Home செய்திகள் ‘நாங்கள் யாருடைய B டீமும் அல்ல!’ – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் அதிரடி பதிலடி!

‘நாங்கள் யாருடைய B டீமும் அல்ல!’ – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் அதிரடி பதிலடி!

தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், தனது அரசின் கொள்கை நிலைப்பாடுகளை விளக்கியும் அதிரடியான உரையை நிகழ்த்தினார்.

தான் ஏதோ சினிமா படப்பிடிப்பில் இருந்து நேராக வந்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட்டது போல எதிர்க்கட்சிகள் பேசுவதாகக் குறிப்பிட்ட அவர், தான் 1990-கள் முதலே பல்வேறு நற்பணிகள் மூலம் மக்களுக்குத் துணையாக நின்று வருவதாகவும், தனது திரைப்படங்களின் வாயிலாக ஊழல் ஒழிப்பு, சமூக நீதி, கல்வி மற்றும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காகப் பல கடுமையானப் பிரச்சினைகளையும் தடைகளையும் சந்தித்ததாகத் தெரிவித்தார்.

மக்கள் தங்களின் நோக்கத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டதால்தான் இன்று தங்களை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் என்று சுட்டிக்காட்டிய முதலமைச்சர், “ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற கொள்கைப்படியே தனது அரசு செயல்படும் என்றும், மத்திய அரசை ஆளும் கட்சியுடன் கொள்கை ரீதியாக நேரெதிராக நின்றபோதிலும், எதற்கெடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல் தமிழகத்தின் வளர்ச்சியையே பிரதானமாக முன்னிறுத்துவோம் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

அதேநேரத்தில், மாநில உரிமைகளையும் அரசியல் ரீதியான கொள்கைகளையும் எப்போதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதில் சிறுபான்மைச் சமூகத்தினருக்கும் ஆதரவு இயக்கங்களுக்கும் எந்தச் சந்தேகமும் தேவையில்லை என்று உறுதியளித்தவர், தங்கள் கட்சி யாருடைய ‘பி’ டீமும் அல்ல, எப்போதும் தூய்மையான மக்களின் அணி என்றும், நீட் தேர்வை எதிர்ப்பதிலும் அரசு விழாக்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதிலும் தங்களின் நிலைப்பாடு மிகவும் உறுதியானது என்றும் தெளிவுபடுத்தினார்.

மேலும், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அக்கறையோடு கேள்வி எழுப்பாமல் வெறும் அவதூறு அரசியலையே செய்து வருவதாகவும் முதலமைச்சர் விஜய் தனது உரையில் கடுமையாகக் சாடினார்.

Exit mobile version