Home Uncategorized வண்டலூர் உயிரியல் பூங்காவில் 10 குட்டிகளை ஈன்ற மஞ்சள் நிற அனகோண்டா பாம்பு!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 10 குட்டிகளை ஈன்ற மஞ்சள் நிற அனகோண்டா பாம்பு!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மஞ்சள் அனகோண்டா பாம்பு பத்து குட்டிகளை ஈன்றது. சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. இதனை தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் சென்னை முதலை பண்ணையில் இருந்து ஒரு ஜோடி மஞ்சள் அனகோண்டா பாம்பு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வழங்கப்பட்டது. அந்த பாம்புகளை பூங்கா நிர்வாகம் தனியாக கண்ணாடி கூண்டில் அடைத்து பராமரித்து வருகிறது.

 பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த மஞ்சள் அனகோண்டா பாம்பு ஒன்று நேற்று முன்தினம் பத்து குட்டிகளை ஈன்றது. இதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த பூங்கா ஊழியர்கள், உடனடியாக பூங்கா நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து 10 மஞ்சள் அனகோண்டா பாம்பு குட்டிகளையும் தாய் பாம்பிடம் இருந்து தனியாக பிரித்து, அதனை ஒரு கூண்டில் வைத்து ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர். இந்த மஞ்சள் நிற அனகோண்டா பாம்புகள் ஆறு முதல் ஏழு அடி வரை வளரக்கூடியது. அனகோண்டா பாம்புகளுக்கு கோழிக்குஞ்சுகள் இறைச்சியாக வழங்கப்படுகிறது. புதிதாகப் பிறந்த அனகோண்டா பாம்பு குட்டிகள் நல்ல நிலையில் முதிர்ச்சி அடைந்த பிறகு, பொதுமக்கள் பார்வைக்காக விடப்படும் என்று பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

Exit mobile version