பெருமை வாய்ந்த பிள்ளையார்- அறந்தாங்கி சங்கர்
நமது இந்து மதத்தில் எத்தனையோ கடவுள்களை நாம் வணங்கி வருகிறோம். சிவன், அம்பாள், பெருமாள், லக்ஷ்மி, பிரம்மன், காளி, முருகன், பைரவர், அய்யனார், சாஸ்தா, இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடித்த கடவுள் என்றல் அது யானைத்தலையோடு அருள் புரியும் அந்த விநாயகப்பெருமான்தான்.
மூல முதற் கடவுளாக வழிபாடு செய்யப்படும் பிள்ளையாருக்கு பல்வேறு விதமான பெயர்களோடு பல இடங்களிலும் ஆலயங்கள் அமைந்துள்ளன. பிள்ளையார் மிக எளிமையானவர். ஒரு அரச மரத்தடி கூட அவருக்கு போதும். வந்து அமர்ந்து விடுவார். அது மட்டும் அல்ல வீட்டில் ஹோமம் என்றாலும் சரி பண்டிகைக்காலம் என்றாலும் சரி மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை ஆரம்பித்து விடலாம்.
அப்படிப்பட்ட ஆனைமுகப்பெருமான் அருள் வழங்கும் சில தலங்களை பற்றி நாம் கீழே காணலாம்.
1..ஆதி விநாயகர் – திலதர்ப்பணப்பதி
விநாயகர் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது யானைத்தலை. ஆனால் யானை முகம் வருவதற்கு முன் இருந்த மனித முகத்துடன் காட்சிதருவது நன்னிலத்துக்கு அருகில் உள்ள திலதர்ப்பணப்பதி எனும் தேவாரப் பாடல் பெற்ற தலத்திலாகும்.
2. கற்பக விநாயகர் – பிள்ளையார்பட்டி
சிவகங்கைச் சீமை, பிள்ளையார் பட்டி எனும் தலத்தில் மலையடியில், குடவறையில் வடக்கு நோக்கி அருளும் கற்பக விநாயகர் கற்பக மரத்தைப் போல, கேட்டதை வழங்குபவர். இரு கரங்களுடன் காட்சி தருவது வித்தியாசமான தோற்றமாகும்.
3. வெள்ளை விநாயகர் – திருவலஞ்சுழி
திருவலஞ்சுழி எனும் தேவாரப் பாடல் பெற்ற சிவாலயத்திற்குள் நுழைந்தவுடன் வெள்ளை நிறத்தில் இந்திரனால் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் ‘வேத விநாயகர்’ என்று அருளுகிறார்.
4. நேத்திர விநாயகர்- சுவாமிமலை
சுவாமிமலை சுவாமிநாதப்பெருமான் சன்னதி நுழையும் முன் தென்திசை நோக்கி அமர்ந்த நிலையில், வேண்டுபவர்களின் கண் நோய் தீர்ப்பதால் இப்பெயர் வந்தது.
5. கள்ளவாரணப் பிள்ளையார்- திருக்கடவூர்
திருக்கடவூர் அபிராமி சமேத அமிர்தகடேசுவரர் ஆலயத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தரும் பிள்ளையார். அமிர்த கலசத்தை மறைத்து வைத்ததனால் இப்பெயர் வந்தது.
6.கைகாட்டி விநாயகர் – திருநாட்டியத்தான்குடி
திருநாட்டியத்தான்குடி எனும் தேவாரத் தலத்தில் இறைவனை தரிசிக்க சுந்தரமூர்த்தி நாயனார் உள்ளே நுழைய முற்பட்ட போது அங்கே சிவபிரான் இல்லாமையை உணர்ந்து கொண்டு விநாயகரை நோக்க… சிவன், சுந்தரரோடு திருவிளையாடல் செய்வதற்காக நாற்று நடும் உழவனாக வயற்பக்கம் நிற்பதனைக் காட்டியதால் ‘கைகாட்டி விநாயகர்’ ஆனார்.
7. துணையிருந்த விநாயகர் – திருப்பனையூர்
திருவாரூருக்கு அருகில் உள்ள திருப்பனையூர் எனும் சிவத்தலத்தில், பங்காளிகளுக்குப் பயந்து தன் தாயோடு இளவயதில் இவ்வூரில் தலைமறைவாகத் தங்கி வளர்ந்து வந்த கரிகால் சோழனுக்குத் துணையாய் இருந்து அருளி அவனைப் பேரரசனாக்கினார்.
8. பிரளயங்காத்த விநாயகர் – திருப்புறம்பியம்
மூவரின் பாடல் பெற்ற திருப்புறம்பயம் சிவபிரானுக்கு வலப்புறம் உள்ள விநாயகர், பிரளயமாக வெள்ளம் வந்த போது காப்பாற்றினார். மேலும் சதுர்த்தி அன்று இரவு நடைபெறும் தேனாபிஷேகத்தை முழுவதும் உள்ளிழுத்துக் கொள்வது பெருஞ்சிறப்பு.
9. படிக்காசு விநாயகர் – திருவீழிமிழலை
திருவீழிமிழலை எனும் பதிக்கு அப்பரும் சம்பந்தரும் வந்த போது பஞ்சம் நிலவியது. இறைவனைப் பாடிப் பரவியதால் இருவருக்கும் தினம் ஒரு பொற்காசு பீடத்தில் கிடைக்கும் படி செய்தார். எனவே அங்கே உள்ள தல விநாயகர் ‘படிக்காசு விநாயகர்’ எனப்படுகிறார்.
10. வாதாபி கணபதி – திருச்செங்காட்டான்குடி
பல்லவ மன்னனின் தளபதியாக இருந்த பரஞ்சோதி வாதாபியில் அங்குள்ள கணபதியை வழிபட்டு, போர் செய்து வெற்றி பெற்றார். வெற்றிப் பரிசாக அங்கிருந்து கணபதியைக் கொண்டு வந்து தன் ஊரான திருச்செங்காட்டாங்குடி எனும் கணபதிசுரத்தில் வைத்து வழிபட்டார். பின் பரஞ்சோதி சிறுத்தொண்டரானார்.
11. மாற்றுரைத்த விநாயகர் – திருவாரூர்
திருவாரூர் தியாகராசசுவாமி மேலைக் கோபுரத்தின் எதிர் குளக்கரையில் உள்ள விநாயகர். சுந்தரருக்கு, சிவன் கொடுத்த பொன் தரமுள்ளதா என்று உரைத்துப் பார்த்து சோதித்து அறிந்தார்.
12. பொய்யாப்பிள்ளையார் –குமார வயலூர்
‘அருணகிரிநாதரை ‘குமார வயலூருக்கு வா’ என்று முருகன் அசரீரியாகச் சொல்ல அவர் வயலூருக்கு வந்தார். ஆனால் முருகப்பெருமான் அங்கே காட்சிதரவில்லை. உடனே அருணகிரி நாதர்‘அசரீரி பொய்யோ’ என்று உரக்கக் கூறினார். ‘அசரீரி பொய்யில்லை’ என்று சொன்ன பிள்ளையார் சுப்பிரமணியரைச் சுட்டிக்காட்டினார்.
13. பொள்ளாப்பிள்ளையார் – திருநாரையூர்
உளிபடாமல் உருவான பிள்ளையார் திருநாரையூரில் நம்பிக்கு கருணை செய்து அவர் தந்த பிரசாதத்தை உண்டவர்.
14. செவி சாய்த்த விநாயகர் – திருவேதிக்குடி
திருவேதிக்குடி எனும் தேவாரத் தலத்தில் சிவனை நான்கு வேதங்களும் வழிபடும் போது தலை சாய்த்து வேதங்களைச் செவி மடுத்ததால் ‘செவி சாய்த்த விநாயகர்’ வேத விநாயகர் எனப்படுகிறார்.
15. கற்கடக விநாயகர் – திருந்துதேவன்குடி
குடந்தைக்கு அருகே உள்ள திருந்துதேவன்குடி எனும் தலத்தில் நண்டு வழிபட்டதால் (கற்கடகம்) இறைவன் கற்கடகேசுவரர் என்றும் பிள்ளையார் ‘கற்கடகப்பிள்ளையார்’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.
16. ஆண்ட விநாயகர் திரு இடை மருதூர்
திருஇடைமருதூரில் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை வழிபட்டு வருவதால் சுவாமி சன்னிதிக்குத் தென்புறம் உள்ள விநாயகர் ‘ஆண்ட விநாயகர்’ ஆகிறார். திருநறையூர் சித்தீசுரத்திலும் இதே பெயர் பெறுகிறார்.
எழுதி அனுப்பியவர் அறந்தாங்கி சங்கர் கைபேசி : 9444 160161
