அகிலாண்டேஸ்வரி அருள் புரியும் திருவானைக்காவல்-அறந்தாங்கி சங்கர்
திருவானைக்காவல் ஜம்புலிங்கேஸ்வரர்_கோயில்
திருவானைக்காவல், திருச்சியில் காவேரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவபெருமான் கோவில் நகரமாகும்.
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பாடல் பெற்ற தலம் இது.
திருவானைக்காவில் வீற்றிருக்கும் சிவபெருமான் *ஜம்புலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
சிவபெருமானின் பஞ்சபூதத்_தலங்களில் ஒன்றான நீருக்கு_உரியதே_திருவானைக்கா கோயில். இங்குள்ள மூலவர் ஜம்புலிங்கேஸ்வரர் சந்நதியில் எப்போதும் நீர் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும்.
புராண காலத்தில் நாவல் மரங்கள் நிறைந்தக் காடாக இத்தலம் இருந்ததுள்ளது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கமாக ஈசன் வீற்றிருந்தார். முற்காலத்தில் சிவகணங்களில் இருவர், சாபம் காரணமாக யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்து இந்த நாவல் காட்டில் வாழ்ந்திருந்தனர்.
பூர்வ ஜென்ம நினைவின் காரணமாகச் சிலந்தியானது கூரையில்லாமல் இருந்தச் சிவலிங்கத்தின் மீது வலையைப் பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. முற்பிறவியில் சிவபக்தனாக இருந்த யானையும் தினமும் காவிரியில் இருந்து தன் துதிக்கையின் மூலம் நீரை உறிஞ்சிக் கொண்டு வந்து சிவலிங்கத்தைச் சுத்தப்படுத்தி வழிபட்டு வந்தது.
சிலந்தி பின்னிய வலையை அசுத்தமாககக் கருதிய யானை, அதை அழித்துவிட்டு, மலர்களைச் சிவலிங்கத்தின் மீது வைத்து வழிபட்டுச் செல்லுவது வழக்கம். தான் அமைத்தக் கோயிலை யாரோ கலைத்துவிட்டார்களே, என வருந்திய சிலந்தியும் மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும்.
தினந்தோறும் இது தொடர, ஒருநாள் காத்திருந்தச் சிலந்தி, யானையின் துதிக்கையில் புகுந்துக் கடித்துவிட, யானையும், சிலந்தியும் மடிந்தன.
இவைகளின் சிவபக்திக்கு மெச்சிய சிவபெருமான் யானையைச் சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி தனக்குக் கோயில் கட்ட விரும்பியதால், மறுபிறவியில் சோழ அரசனாகப் பிறந்து, நீ விரும்பியபடி, எனக்குக் கோயில்களைக் கட்டுவாயாக! எனச் சிலந்திக்கு அருள் புரிந்தார் சிவபெருமான்.
அச்சிலந்தியே மறுபிறவியில் சோழ அரசன் கோச்செங்கணான் என்ற பெயரில் பிறந்தான். கோச்செங்கண் சோழனின் தந்தை சுபதேவர் என்றும் தாயார் கமலவதி என்றும் கூறுவர். நிறை மாதக் கர்ப்பிணியாக இருந்த கமலவதியிடம், உனது குழந்தை இன்னும் சிறிது நேரம் கழித்துப் பிறந்தால் ‘நிறைய கோயில்களைக் கட்டும் சிவ பக்தனாக இருப்பான்’ என ஜோதிடர்கள் கூறியதால், தன்னைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடச் செய்து, பிள்ளைப் பிறப்பைச் சற்று நேரம் தள்ளிப் போட்டாளாம்.
அதனால், கண்களில் இரத்தம் அதிகம் பாய்ந்ததால் கண்கள் சிவப்பாகப் பிறந்ததாம் அக்குழந்தை. இதனால் “கோச்செங்கணான்” என அழைக்கப்பட்டான் அச்சோழ மன்னன்.
சிலந்தியே மறு பிறவியில் கோச்செங்கட்சோழனாகப்
பிறந்ததால், பூர்வஜென்ம வாசனையால் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலை மீது சிவலிங்கத்தைப் பிரதிஷ்டைச் செய்தானாம். இவை #மாடக்கோயில்கள் என அழைக்கப்பட்டன. இவ்வாறு 70 மாடக் கோயில்களைக் காவிரி ஓரங்களில் கட்டினானாம் கோச்செங்கண் சோழன்.
கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் “திருவானைக்கா ஜம்புலிங்கேஸ்வரர்” ஆலயமே.
திருவானைக்காவலில் நான்காவது திருச்சுற்று மதிலைக் கட்டிய போது பணியாளர்களுக்குக் கொடுக்க நிதி இல்லாததால், இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவரை எழுப்பியப் பணியாளர்களுக்கு திருநீற்றை கூலியாகக் கொடுத்தாராம்.
வீட்டிற்குச் சென்று பார்த்தப்போது பணியாளர்களின் உழைப்புக்கேற்பத், திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை #திருநீற்றுமதில் என்றே அழைக்கின்றனர்.
திருவானைக்காவல் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும். வடமொழியில் “அப்பு” என்றால் #தண்ணீர். “ஜம்பு” என்றால் நாவல் மரம். மூலரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.

முற்றிய கோடையில், காவேரி
வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது அதிசயமே. மழை வளம் மிக்க நேரங்களில் மின் மோட்டார்களை வைத்து கர்ப்பக்கிரகத்தில் ஊறி வரும் நீரை இறைத்து, அங்கே கோயிலுக்குள் இருக்கும் ஒரு கிணற்றினுள் விட்டுவிட்டே சுவாமிக்குப் பூஜைகளைச் செய்கின்றனர்.
திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்குத் திசைகளிலும் கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களும் உடைய பெரியதொரு கோவிலாகும்.
இங்குள்ள அம்மன் அகிலாண்டேஸ்வரி” எனப்படுகிறாள்.
அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனிச் சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு #அகிலாண்டேஸ்வரி என்னும் “அகிலம் ஆண்ட நாயகி” காட்சித் தருகிறாள்.
மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான #அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார்.
திருவானைக்கா தலம், அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாகப் பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாகப் பளிச்சென்று தெரியும்படி இருக்கும்.
அகிலாண்டேஸ்வரி அம்மனின் இந்தக் காதணிகளைத் #தாடகங்கள் என்று அழைப்பார்கள். அம்பாள் முற்காலத்தில் காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும், பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் சொல்லப்படுகிறது.
எனவே ஆதிசங்கரர், ஸ்ரீசக்ரரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார்! என்றும் தல வரலாறு கூறுகிறது.
அன்னையின் உக்கிரத்தை மேலும் தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்குத் தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.
உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார், அன்னை #அகிலாண்டேஸ்வரி போல பட்டுபுடவையைக் கட்டி, பெண் வேடமிட்டு , கிரீடம் அணிந்து கொண்டு, மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நதிக்கு வந்து , சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். (அகிலாண்டேஸ்வரி அம்மனே வழிபாடு செய்வதாகப் பொருள் )
ஏனெனில் இத்தலத்தில் இருக்கும்
ஜம்புலிங்கம் அன்னையால் செய்யப்பட்டதாம். ஒருமுறை பூமிக்கு வந்த அம்பிகை, சிவபெருமானை
வழிபட விரும்பினாராம். எனவே காவேரியில் இருந்து நீரை எடுத்து லிங்கம் வடித்தாராம். அம்பிகையின் திருக்கரங்களிலிருந்த நீர் லிங்கமாக மாறியது.
அம்பிகை அந்த லிங்கத்தை வழிபட்டு ஆனந்தம் அடைந்தார்.
#நீரால்_செய்யப்பட்ட_லிங்கம் என்பதால், இத்தலம் நீருக்குரிய தலமாயிற்று. எனவே அம்பிகையே வழிபட்ட லிங்கம் ஆதலால் இன்றளவும் சிவாச்சாரியார்கள் உச்சிக்கால பூஜையின் போது #அம்பாள்_வேடத்தில், சிவபெருமானைப் பூஜிக்கின்றனர்.
இக்கோயிலின் மற்றொரு சந்நிதியில் #குபேர_லிங்கம் உள்ளது. இது மிகப்பெரிய வடிவாகவும், பலமுக உருத்திராட்சம் தாங்கியும் உள்ளது. இந்த குபேர லிங்கத்தைக் குபேரன் வழிபட்டதால் தான், சிவனருளைப் பெற்று செல்வந்தன் ஆனார்! என்பது வரலாறு.
அரிய சிற்பங்களும் பல இத்தலத்தில் காணப்படுகின்றன.
அது மட்டுமின்றி. #ஏகநாதர் திருவுருவம் அகிலாண்டேஸ்வரி அன்னையின் சந்நிதிக்கு வெளியே உள்ளது. ஏகநாதர் என்பவர், #மும்மூர்த்திகளும்_சமமானவர்களே! என்றும், #மும்மூர்த்திகளும்_ஒருவரே! என்ற மாபெரும் தத்துவத்தை விளக்குகிற வடிவமாகும்.
ஓம் நமசிவாய
அறந்தாங்கி சங்கர்