Home செய்திகள் “திருவள்ளுவர் சனாதனத்தின் அடையாளம்” – கவர்னர் அர்லேக்கர் கருத்து!

“திருவள்ளுவர் சனாதனத்தின் அடையாளம்” – கவர்னர் அர்லேக்கர் கருத்து!

‘‘சனாதனத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, திருவள்ளுவரின் முன்னால் வந்து தலைவணங்கித்தான் ஆக வேண்டும். அதுதான் திருவள்ளுவரின் சக்தி. திருவள்ளுவருடைய சிந்தனைகளும், வாழ்வியல் முறைகளும் ‘சனாதனம்’ ஆகும்,’’ என தமிழக கவர்னர் விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு

திருவள்ளுவர் பிறந்தநாளான, வைகாசி அனுஷத்தை ஒட்டி, ‘திருவள்ளுவர் திருநாள் விழா’ கொண்டாட்டம், சென்னை லோக்பவனில் உள்ள பாரதியார் மண்டபத்தில் நடந்தது.

இதில், ‘தமிழாகரர் சாமி தியாகராஜன் நினைவு விருது – 2026’ சென்னை, நந்தனம் அரசு கலைக் கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் க.பலராமனுக்கு வழங்கப்பட்டது. விருதை வழங்கி, கவர்னர் விஸ்வநாத் அர்லேகர் பேசியதாவது:

திருவள்ளுவர் ஒரு மாநிலத்தின் எல்லைகளுக்குள் மட்டும் சுருங்கிவிடுபவர் அல்ல. அவருடைய போதனைகள், கருத்துக்கள், சிந்தனைகள், அவர் எழுதிய திருக்குறள் என அனைத்தையும் நீங்கள் படித்துப் பார்த்தால், அவர் எத்தகைய மாமனிதர் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

இங்கு வாழ்ந்த வள்ளுவர் போன்ற மாமனிதர்கள் அனைவரும் ஞானிகளாகவும், கவிஞர்களாகவும் திகழ்ந்தார்கள். நாம் அவர்களை வெவ்வேறு பெயர்களில் அழைக்கலாம், ஆனால் அவர்கள் தந்தவை அனைத்தும் கவிதை வடிவிலான பேரறிவாகும். அவர்கள் காவி உடை அணிந்திருக்கிறார்களா அல்லது வெள்ளை உடை அணிந்திருக்கிறார்களா, நெற்றியில் திலகம் இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் முக்கியமல்ல. அவர் இந்த நாட்டிற்கு எதையோ கொடுத்துச் சென்றுள்ளார். திருவள்ளுவரின் ஆகச்சிறந்த பெருமை என்னவென்றால், சனாதனத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, திருவள்ளுவரின் முன்னால் வந்து தலைவணங்கித்தான் ஆக வேண்டும். அதுதான் திருவள்ளுவரின் சக்தி.

ஆபத்து வரும்போதெல்லாம் அவதரிப்பேன் என, கிருஷ்ணர் கூறியதைப் போல், சில நேரங்களில் அவர் ஆதி சங்கராச்சாரியராக வருகிறார், சில நேரங்களில் சாந்த ஞானேஸ்வராக வருகிறார், சில நேரங்களில் துளசிதாசராக வருகிறார், சில நேரங்களில் திருவள்ளுவராக வருகிறார்.

அவர்கள் சும்மா இந்த பூமிக்கு வந்துவிடவில்லை. நம் பெற்றோர் நமக்கு உயிர் கொடுத்தனர். நாம் இந்த பூமியில் வாழ்கிறோம், அவ்வளவுதான் என்று நினைக்கிறோம். திருவள்ளுவர் போன்ற ஞானிகளுக்கு வாழ்க்கையில் ஒரு உன்னதமான நோக்கம் இருந்தது. ஒட்டுமொத்த சமூகத்தின், அனைத்து மக்களின் நல்வாழ்வுதான் அந்த நோக்கம். அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ, யுகத்திற்கோ மட்டும் உரியவர்கள் அல்ல. அவர்கள் எக்காலத்திற்கும் பொருத்தமானவர்கள். அதனால்தான் திருவள்ளுவருடைய சிந்தனைகளும், வாழ்வியல் முறைகளும் ‘சனாதனம்’ ஆகும்.

சனாதனம் என்பதற்கு ‘நித்தியமானது, என்றும் புதியது’ என்று பொருள். அதற்கு ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை. அதேபோல், திருவள்ளுவரின் சிந்தனைகளுக்கும், போதனைகளுக்கும், வாழ்க்கைக்கும் ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை. எனவே அவர் சனாதனி தான். அப்படியிருக்கும் போது, அவரை சனாதனப் பாரம்பரியத்தின் சீடர் என அழைப்பதில் என்ன தவறு. அதுதான் உண்மை, அதை நாம் மறுக்க முடியாது. அவருடைய போதனைகளையும் எழுத்துக்களையும் நீங்கள் படித்தால், அவர் சனாதனப் பாரம்பரியத்திற்காகவும், மனிதநேயத்திற்காகவும் வாழ்ந்தார் என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.

பாரதிய இதிகாச சங்கலன சமிதியின், தேசிய செயற்குழு உறுப்பினர், டி.வி.ரங்கராஜன் பேசுகையில், ‘‘ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு ஆன்மா உள்ளது. நம் நாட்டிற்கு, தர்மம் தான் ஆன்மா. தர்மம் ஒரு வாழ்வியல். பிற நாட்டவர்க்கு அந்த சிந்தனை இல்லை. நம் நாட்டு மக்களிடம் அந்த பண்பை விதைப்பதற்காக, பல ஞானிகள் அவதரித்து உள்ளனர். அந்த வரிசையில், திருவள்ளுவரும் வருகிறார். எதற்கு பிறப்பு உள்ளதோ, அதற்கு இறப்பும் இருக்கும். ஆனால், நம் போதனை நுால்களுக்கு பிறப்பு என்பதே இல்லை. எனவே, அதற்கு இறப்பும் கிடையாது. அதுதான், சனாதன தர்மம்’’ என்றார்.

தேனி, சித்பவானந்த ஆசிரமத்தின் நிர்வாக அறங்காவலர், சுவாமி சமானந்தா பேசுகையில், ‘‘திருக்குறள் என்பது வாழ்வியல் கையேடு. அதில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய வாழ்வியல் முறைகள் உள்ளன. தர்மத்தோடு கூடிய பொருளையே நாம் தேட வேண்டும். அதேபோல், தான் யார் என்பது குறித்த தேடலும் வேண்டும். ஆன்மிகப் பயணத்தில் இதற்கான பதில் கிடைக்கும். இவற்றைக் குறித்து, திருவள்ளுவர் நிறைய பேசியுள்ளார்’’ என்றார்.

Exit mobile version