Home உலகம் ரோபோக்களைக் கவனித்துக்கொள்ள ஆட்கள் தேவை! அமெரிக்காவில் வித்தியாசமான வேலைவாய்ப்பு!

ரோபோக்களைக் கவனித்துக்கொள்ள ஆட்கள் தேவை! அமெரிக்காவில் வித்தியாசமான வேலைவாய்ப்பு!

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவில் ரோபோக்களைக் கண்காணித்துப் பராமரிப்பதற்காகப் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலிஃபோர்னியாவைச் சேர்ந்த Figure AI என்ற ரோபோ தயாரிப்பு நிறுவனம், மனித உருவிலான ரோபோக்களை (Humanoid Robots) கண்காணித்து அவற்றின் செயல்பாடுகளை உறுதிப்படுத்தும் பணிக்காகப் பணியாளர்களைத் தேடி வருகிறது. இந்த வேலைவாய்ப்பு தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளதுடன், ரோபோக்களுக்கான ‘Babysitter’ வேலைவாய்ப்பு என்றும் பேசப்பட்டு வருகிறது.

ஒரு மணி நேரத்திற்கு ரூ.4,238 வரை சம்பளம்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா கிளாரா (Santa Clara) பகுதியில் இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு மணி நேரத்திற்கு 40 முதல் 45 அமெரிக்க டாலர்கள் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 45 டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,200 முதல் ரூ.4,240 வரை இருக்கும். இந்தப் பணி ஆரம்பத்தில் ஒப்பந்த அடிப்படையிலானதாக (Contract-to-Hire) இருக்கும். பணித்திறன் மற்றும் நிறுவனத்தின் தேவையைப் பொறுத்து பின்னர் நிரந்தரப் பணியாக மாற்றப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

ரோபோக்களைப் பராமரிப்பது மட்டுமல்ல; என்னென்ன வேலைகள்?

இந்தப் பணியில் சேருபவர்கள் இரவு நேரங்களில் செயல்படும் மனித உருவிலான ரோபோக்களையும் அவற்றை இயக்கும் ஊழியர்களையும் கண்காணிக்க வேண்டும். ரோபோக்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனிப்பது, அவற்றில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளைக் கண்டறிவது, பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைச் சரிசெய்வது, ரோபோக்களை இயக்கும் பணியாளர்களுக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்படும். ரோபோக்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், அதன் செயல்பாட்டை நிறுத்த வேண்டுமா அல்லது தொடர்ந்து இயக்கலாமா என்பதை மதிப்பீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஏற்பட்ட கோளாறுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளையும் தயாரிக்க வேண்டும்.

இரவு நேரப் பணி – வேலை நேரம் என்ன?

இந்த வேலைவாய்ப்பு முழுமையாக இரவு நேரப் பணியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10.30 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை பணியாற்ற வேண்டும். வார இறுதி நாட்களிலும் பணியாற்ற வேண்டியிருக்கலாம். ரோபோக்களை இயக்கும் குழுவினருக்கு வேலைகளை ஒதுக்குவது, அவர்களது பணிகளை ஒருங்கிணைப்பது, இரவு நேரத்தில் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிப்பது போன்ற நிர்வாகப் பொறுப்புகளும் இந்தப் பணியில் அடங்கும். பணியில் சேருபவர்களுக்கு நிறுவனத்தின் தலைமையகத்தில் ஒரு வாரப் பயிற்சியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் தகுதியும் அனுபவமும் அவசியம்!

இந்த வேலை வெறுமனே கணினி முன்பு அமர்ந்து ரோபோக்களைக் கண்காணிக்கும் பணியாக இருக்காது. ரோபோக்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உபகரணங்களை 50 பவுண்டுகள் (சுமார் 22.7 கிலோ) வரை தனியாகக் கையாள வேண்டியிருக்கும். நீண்ட நேரம் நின்று பணியாற்றுதல், குனிந்து வேலை செய்தல், இயந்திரங்களைக் கையாளுதல் போன்ற உடல் உழைப்பும் தேவைப்படும். மேலும், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தலைமைத்துவம் அல்லது குழு நிர்வாக அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ரோபோக்களின் எதிர்காலத்தில் மனிதர்களின் பங்கு!

மனிதர்கள் செய்யும் பல்வேறு வேலைகளை ரோபோக்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளும் வகையில் உலகளவில் பல நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. தொழிற்சாலைகள், கிடங்குகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மனித உருவிலான ரோபோக்களைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளும் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், ரோபோக்கள் தானாகவே அனைத்து வேலைகளையும் தடையின்றிச் செய்யும் நிலை இன்னும் முழுமையாக உருவாகவில்லை. அவற்றைக் கண்காணிக்கவும், கோளாறுகளைச் சரிசெய்யவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மனிதப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். மனிதர்களின் வேலைகளை மாற்றும் என எதிர்பார்க்கப்படும் ரோபோக்களையே தற்போது மனிதர்கள் கண்காணித்து பராமரிக்க வேண்டியிருப்பது, வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகின் சுவாரஸ்யமான முரண்பாடாகப் பார்க்கப்படுகிறது.

Exit mobile version