நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் தெற்குக் காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி இவரது மகன் ரவி ( 48) விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி செந்தாமரை என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். பகல் சுமார் 12 மணி அளவில் கருப்பம்புலம் கடைவீதிக்கு வந்து விட்டு வீட்டுக்கு செல்லும் பொழுது யாரோ இவரை வழிமறித்து கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்தும் கொலை செய்து விட்டு தப்பி விட்டார்கள். குத்தி கொலை செய்யப்பட்ட ரவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் வேதாரணியம் சரக போலீஸ் துணை கண்காணிப்பாளர் மகாதேவன், வேதாரணியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா ஆகியோர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விவசாயி ரவியை ஒரு நபரா அல்லது கூட்டாக சேர்ந்து வெட்டிக் கொலை செய்தார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். விரைவில் கொலையாளியை பிடித்து விடுவோம் என போலீசார் தெரிவித்தனர்.
