Home Uncategorized கிருஷ்ணன் என்ன கலர்?- சிறப்பு கட்டுரை!

கிருஷ்ணன் என்ன கலர்?- சிறப்பு கட்டுரை!

சிலநாட்களுக்கும் முன்னர் ஒரு ”பகுத்தறிவுப்புலியை” வழியிலே சந்திக்க நேர்ந்தது. அவர் என் நண்பர்தான். பல நண்பர்களை கொள்கை மாறுபாடுகளால் நான் விலக்கி வைத்திருக்கிறேன். அவர்களில் அவரும் ஒருவர்!

அப்போது பேச்சுவாக்கில் நான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழக்கையை வரலாறு போல் சிறிய நூலாக எளியவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் எழுதியுள்ளதைக் குறிப்பிட்டேன். அவ்வளவுதான்! நான் சொன்னதைக் கேட்டதும் வழக்கம்போல் தன் வன்ம நாக்கினைச் சுழற்றத் தொடங்கினார். 

ஸ்ரீ கிருஷ்ணரைப்பற்றி ஏதேதோ சொன்னார் அவர்! அதற்கு நான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார வாழ்வின் அடிப்படையையும், அவரின் தத்துவச்செய்திகளையும், அரசியல் சாதுர்யங்களையும் பற்றி என் சிற்றறிவிற்கு எட்டிய வகையில் பல விளக்கங்களைச் சொல்லிக்கொண்டிருந்தேன். சில ஒப்பீடுகளையும் கூறினேன். ஒரு கட்டத்தில் அவரால் சமாளிக்க முடியவில்லை! அதன்பின் ஸ்ரீ கிருஷ்ணரின் உடல் நிறத்தைப்பற்றி விமர்சித்தார். 

அவரின் அறிவுப்படி, “கிருஷ்ணர் நீல நிறத்தையுடையவன். உலகில் கருப்பு, சிவப்பு, இளஞ்சிவப்பு, வெளுப்பு, மாநிறம்” என்றெல்லாம் பல்வேறு நிறங்களில் மனித சமூகம் உள்ளது. இதுவரை யாராவது கிருஷ்ணனின் நீல நிறத்துடன் பிறந்திருக்கிறார்களா? இது மூடத்தனமில்லையா?” என்று நக்கலடித்தார். 

அந்த நண்பர் ஒரு ஓட்டைச் சட்டி! அதில் நான் அமுதத்தையே ஊற்றினாலும் கூட அந்தச் சட்டியில் தங்கப்போவதில்லை என்று புரிந்தது. ஆனாலும்,”ஊதுகிற சங்கை ஊதிவைப்போம்”என எண்ணி எனது கடமையாக, எனக்குத் தெரிந்ததைக் கூறினேன்! அதைத்தான் நான் இப்போது இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 

ஸ்ரீ கிருஷ்ணரின் நிறம் சந்தேகமேயில்லாமல் கருப்புதான்!

வடமொழியில்”க்ருஷ்”என்பது “கருப்பு” அல்லது “நீலம்” என்று பொருள்படும். கருப்பு நிறம் கொண்டவன் என்பதாலேயே”க்ருஷ்ணன்” என்று பெயர் வந்தது. 

தமிழ் மொழியில் ஒரு பெயரின் முதல் எழுத்து மெய்யெழுத்தில் தொடங்குவது மரபில்லை. மேலும் அவ்வாறு வருவது இலக்கணப்பிழை என்பதால் “க்” என்பதற்குப் பதிலாக “கி” என்று தொடங்குகிறது. ஆகவே, அவர் பெயர் கிருஷ்ணன்(ர்)!

அப்படியே தமிழாக்கத்தில் “கண்ணன்” என்று அழைக்கப்படுகிறார். 

வைணவப்பெருந்தகை, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் ”கண்ணன்” என்கிற பெயருக்கான விளக்கத்தில், “கரிய நிறமுடையவன்” என்றும் “எங்கும் நிறைந்தவன்” என்ற பொருளையும் தருகிறார். 

 

கண்ணனையே மணாளனாக கரம்பிடிக்க, மார்கழியில் பாவைநோன்பிருந்த ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கிருஷ்ணனாம் கண்ணனை “ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் பாழியந் தோளுடைய” (ஆண்டாள் திருப்பாவை பாடல் 4) என்று கண்ணனின் மேனி நிறத்தை தெளிவுறுத்தினார்.

 

பரந்து விரிந்த கடலின் நிறம் நீலம்! வானத்தின் நிறம் நீலம்! நீலம் அனைத்து நிறங்களையும் உள்ளடக்கியது. அது புனிதத்தன்மையின் நிறம்! 

ஒருவரின் பரிணாம வளர்ச்சியில் அவரின் ”ஆரா” பல நிறங்கள் ஆகலாம். நம் யோக சாதனைகளில் நாம் ஆக்ஞாவை முக்கியமாக கொண்டால், அப்போது காவி நிறமே பிரதானமாகும். அந்த நிறமே அனைத்தையும் துறப்பதற்கும், துறவறத்துக்கும், கிரியாவுக்கும் உரியது. 

 

ஒருவரது ”ஆரா” வெண்ணிறமாக இருந்தால் அவர் மிகவும் தூய்மையானவராக இருப்பார். அத்தகையவரின் இருப்பு பிரமாதமாக இருக்கும்.  ஆனால் அவர் செயல் சார்ந்தவராக இருக்கமாட்டார். ஒருவர் தன் யோக சாதனையில் உச்சபட்ச நிலையை அடைந்தபின் இந்த உலகில் செயல் செய்ய முயன்றால் அவரின் ஆரா அடர்ந்த நீலமாக இருக்கும்! 

 

அஹ்டமா சித்திகளைப்பற்றி கேட்டறிந்தவர்கள் என் நண்பரைப்போல் விவகாரமான கேள்விகளை முன்வைக்கமாட்டார்கள்! 

 

21 ஆம் நூற்றாண்டில் ”அஷ்டமா சித்திகள்” என்றால் நம்பும்படியாக இல்லை என்று கூறலாம். ஆனால், அந்த சித்திகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சித்திகளில் மேம்பட்டிருப்பார்கள். அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான சக்தி உண்டு. 

 

அஷ்டமா சித்திகள் பின்வருமாறு: 

1. அணிமா: அணுவைப் போல் சிறியதாக ஆகிக் கொள்ளும் சக்தி.

2. மகிமா: மலையைப் போல் பெரிதாக ஆகிக் கொள்ளும் சக்தி.

3. கரிமா: மிகவும் கனமாக ஆகிக் கொள்ளும் சக்தி.

4. லகிமா: மிகவும் லேசாக ஆகிக் கொள்ளும் சக்தி.

5. பிராப்தி: நினைத்ததை அடைதல், நினைத்த இடத்திற்குச் செல்லுதல்.

6. பிரகாமியம்: எதையும் தன்வசமாக்குதல், அனைத்தையும் தன்வயமாக    

   இயக்கும் சக்தி.

7. ஈசத்துவம்: எங்கும் நிறைந்திருக்கும் சக்தி, அனைத்தையும் 

       ஆளும் திறன்.

8. வசித்துவம்: அனைவரையும் தன்வசப்படுத்தும் சக்தி.

 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனாம் கண்ணனின் வரலாற்றைப் படித்தறிந்தவர்கள் அவன் “அஷ்டமா சித்திகளில்” கரை கடந்தவன் என்பதை அறிய முடியும்!

 

அணிமா சக்தி இறைவனையே குறிக்கக்கூடியது! கிருஷ்ணன் இறை அவதாரம் என்பது அனைவரும் அறிந்ததே!

 

பெரிய மலைப்பாம்பின் வயிற்றில் நுழைந்த கிருஷ்ணன் தன் ”மகிமா சித்தியால்” தன் உருவத்தைப் பெரிதாக்கி, பாம்பை கிழித்து தன் நண்பர்களைக் காத்தான்!

 

”கரிமா சித்தியால்” காளிங்கராயன் என்னும் பாம்பின் மீது நடனமாடி, தன் உடல் கனத்தை அதிகமாக்கி, அந்த நதி தீரத்திலிருந்தே விரட்டினான் கிருஷ்ணன்! குருஷேத்திரப் போரில் தன் கால் கட்டை விரலால் பூமியை அழுத்தி, தேரை தரை மட்டத்திலிருந்து கீழிறக்கி, கர்ணன் எய்த அம்பின் தாக்குதலிலிருந்து அர்ஜுனனின் தலையைக்காத்தான். இதனாலேயே ”தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று!” என்கிற சொலவடை வந்தது!

 

”லகிமா” சித்தியினால்தான் பூதகி தன்னை கொல்லவந்தபோது, அவள் தன்னை வானுக்கு தூக்கிச்சென்றபோதும் தன்னை கனமாக்கிக் கொள்ளாமல் லேசாக ஆக்கிக்கொண்டான்!

 

”பிராப்தி” சித்தியினை கிருஷ்ணன் பெற்றிருந்ததைப்பற்றி கேட்கவே தேவையில்லை! ‘பாஞ்சாலி” துகிலுரிக்கப்பட்டபோது அந்த அவையில் பிரசன்னமானது பிராப்தியினால்தான்! 

போகர் சித்தர் ”பிராப்தி” எனப்படும் சித்தியால் சீனதேசம் வரை சென்று வந்திருக்கிறார்! 

 

20 ஆம் நூற்றாண்டில் சென்னை அன்ணாசாலைக்கு அருகாமையில் உள்ள கோமளீஸ்வரன் பேட்டையில் (தற்போதைய ”புதுப்பேட்டை”) வசித்த “சர்க்கரை அம்மாள்” எனும் பெண் சித்தர் இத்தகைய சித்தியைப் பெர்றிருந்ததாகவும், தான் நேரில் அந்த காட்சியைக் கண்டதாகவும் கூறியுள்ளார். (அந்த அம்மாளின் ஜீவசமாதியானது சென்னை பெசண்ட் நகரில், கலாஷேத்ரா சாலையில் உள்ளது. நேரம் கிட்டும்போது நான் சென்று தரிசித்து வருகிறேன்) 

 

”பிரகாமியம்” எனும் சக்தியால்தான் கிருஷ்ணன் மண்ணை உண்டதைப்பற்றி கேள்விப்பட்டதும் கோபமாக வந்த யசோதை அவன் வாயைத்திறக்கச் சொன்னபோது, அதன்படி திறந்தான்! ஆனால் அங்கே மண்ணுக்குப் பதிலாக பிரபஞ்சத்தையே காட்டினான்! அதேநேரம் யசோதை அதனை உணர முடியாமல் தன் வசப்படுத்தினான்! 

 

”ஈசத்துவம்” எனும் சித்தி .. தனது நரசிம்ம அவதாரத்திலேயே ”தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்!” என்று தன்னைப் பற்றி சொல்ல வைத்தவன்! தான் இருக்குமிடத்திலிருந்தே பாண்டவர்கள், கெளரவர்கள் என அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் கட்டி ஆண்டான் கிருஷ்ணன்!  

 

வசித்துவ சித்தியினால்தான் துர்வாச முனிவர் மற்றும் அவரது சீடர்கள் வனத்தில் வசித்த பாண்டவர்களின் குடிலுக்கு பசியாற வந்தபோது, பாஞ்சாலி உணவு சமைக்க முடியாமல் தவித்தபோது, கழுவிக் கவிழ்த்திருந்த பாத்திரத்தில் ஒட்டியிருந்த ஒற்றைப் பருக்கையை தான் சாப்பிட்டு, துர்வாசர் குழுவினரின் பசியை தன் உணவால் போக்கினான்! உலக இயக்கங்கள் அனைத்தும் அவனுக்கு கட்டுப்பட்டவை என்பதை அனைவரும் அறியும் வகையில் தன் வசப்படுத்தினான்!

 

இத்தகைய சித்திகளை முழுமையாகப்பெற்றவர்களின் தேகம் “ஆரா” என்கிற அலைகளால் காந்தப்புலன்போல சூழப்பட்டிருக்கும். ஆரம்ப நிலையில் அதன் நிறம் வெண்மையாக இருக்குமாம்! அஷ்டமா சித்திகளில் உச்சத்தைத் தொட்டவர்களின் ”ஆரா” நீல நிறமாக இருக்குமாம்! 

 

நம் நெஞ்சமெல்லாம் நிறைந்த கிருஷ்ணன் அஷ்டமா சித்திகளில் கரைகளோ, கறைகளோ அற்ற அவதார நாயகன்! அவன் நீல நிறமாக அடையாளம் கொள்ளப்படுவதில் என்ன குற்றம்? 

 

ஆக, நம் நாட்டின் புனித, புண்ணிய வரலாறு, புராண, இதிகாசங்கள், காப்பியங்கள், ஆன்மீக  நம்பிக்கைகள், தெய்வங்களின் உருவங்கள் ஆகியவை பெரும்பாலும் குறியீடுகள்! அவை ஒவ்வொன்றுக்கும் குதர்க்கம் பேசி கொந்தளிக்கக் கூடாது. 

 

மங்கையர் திலகம் படத்தில் கவிஞர் மருதகாசி அவர்கள் எழுதிய..

”நீல வண்ண கண்ணா வாடா

நீ ஒரு முத்தம் தாடா

நிலையான இன்பம் தந்து

விளையாடும் செல்வா வாடா

நீல வண்ண கண்ணா வாடா.. ” என்கிற பாடல் வரிகளும், 

 

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் “நானும் ஒரு பெண்” என்கிற படத்தில் 

”கண்ணா… கருமை நிறக் கண்ணா

உன்னைக் காணாத கண்ணில்லையே

கண்ணா… கருமை நிறக் கண்ணா

உன்னைக் காணாத கண்ணில்லையே

உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை

என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை

(கண்ணா…)

 

 

மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா

நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா

மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா

நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா

இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா

இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா

நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா

 

கண்ணா… கருமை நிறக் கண்ணா

உன்னைக் காணாத கண்ணில்லையே”

எழுதிய பாடல்கள் எல்லாம் பலநூல்களைப் படித்து, பகுத்தறிந்து, தமிழ்மணம் கமழ தந்தவை. 

 

ஸ்ரீ கிருஷ்ணன் எனப்படும் கண்ணன் கருமை நிறம் கொண்டவன்! அல்லது நீல நிறம் கொண்டவன்! எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்! அது அவரவர் விருப்பம். ஸ்ரீ கிருஷ்ணரை அறிவுப்பூர்வமாக உணர்ந்தவர்கள் ஒருபோதும் தேவையற்றதைப் பேசமாட்டார்கள் என்பது திண்ணம்!

 

அடுத்து அதே நண்பர் வருணாசிர தத்துவம் குறித்து பேசியதையும், அதற்கு நான் கொடுத்த பதிலையும் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையோடு எழுத முயற்சிக்கிறேன். 

 

மு.பழனிவாசன் 

Exit mobile version