Friday, September 25, 2026
HomeUncategorized”யானை” – மு.பழனிவாசன் ( பகுதி 1)

”யானை” – மு.பழனிவாசன் ( பகுதி 1)

மமூத்:

யானை ஒரு காட்டுவிலங்காக அறியப்பட்டாலும், வரலாற்றின் தொடக்ககாலம் முதலே அது மனிதகுலத்திற்கு மிகவும் நெருக்கமான தோழமைமிகுந்த உயிரினமாகவே விளங்கி வருகிறது என்பதை நாம் நன்கறிவோம்.

    பல ஆண்டுகளுக்கும் முன்னர் “மாமூத்” என்கிற இனம் தற்போதைய யானை குடும்பத்தின் முன்னோடியாக (எலிபண்டா குடும்பம்) சொல்லப்படுகிறது.

மாமூத் இனம் தற்போதைய யானைகளை விட நினைத்துப் பார்க்கவே திகிலூட்டும் தோற்றத்துடன் இருந்திருக்கின்றன என்பது ஆங்காங்கு கிடைக்கப்பெற்ற படிமங்களை ஆய்வு செய்த வல்லுனர்களின் தரவுகளின் மூலம் அறியமுடிகிறது.  அவ்வாறு கிடைக்கபெற்ற படிமங்களில் தற்போதைய சீனாவின் முக்கியமான “சேங்குவா” நதிக்கரையில் கிடைக்கப்பெற்ற படிமமே அளவில் பெரியதென்று கூறுகிறார்கள்.  

    சேங்குவா நதிக்கரையில் கிடைக்கப்பெற்ற மாமூத்தின் படிமமானது, உயரம் 4.7 மீட்டர், நீளம் 9 மீட்டர் உடையதாகவும், அதன் தந்தம் மட்டுமே 3 மீட்டருக்கும் மேலே நீண்டிருந்திருக்கக்கூடும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மேலும், சுமார் 8 முதல் 9 டன் எடையுள்ளதாகவும் இருந்திருக்கக்கூடும் என்றும், இவை மட்டுமின்றி பொதுவாக பிற மாமூத் இனத்தினைப்போலவே கடும் குளிரையும் தாங்கும் வகையில் அதன் உடல் முழுமையும் அதிக ரோமங்கள் நிறைந்து இருந்திருக்கக்கூடும் என பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியானால், எத்தகைய பிரமாண்டமாக இருந்திருக்கும் என எண்ணிப்பார்த்தாலே தலைசுற்றுகிறது. இத்தகைய உயிரினம் இயற்கை மாறுபாடுகளாலோ அல்லது வேறு காரணங்களாலோ, கிட்டத்தட்ட டைனோசர் இனம் போல், ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கும் முன்னர் முற்றிலும் அழிந்துபோயிருக்கிறது. அந்த இனத்தின் குடும்பமரபுகளின் வழிவந்தவையே நாம் காணும் “யானை இனம்”.

   

பூமிப்பந்தில் உள்ள ஏழுகண்டங்களில் ஆப்பிரிக்க கண்டம் மற்றும் ஆசிய கண்டங்களிலும் மட்டுமே தற்போது யானைகள் உயிர் வாழ்கின்றன. இவ்விரண்டில் ஆப்பிரிக்க கண்டத்தில் வாழும் யானைகளை விட, ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் வாழும் யானைகள் பிரமாண்டத்தில் இரண்டாம் இடத்தையும், பேரழகில் முதலிடத்தையும் பிடிக்கின்றன. அதேபோல் பெரும்பாலும் காட்டுவிலங்காக மட்டுமே ஆப்பிரிக்க யானைகள் வாழ்கின்றன. அவை மனிதர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தவை அல்ல. ஆனால், ஆசிய யானைகள் அப்படியல்ல. இந்தியா, நேபாளம், வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் மனிதவாழ்வில் கலாச்சார ரீதியாகவும், ஆசிய யானைகள் பின்னிப் பிணைந்துள்ளன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் யானைகளின் பங்களிப்பு மிகவும் உயரிய ஒன்று.

யானையின் பரவலாக்கம்:

    நமது புராண, இதிகாசங்கள், தெய்வீக வரலாறு போன்றவை, தொன்றுதொட்ட மன்னராட்சி காலம்முதல் இன்றைய மக்களாட்சி காலம் வரையிலும் தொடரும் யானைக்கும் மனிதர்களுக்குமான உறவி பெருமை அளப்பரியது.

    சனாதன கடவுளர்களில் “இந்திரன்” (தேவர்களின் தலைவன்) எனப்படும் தெய்வத்தின் வாகனம் “ஐராவத யானை”. முருககடவுள் சூரனை வதம் செய்ததும், தனது மகள் தேவானையை முருகனுக்கு திருமணம் செய்வித்தபோது, அவருக்கு தன் வாகனமான ஐராவத யானையை மணமகள் வீட்டு சீதனமாக தந்ததாக குறிப்புகள் உண்டு. முருககடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி திருத்தலத்தில் முருகனனின் வாகனம் மயில் அல்ல. இந்த ஐராவத யானையே.

    தமிழ்கூறும் நல்லுலகின் ஆகச்சிறந்த பெருமையான சங்க இலக்கியப்பாடல்களான அகநானூறு, புறநானூறு, நற்றிணை போன்ற எண்ணற்ற நூல்களில் யானையைப் பற்றிய செய்திகள் பரவலாக உண்டு. அவை யானையின் வீரம், திறம் ஆகியவற்றினை மட்டும் பாடாமல் அவற்றின் பண்புநலன்களை மேற்கோள்காட்டி பெருமைப் பட்டிருக்கின்றன. 

    சங்ககாலத்தமிழகத்தில், ஒரு நாட்டின் மன்னனின் வீரம், பண்பு, செல்வச்செழிப்பு மட்டுமின்றி அந்நாட்டின் வளமையை, மக்களின் மேன்மையை, அம்மன்னனின் சாதனைகளைப்பற்றி செந்தமிழ்ச் செய்யுள்களால் பாடி, பரிசில் பெறுவது தமிழ்ப்புலவர்களின் வழக்கம். அவ்வாறு பாடியமைக்காக அந்த புலவர்களுக்கு யானைகள் கூட பரிசளிக்கப்பட்டதாக இலக்கியக் குறிப்புகளைக் காண்கிறோம்.  இவை மட்டுமா? மதுரை மீனாட்சியின் அரசாட்சி குறித்து பாடும் ”அல்லி அரசாணி மாலை” என்ற பாடல் தொகுப்பில் ‘மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்லென்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை‘ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த 2021 அழகர்கோவில் அருகே உள்ள புலிப்பட்டி கிராமத்தில் சுமதி என்ற பெயர் உடைய யானையை நெற்கதிர்களின் மீது உலாவவிட்டு போரடித்த காட்சி, சங்க கால நினைவுகளை கொண்டு வந்திருக்கிறது. சில தமிழ்த்திரைப்படங்களிலும் கூட ‘யானையைக்கொண்டு போரடிக்கும்” காட்சிகள் உண்டு.          

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments