திருப்பாம்புரத்தில், ராகுவும்- கேதுவும் ஏக சரீரம் எனப்படும் ஓருடலாய் இணைந்து வீற்றிருப்பது சிறப்புக்குரியதாக உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இது 122-வது தலமாகும். மேற்கு பார்த்த சன்னிதியில் இருந்து இறைவனை நெஞ்சில் நிறுத்தி வணங்கிய நிலையில் ராகு-கேது உள்ளனர். இருவரும் ஒருவராய் வீற்றிருப்பதால், மற்ற நாக பரிகார தலங்களைக் காட்டிலும், இந்தத் தலம் சிறப்புக்குரியதாக விளங்குகிறது.
இத்தல இறைவன் பாம்புரேஸ்வரர் என்றும், பாம்புரநாதர் என்றும், சேஷபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். நாகராஜனான ஆதிசேஷன் மட்டுமல்லாது அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் எனும் அஷ்ட நாகங்களும் வழிபட்ட சிறப்புக்குரிய தலம் இதுவாகும்.
பாம்புரேசுவரர் வீற்றிருக்கும் விமானத்தின் அருகே, திருமலை ஈசுவரர் சன்னிதி படிக்கட்டுகளுடன் இருப்பது சிறப்பு. சுவாமிக்கு இடதுபுறம் வண்டார்குழலி என்ற பெயரில் அம்பிகை நின்ற கோலத்தில் அருள்மழை பொழிகிறாள். அவளது சன்னிதிக்கு எதிரே தான் ஏக சரீர ராகு-கேது சன்னிதி அமைந்துள்ளது.
திருக்கோவிலின் பின்புறம் தல விருட்சமாக பெரிய வன்னி மரம் உள்ளது. அந்த மரத்தின் அடியில் வன்னி ஈஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த வன்னி மர ஈஸ்வரரை, பிரார்த்தனை செய்து கொண்டு மஞ்சள் துணியில் முடிச்சு போட்டு மரத்தில் கட்டி தொங்க விட்டால், எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. காள சர்ப்ப தோஷம், ராகு- கேது சதுர்த்தி உள்ளவர்கள், இந்த தோஷங்களால் திருமணம் மற்றும் குழந்தை பேறு தடை உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
