Home Uncategorized திருமூலரும் டைரக்டர் பாக்யராஜும்!

திருமூலரும் டைரக்டர் பாக்யராஜும்!

சிவச்சிந்தனையில் தோய்ந்து, உலக உயிர்கள் அப்பழுக்கற்ற வாழ்வியலைக் கடந்து மீண்டும் சிவத்தை அடையும் வழிகளை நுட்பமாகத் தெரிவிப்பதில் வித்தகம் செய்து, தன்னுள் சிவமாகவே மாறி, ஆன்ம சுகத்தில் லயித்தவர் ”திருமூலர்’. அவர் இயற்றியதே “திருமந்திரம்” நூலாகும். 

    திருமூலர் ஒரு நாள் காவிரிக்கரையில் ஒரு அரசமரத்தடியில் வந்து சிவச்சிந்தனையுடன் அமர்கிறார்.  

    அப்போது அங்கே வரும் ஒருவர் (அநேகமாக அந்நாளைய பகுத்தறிவுவாதியாக இருக்கலாம்!),”சாமி.. நீங்க சிவத்தை தரிசனம் பண்ணிட்டீங்கன்னு எல்லாரும் சொல்றாங்களே.. அது உண்மைதானா? எப்படி முடிஞ்சது?” என்று கேட்கிறார்.

    திருமூலர் ஒருகணம் திகைத்துப்போகிறார். மேலும் வந்த நபரின் அறியாமையை எண்ணி மனம் வெதும்புகிறார். அவருக்கு எப்படி விளக்குவது என்று திருமூலரே சற்று குழம்பித்தான் போகிறார். சிக்கி விட்டார்! அவர் தப்பிக்க வேறுவழியேயில்லை!

    தன் தெளிந்த ஞானத்தைக்கொண்டு, அந்த நபரின் கேள்விக்கு பதில் கூற முற்படுகிறார். அதன்படி தெய்வீகத் தேனடையாம் திருமூலரின் சிவஞானத்திலிருந்து சிறுதுளிபோல் ஒரு பாடலாக சொட்டுகிறது! 

    அந்த பாடலில் “தன் முகத்தில் இருக்கும் கண்களால் மட்டுமே உலகத்தையும், வெளியுலகில் உருவமாய்க் காணப்படும் தெய்வச் சிலையையும் மட்டுமே வணங்கி பக்தி செலுத்துபவர்கள் முட்டாள்கள்! தன் அகத்திற்குள்ளே(அதாவது தன் நெஞ்சத்திற்குள்ளே) இறைவனைக் கண்டுகொள்வதால் மட்டுமே ஆனந்தம் அடைய முடியும்!” என்பதை
தன் பாடலின் முதல் இரண்டு அடிகளில் பாடுகிறார்.

அந்த பாடலை முழுமையாகக் கேட்காமலேயே பகுத்தறிவுவாதி, ”சாமி.. ஏதோ நீங்க சொல்றீங்க. நீங்க சொல்ற மாதிரியே சாமியை என் உள்ளுக்குள்ளேயே பார்த்துக்குறேன். கும்பிட்டுக்குறேன் சரி! அப்படி கண்டுக்கிட்டதால சந்தோஷம் கிடைச்சிருக்கணுமே.. அந்த சந்தோஷத்தை கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்க சாமி” என்று திருமூலரின் எதிரே சம்மணம் போட்டு ”விடாக் கொண்டனாக” உட்கார்ந்தே விட்டான்!

சிலநேரங்களில் இப்படித்தான் வடிகட்டிய முட்டாள்களின் மத்தியில் மிகப்பெரிய ஞானிகளின் மண்டைகள்கூட காய்ந்து போய்விடுகிறது! அந்த இடத்தில் திருமூலரும் அப்படித்தான் ஆனார்! 

கேள்விகேட்ட நபரோ திருமூலரை விடுவதாயில்லை! மீண்டும், மீண்டும் வற்புறுத்தி கேட்கிறார்.

வேறு வழியின்றி ”டைரக்டர் பாக்யராஜ் சார்” பாணியிலேயே தன் பாடலின் அடுத்த இரண்டுவரிகளில் விளக்குகிறார். எப்படி?

”இங்கே பாரப்பா.. ஒரு பொண்ணு தன்னோட அம்மாகிட்ட போயி, “அம்மா.. நீயும், அப்பாவும் உடம்போட உடம்பு சேர்ந்து தாம்பத்யத்தை அனுபவிச்ச சுகம் எப்படி இருந்திச்சி?” அப்படின்னு கேட்டா.. அதை, அந்த அம்மாக்காரி எப்படியப்பா வெவரமா சொல்லமுடியும்?” என்று கேட்கிறார்! 

வந்தவன் பேச்சற்று திகைத்துப் போகிறான்!

ஆம்! இறைவனாம் சிவம் உலக உயிர்கள் ஒவ்வொன்றிற்குள்ளும் அமுதமாய், ஜோதியாய், விவரிக்க முடியாத சுவையுடன் இருக்கிறது. அதை எப்படி உணர்வது என்பதற்காக ஒருவனை பயிற்றுவிக்கலாம். அதற்கான வழிமுறைகளை எடுத்துச் சொல்லலாம். அவ்வளவுதான் முடியும். காட்டிய வழிமுறைகளின்படி தனக்குத்தானே பயிற்சிசெய்து, ஒருவன் தன் இலக்கை அடைய வேண்டும். அப்படி அடைந்துவிட்டால் அதை அவனால் விவரிக்க முடியாது என்பதே உண்மை. 

இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால், ஒருவனின் புத்தியின் தரம் எத்தகையதோ… அவனுக்கு எப்படி எடுத்துரைத்தால் புரியுமோ அப்படித்தான் சொல்லமுடியும். வாதத்திற்கு மருந்து உண்டு. ஆனால், பிடிவாதத்திற்கு உலகில் இதுவரை மருந்து இல்லை! அதை நன்கறிந்துதான் திருமூலர் பொட்டிலடித்தாற்போல தன் பதிலை பாடலாக சொல்லிவிட்டார்.  

இறைவனை உணரும் வரையில் எவர் வேண்டுமானலும் உளறிக்கொட்டுவர். அரும்பாடுபட்டு உணர்ந்துவிட்டால் அதன்பின் அந்த சுகமானது அவருக்கு மட்டுமே! அந்த பேரின்பத்தை விவரிக்க முடியாது. 

திருமூலர் தன்னை ஒரு மனைவியாகவும், இறைவனை கணவனாகவும் உருவகம் செய்து, தன்னிடம் கேள்வி கேட்டவனை தன் மகளாகவும் கருதி இயற்றிய அந்த பாடல் இதோ:

”முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே!” 
நாமும் ஜீவனுக்குள் ஒளிந்து, நம்மை இயக்கும் சிவத்தை உணர்ந்து பேரின்பம் காண்போமாக!

Article By: M.Palanivasan

Exit mobile version