Home Uncategorized வளமான வாழ்வு தரும் வைகாசி விசாகம் – மு.பழனிவாசன்

வளமான வாழ்வு தரும் வைகாசி விசாகம் – மு.பழனிவாசன்

ஒவ்வொரு தமிழ்மாதத்திலும் பூரண நிலவு (பெளர்ணமி திதி) தோன்றும் நாளில் அதனுடன் இணைகின்ற ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும், கீழ்க்காணும் அட்டவணையின்படி பிரத்யேகமான மகத்துவங்கள் உண்டு.

 

 

மேற்கூறியவாறு நம் முன்னோர்கள் அறிவியலை மையப்படுத்தி, ஆன்மீக ரீதியிலும், ஜோதிட ரீதியிலும் பல்வேறு வரையறகளை செய்து, நமக்கு வழி காட்டியுள்ளனர். அதன்படி ஒவ்வொரு மாதத்திலும் வரும் பெளர்ணமியில், அந்த நட்சத்திரம் கூடும்பொழுது, முழுமையான பக்தியுடன் இறைவழிபாடு செய்து, மனோபலம், பொருள் வளம், சுகமான வாழ்வு ஆகியவற்றை பேரின்பப் பெரு வாழ்வு வாழ முடியும்.

சரி… இவ்வாண்டு வைகாசி மாதம் நடக்கிறது. இந்த வைகாசி விசாகத்தின் புண்ணிய பூர்வ கதை என்னவென்று பார்க்கலாமா?

முருகனின் தோற்றம்:

இந்த வைகாசி மாத விசாக நாள்தான் தமிழ்க்கடவுளான முருகபெருமானின் அவதாரம் நிகழ்ந்த நாள்.

அவ்வகையில் அளவற்ற அருளாளனான முருகபெருமான், ஷண்முகன், திருமுருகன், சரவணன், முத்துகுமாரசாமி, வடிவேலன், வேல்முருகன், பழனியாண்டவர், சுப்ரமணியன், செந்தில், கந்தன் முருகவேல், குமரவேல் என என்ணிலடங்கா திருப்பெயர்களால் வணங்கப்படுவது நாம் அறிந்ததே.

ஒருமுறை சிவபெருமானின் நெற்றியில் உள்ள கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் சரவணப்பொய்கையில் விழுந்து, ஆறு குழந்தைகளாகின. அந்த குழந்தைகள் “கார்த்திகைப்பெண்கள்” எனப்படும் ஆறு பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டனர். பார்வதி தேவி அவர்களை ஒருசேர அணைத்தபோது, ஆறுமுகங்கள் கொண்ட ஒரே குழந்தையாக உருபெற்றது. அதுவே “ஆறுமுகம்” என தமிழிலும், ”ஷண்முகன்” என வடமொழியிலும் (”ஷண்”, ஷஷ்டி என்றால் ஆறு என்ற எண் ஆகும்.) பெயர்பெற்றது. இப்படி முருககடவுளின் அவதாரம் குறித்து புராணக்குறிப்புகள் உண்டு.

இது மட்டுமின்றி, மேலும் ஒரு நிகழ்வு வைகாசி விசாகப்பின்னணியில் உண்டு. அது என்ன?

பராசர முனிவரும் ஆறு புதல்வர்களும்:

”நீரின்றி அமையாது உலகு” என்றான் தமிழ்ப்புலவன் திருவள்ளுவன். இது நீரின் முக்கியத்துவத்தை இதைவிட சிறப்பாகவும், சுருக்கமாகவும் யாரும் யாரும் சொல்லியதில்லை.

நீரின் முக்கியத்துவம் குறித்து புராணக்கதையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பராசர முனிவர் என்பவர் கடுந்தவம் இயற்றி சிவனருள் பெற்றவர். அவருக்கு ஆறு ஆண் பிள்ளைகள். அவர்கள் அனைவருமே சுட்டித்தனத்தில் கெட்டிக்காரர்கள்.

 ஒருமுறை அவர்கள் குளத்து நீரில் குளித்து கும்மாளமிட்டனர். அதில் அதிக உச்சமாக நீரை மாசுபடுத்தியதுடன், அந்நீரில் வாழ்ந்த மீன்களுக்கு சொல்லொண்ணா துன்பங்களை விளைவித்தனர். பல மீன்கள் இறந்தன. அதனால் பிற மீன்கள் மிகவும் வருந்தின. இறைவனை நோக்கி பிரார்த்திக்க்கத் தொடங்கின. அதே வேளையில், அங்கு வந்த பராசர முனிவர் தன் புதல்வர்களை நோக்கி, “நீங்கள் செய்வது அடாத செயல். நீரை சிவபெருமானாக கருதி பிரார்த்திக்க வேண்டும். மாசு படுத்தக்கூடாது. ஆகவே, உங்கள் தகாத செயலை போநிறுத்திவிட்டு உடனே கரையேறுங்கள்” என கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவரது புதல்வர்கள் அவர் எச்சரிக்கையைப் பொருட்படுத்தவேயில்லை. அதற்கு மாறாக தங்கள் தந்தையை ஏளனம் செய்து எள்ளி நகையாடினர்.

அது கண்டு வெகுண்ட பராசர முனிவர் ”நீங்கள் மீன்களாக மாறி அவதியுறுங்கள்” என சாபமிட்டார். அவரது தவவலிமை புதல்வர்களை உடனே மீன்களாக மாற்றியது. உடனே அவர்கள் மிகவும் வருந்தி தங்கள் தந்தையிடம் சாபவிமோசனம் வேண்டினர். அதற்கு அவர் “நீங்கள் செய்தது கொடுஞ்செயல். மீன்களாக இருந்து அவற்றைப்போல சில காலம் அவதியுறுங்கள். அப்போதுதான் இனி நீரை மாசுபடுத்தக்கூடாது என்றும், பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்கும் செயலை செய்யக்கூடாதெனும் புத்தியும் வரும். உரிய காலத்தில் பார்வதி தேவியின் அருளால் சாப விமோசனம் பெறுவீர்கள்” என்று பதிலுரைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

காலம் உருண்டோடியது. தாங்கள் பெற்ற சாபத்தின்படியே, அந்த ஆறுபேரும் மீன்களாக பல்வேறு அவதிப்பட்டு வந்தனர். இதற்கிடையே முருகனின் தோற்றம் நிகழ்ந்தது. பார்வதி தேவி தன் மகன் முருகனுக்கு பாலூட்டி சீராட்டி வளர்த்து வந்தாள். அப்படி ஒருநாள் கிண்ணத்தில் “ஞானப்பால்” ஊற்றி முருகனுக்கு ஊட்டினாள். அப்போது அதிலிருந்து சில துளிகள் முனிவரின் மகன்கள் மீன்களாக வசித்த குளத்தில் விழுந்தன. அவற்றை தற்செயலாக அந்த மீன்கள் (முனிவரின் மகன்கள்) பருக நேர்ந்தது. உடனே அவர்கள் ஆறுபேரும் ஏற்கனவே அவர்கள் தந்தை பராசர முனிவர் கூறியிருந்தபடியே பார்வதி தேவியால் மீண்டும் முனி குமாரர்களாக உருமாறினர்.

அப்போது வானில் ஒரு அசரீரி, “முனி குமாரர்களே… நீங்கள் உருமாற்ற விமோசனமே பெற்றுள்ளீர்கள். நீங்கள் பெற்ற சாபத்திலிருந்து முழுமையான விமோசனம் பெறவேண்டுமெனில், திருச்செந்தூர் தலத்தில் முருகனை எதிர்நோக்கி பயபக்தியுடன் தவமிருங்கள். முருகன் உங்களுக்கு அருள் பாலிப்பான்.” என ஒலித்தது.

    சரீரியின் வாக்கிற்கிணங்க திருச்செந்தூர் தலம் சென்று, முனிகுமாரர்கள் கடுந்தவமியற்றினர். அவர்களின் தீவிர பக்தியில் மனமிரங்கிய மயில்வாகனான முருக பெருமான் அவர்களுக்கு நேரில் காட்சி தந்து, “இனி ஒருபோதும் நீர்நிலைகளை மாசுபடுத்தக்கூடாதென்றும், பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது” என அவர்களுக்கு அறிவுரை கூறி பாவ விமோசனம் தந்து, நல்வரங்கள் பலவற்றை வாரி வழங்கினான். அந்த சம்பவம் நிகழ்ந்தது வைகாசி மாத விசாகத் திருநாளாகும்.

இலவச பானம்:  

இன்றும் திருச்செந்தூர் தலத்தில் வைகாசி விசாகத்திருநாளில் சாபவிமோசன நிகழ்ச்சி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிற உயிர்களை வதைக்காமல் அவற்றிற்கு மகிழ்ச்சி தரும் வகையில் அன்னதானம் மட்டுமின்றி, நீர் சம்பந்தமான பானகம், பதநீர், நீர்மோர், குடிநீர் போன்றவற்றை பிறருக்கு அளித்து பக்தர்கள் தங்களுக்கு புண்ணியம் தேடிக்கொள்கின்றனர். இன்றும் கூட தூத்துக்குடி மாவட்டத்தில் பனந்தோப்பு வைத்து “பதநீர்” இறக்கும் தொழிலை மேற்கொண்டுள்ளோர் அனைவருமே, வருவோர் போவோர் அனைவருக்கும் சாதி, சமய பாகுபாடின்றி வழங்கி மகிழ்கின்றனர். வைகாசி விசாகத்திருநாளன்று காலை சூரியன் தோன்றும் நேரத்திலிருந்து, அஸ்தமனம் ஆகும் மாலைப்பொழுது வரை பதநீரை இலவசமாகவே வழங்கி வருகின்றனர். எவரிடமும் சிறு தொகையினையும் அன்பளிப்பாக பெறுவதில்லை. அவ்வாறு செய்வது அவர்களைப்பொறுத்த வரையில் ஒரு பாவ காரியமாகும். இது யுகங்களைக்கடந்தும் நடந்துவரும் ஒரு அதிசயம்.  

இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களை இந்த வைகாசி விசாகம் உள்ளடக்கியுள்ளது. இந்த நாள் முழுவதும் விரதமிருந்து முருககடவுளை வேண்டுவதால் எண்ணற்ற நற்பலன்கள் கிட்டுகின்றன.

குழந்தை வரம் வேண்டிக்கொண்டு கடைபிடிக்கும்”சஷ்டி விரதம்” எந்த அளவிற்கு சிறப்பானதோ, அதேபோல வைகாசி விசாகநாளும் மிகவும் ஏதுவான நாளாகும்.

 

இந்நாளில் விரதமிருந்து முருகனை மனமுருகி வழிபடுவதால், பங்காளிக்கும் பிற உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், பிற உயிர்கள் அனைத்திற்கும் செய்த துரோகம் உள்ளிட்ட பாவச்செயல்களிலிருந்து விடுபட முடியும் என்பது ஆன்றோர்களின் கருத்து. பெரும்பாலான பக்தர்களின் அனுபவ உண்மை.

தமிழ்நாட்டின் திருநெல்வேலி, செங்கோட்டையில் அமைந்துள்ளது ”ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்”. இந்த கோவிலின் முக்கிய கடவுள் குமார சுவாமி (முத்துகுமாரசுவாமி எனப்படும் முருகன்) ஆவார்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களின் கிரக தோஷங்களில் இருந்து விடுபட இத்திருத்தலத்திற்கு வந்து முருகப்பெருமானை சிரத்தையுடன் பிரார்த்தனை செய்தால் தங்களின் அனைத்து விருப்பங்களையும் அருள்கிறார் என்பது பக்தர்களின் ஐயமற்ற நம்பிக்கை.

Exit mobile version