Home Uncategorized விளங்கச் செய்யும் வெள்ளிக்கிழமை – ஆடி வெள்ளி சிறப்பு

விளங்கச் செய்யும் வெள்ளிக்கிழமை – ஆடி வெள்ளி சிறப்பு

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை ஏழு கிழமைகளும் நவகோள்களுடன் தொடர்பு கொண்டவை. அதன் அடிப்படையில்தான் நிழல் கிரஹங்களான ராகு, கேது தவிர பிற அனைத்திற்கும் தனித்தனியே நமது முன்னோர்கள் கிழமைகளை வகுத்துள்ளனர். 

வான்கோள்களில் சூரியனின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் கிழமையை “ஞாயிறு” என்று வகுத்ததைப் போல், ஒவ்வொரு கோள்களின் தாக்கத்தின் அடிப்படையில் பிற கிழமைகளையும் வகுத்துள்ளனர். அவ்வகையில் வெள்ளி எனப்படும் சுக்ரனின் ஆதிக்கம் மேலோங்கும் கிழமையை “வெள்ளிக்கிழமை” என்று வகுத்தனர்.

ஜாதக அடிப்படையில் “சுக்ரன்” ஆதிக்கம் இருக்கக்கூடிய கிழமை வெள்ளிகிழமைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஒருவரின் ஜாதகத்தில் சுக்ரன் வலுவான நிலையில் இருப்பதன் மூலம் பொன், பொருள், வீடு, வம்ச விருத்தி உள்ளிட்ட போகங்கள் அனைத்திற்கும் ஆதாராமாக விளங்குகிறார். ஆகவே இயல்பாகவே வெள்ளிக்கிழமையானது தனித்துவம் மிகுந்த மகத்துவம் பெறுகிறது. 

மேலும், மகாலெட்சுமியின் அம்சமாக விளங்குவது வெள்ளிக்கிழமை . எண்ணத்தில் சுத்தம், வாக்கு சுத்தம், வசிக்குமிடம் மற்றும் சுற்றுப்புற சுத்தம், ஆகியவை மிகச்சிறப்பாக இருக்குமிடத்திலேயே மகாலெட்சுமி வாசம் செய்கிறாள். அவள் இருக்குமிடத்தில் சகல செளபாக்கியங்களுக்கும் குறைவில்லை. ஆகவே மகாலெட்சுமியை மனம் மகிழச்செய்யும் வகையில் தூய்மையை மேற்கொள்வதில் மக்கள் தனிக்கவனம் செலுத்துகின்றனர். 

பருவ நிலை மாற்றத்தின் துவக்கமான ஆடி மாதம் பெண் தெய்வங்களின் சக்தி மேலோங்குவதாகக் கூறப்படுகிறது. அதிலும் அந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முக்கியத்துவம் பெறுகிறது. அன்றைய தினம் அவரவர் இல்லங்களில் பெண்கள் வாசலைப் பெருக்குவது முதல் குத்துவிளக்கேற்றி பூஜித்து, பின் அம்மன் கோயில்களுக்குச் சென்று தொன்றுதொட்டு வழக்கமாக செய்கின்றனர். இதன் மூலம் அவரவர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மங்கலம் கூடுகிறது. எண்ணிய காரியங்களை முன்னிட்டு, தீவிர சிந்தனையுடன் , தெய்வ பக்தியுடன்  சிரத்தையுடன் பணிகளை மேற்கொள்வதால் வாழ்க்கை வளமாகிறது. 

ஆக, தூய்மையே ஆரோக்கியமான, பிற நல்வளங்களையும் நல்கக்கூடியது என்கிற அடிப்படையில் “ஆடி வெள்ளிக்கிழமை”  மக்களின் வாழ்வில் சிறப்பான பங்கு வகிக்கிறது.

Exit mobile version