியபின் நாடகத்துறைக்கு வந்து, ஒரு சபாவில் நடிகர்; நடிகைகளுக்கு “வாத்தியாராக’ இருந்தவர்.

·”ஜெயலெட்சுமி கான சபா” என்னும் நாடகக்கம்பெனியை சொந்தமாகத் தொடங்கி, தன் சொந்த எழுத்துக்களால், பிரபலமான பல படைப்புகளை அளித்தவர்.

·இவரின் நாடகக்குழுவில் வில்லனாக நடித்துக் கொண்டே, நடன இயக்குனராகவும் பணியாற்றியவர் பின்னாளில் திரைப்பட இயக்குனராக பெரும் புகழ் பெற்றுள்ளார். அவர்தான் திருவிளையாடல் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய “ஏ.பி,.நாகராஜன்” .

·”கவி. தஞ்சை இராமையாதாஸ்” அவர்களின் புகழ்பெற்ற ”மச்ச ரேகை” நாடகத்தை தானே திரைப்படமாக தயாரித்ததன்மூலம் அவரை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் ”எம்.கே.தியாகராஜ பாகவதர்.”

·விஜயா-வாஹினி ஸ்டூடியோவில் வசனம் பாடல்கள் எழுதும் ஆஸ்தான கலைஞனாக பல காலம் பணியாற்றியவர்.

·இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய முதல்படமான “அமரதீபம்”திரைப்படத்தில் குறவன் குறத்திக்கான பாடலாக, “ஜாலிலோ ஜிம்கானா…. டோலிலோ கும்கானா….” என அக்காலத்திலேயே வித்தியாசமான வார்த்தைகளால் ஹிட் கொடுத்தவர்.

·வேற்று மொழிகளிலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட அக்கால திரைப் படங்களுக்கு வசனம்- பாடல்கள்  எழுதிய முன்னோடி. இவரிடம் உதவியாளராக பணி செய்து, பின்னாளில் பெரும்புகழ் பெற்ற வசனகர்த்தா யார் தெரியுமா? அவர்தான் ஆரூர்தாஸ்.

·ஒரே வாரத்தில் இவர் ஒரு படத்திற்கான கதை-வசனம்-பாடல்கள் அனைத்தையும் எழுதி, எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த திர்ரைப்படம்  ‘குலேபகவாலி”. இப்படத்தில் என்.எஸ். என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆரும் ஒருவருக்கொருவர் புதிர்போடும் பாடல் மிகவும் பிரபலம்.

·இவர் நல்ல இலக்கியவாதியாக இருந்தாலும், பல திரைப்படங்களில் எசகு பிசகான எளிதில் வசீகரிக்கும் வார்த்தைகளைப்போட்டு எழுதி (”முக்காலா…. முக்கப்புலா…” என எழுதிய வாலிக்கும் இவரே முன்னோடி.) ஹிட் கொடுத்து வந்தார்.  இது குறித்து ஒரு பத்திரிக்கையாளர் மிகவும் தரக்குறைவான முறையில் விமர்சித்திருக்கிறார். தற்கு இராமையாதாஸ் சற்றும் கோபபடாமல், அந்த பத்திரிக்கை யாளரை தன் வீட்டிற்கு அழைத்திருக்கிறார். அவர் வந்ததும், நல்ல உணவு உபசரிப்பெல்லாம் செய்தார். அதன் பிறகு ஆசுவாசமாக அந்த பத்திரிக்கையாளரிடம், ”தம்பி… நானும் நளவெண்பா… கலிவிருத்தம், எண்சீர் விருத்தம் என இலக்கண அடிப்படையில் எழுதக்கூடியவன் தான். பாருங்க….கிராமத்துல  ஏத்தம் இறைக்குறவன் ஐலேசா… ஐலேசா…என பாடாமல் ”கண்டார் குழல் வண்டாட” என்றா பாடுவான். நாலு அணா டிக்கெட் வாங்கி தரையில் உட்கார்ந்து படம் பாக்குறானே… நான் அவனுக்காக பாட்டு எழுதுறேன். நான் துட்டுக்கு பாட்டு எழுதுறேன். அவங்க பாட்டுக்குத் தாளம் போடுறாங்க. அவ்வளவுதான். எனக்கு அதுதான் சந்தோஷம்” என்று கூறி வழியனுப்பி வைத்திருக்கிறார்.

·எம்.ஜி.ஆர்- பானுமதி ஜோடியாக நடிக்க , தானே சொந்தமாக “லலிதாங்கி” என்ற திரைப்படம் எடுத்தபோது 10,000 அடிகள் வரை எடுத்தபின், நின்று போனது. பின் அதே கதையை சிவாஜியை வைத்து, “ராணி லலிதாங்கி” என்ற பெயரில் எடுத்து வெளியிட்டு நஷ்டமடைந்தார்.

·”திருக்குறள் இசை அமுதம்” என்கிற நூலைப் படைத்துள்ளார்.

·தன் வாழ்க்கைப்பயணத்தில், பள்ளி ஆசிரியர், நாடக வாத்தியார், திரைப்படத்துறையில் கதை வசனகர்த்தா, பாடலாசிரியர், தனித்துவமான கவிஞர், திரைப்பட தயாரிப்பாளர்  என பன்முகத்திறமைகள் ஒருங்கே அமைந்த கலைஞன் கவி,. தஞ்சை. இராமையா தாஸ்.

·குடத்தினுள் விளக்காக இருந்த சுவாமி சங்கரதாஸ் சுவாமிகளின் புகைப்படத்தை முதன்முதலில் தியாகராஜ பாகவதர் மூலம் வெளியிட்டவர். அவருக்கு குரு பூஜையும் நடத்தினார்.

·1948 – 1960 வரை இவர் எழுதியவை ஏராளம், பணிபுரிந்த திரைப்படங்கள் ஏராளம். இவரால் வாழ்வு பெற்றவர்கள் பலர். சினிமாத்துறையின் மீதே வெறுப்பு கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார். உழைக்கத் தெரிந்த அளவி்ற்கு இன்றைய சினிமாக்காரர்கள் போல் பிழைக்கத் தெரியாமல், சர்க்கரை நோயால் அவதியுற்று, 1965 ஆம் ஆண்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவ மனையில் காலமானார்.

·பின்னாளில் முதல்வராக இருந்த மு.கருணாநிதி கொண்டுவந்த “அரசு மரியாதை”க்கான சட்டம் கொண்டு வருவதற்கும் முன்னரே, காங்கிரஸ் ஆட்சியில் போலீஸ்துறை மந்திரியாக இருந்த கக்கன் இராமையாதாஸின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு, ”முழு அரசு மரியாதை” செய்து கெளரவித்தார்.

·”யார்யாருக்கோ ஆண்டு தவறாமல் “அஞ்சலி” செலுத்தும் திரைப்படத்துறையின் எந்த சங்கமும் கவி.தஞ்சை. இராமையாதாஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில்லையே…” என்கிற ஆதங்கம், பலருக்கும் இருக்கிறது.

·அன்னாரது கலைப்படைப்புகள் 2010 ஆண்டில் நாட்டுடமையாக்கப்பட்டன.

[மேலே காணப்படும் செய்திக்குறிப்புகள் அனைத்தும் ஒருகாலத்தில் ஜனரஞ்சகமான பாடல்கள் எழுதுவதில் வல்லவரான ”கவி.தஞ்சை. இராமையாதாஸின் மகனும், திரைப்படத் தொகுப்பாளருமான த.ரா.ரவீந்திரன் ” அவர்களின் குறிப்புகளிலிருந்து, தொகுத்து எழுதியவை]

கவி.தஞ்சை .இராமையா தாஸ் அவர்கள் எழுதப்பட்டு மிகவும் புகழ்பெற்ற பாடல்கள் சில :

·பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ (மிஸ்ஸியம்மா)

·மயக்கும் மாலை பொழுதே நீ போ போ… (குலேபகாவலி)

·கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்)

·அழைக்காதே! நினைக்காதே! அவை தனிலே என்னை நீ ராஜா (மணாளனே மங்கையின் பாக்கியம்)

·எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே (மலைக்கள்ளன்)

·புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே (பானை பிடித்தவள் பாக்கியசாலி)

·வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க (மதுரை வீரன்)

Exit mobile version