ஸ்டார்ட் ஆக்ஷன்.
அத்தியாயம்.15.
இயக்குனர். பீம்சிங்.
திரைப்படத் துறையில் இயக்குனர் என்ற தலைமை பொறுப்பு ஒருவருக்கு கிடைப்பதே கடினமான விஷயம்! அதிலும் 60 படங்களுக்கும் மேலாக இயக்கி.. அவற்றில் பல படங்களை வெள்ளி விழா படங்களாகவும் உருவாக்குவது என்பது ஒரு இமாலய சாதனை..
நடிப்பு மதயானை.. திரு. சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு பசிக்கு.. . தீனி போடுவது..
அதுவும்.. 18 படங்கள்.. நடிகர் திலகத்தை இயக்குவது..
ஒரே வருடத்தில் மூன்று வெள்ளி விழா படங்களை தருவது…
இவைகளையெல்லாம் சாதித்தவர் யார்? இயக்குனர் பீம்சிங் அவர்கள்!.
பூர்வீகம்..ராஜஸ்தான்..!.. சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதியில்
1924 – அக்டோபர் -15ஆம் தேதி பிறந்தார்! பிரபல இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவிடம் உதவி பட தொகுப்பாளராக தன் கலை வாழ்க்கையை துவக்கினார்!. பிறகு உதவி இயக்குனராக அவர்களிடமே பணி செய்தார்!
சில காலத்தில் … இயக்குனராகும் எண்ணம் வந்தது!..
தன்னுடைய ஆசையை கிருஷ்ணன்-பஞ்சு அவர்களிடம் சொல்ல அவர்களும் அவரை வாழ்த்தி… அதற்கு வழியும் காட்டினார்கள்!..
இயக்குனர் கிருஷ்ணனின் தங்கையையும் பீம்சிங் அவர்கள் திருமணம் செய்தார்!..
‘செந்தாமரை’..
அவர் இயக்கிய முதல் படம்!.
பலப் பல சோதனைகளால்.. அந்த திரைப் படம்.. வளரவில்லை.. தட்டுத் தடுமாறி வளர்ந்து 12 வருடங்களுக்கு பின்னால்தான் ரிலீஸ் ஆனது!
அம்மையப்பன் அவர் இயக்கி வெளி வந்த முதல் படம்!..
தோல்வியை சந்தித்தது!
முதன் முதலில் இயக்க ஆரம்பித்த படமும்.. தடையாகி.. நிற்க.. தன் இயக்கத்தில் வெளி வந்த முதல் படமும் தோல்வி அடைந்தால்.. அந்த இயக்குனரின் எதிர்காலமே கேள்விக் குறியாகாதா?
அவருக்கு அடுத்த படம் கிடைப்பது ரொம்ப கஷ்டம்! அத்தோடு அவருடைய திரையுலக வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்று கூட சொல்லலாம்!..
ஆனாலும் பீம்சிங் அவர்கள் மனம் தளரவில்லை!.அவருடைய விடா முயற்சியின் மூலமாக 1956 இல் ராஜா ராணி என்ற படத்தை இயக்கினார்!.. அந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்கள்! நாயகனாக நடித்தவர்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்!..
படம் பேசப்பட்டது!
வெற்றி இயக்குனராகப் பீம்சிங் அவர்கள்.. வலம் வர.. ஆரம்பித்தார்! அவருக்கு தொடர்ந்து படங்களை இயக்கும் வாய்ப்புகள் வந்தது! அந்த நேரத்தில் அவர் ஒரு தெளிவான முடிவுக்கு வந்தார்.. குடும்பக் கதைகளை படமாக்குவது மட்டுமே அவரது பாணியாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்!
குடும்ப உறவுகளின்..அன்பு…பாசம் பரிவு… பகைமை.. பொறாமை.. பேராசை.. தெய்வீகம்.. இவைகள் மட்டுமே தன் படங்களில் அங்கம் பெற வேண்டும் என்று நினைத்தார்!. குடும்பச் சித்திரம் என்ற வார்த்தைக்கு 100% பொருத்தமாக தன் படங்கள் அமைய வேண்டும் என்று முடிவெடுத்தார்!
அது போலவே படங்களை இயற்றினார்!..
AVM.. தயாரிப்பில் உருவான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப் படத்திலிருந்து
இயக்குனர். திரு.பிரகாஷ் ராவ் அவர்கள்.. விலகிக் கொண்டதால்.. அந்தப் படத்தின்.. பெரும் பகுதி காட்சிகளை திரு.பீம்சிங் அவர்கள்.. இயக்கினார்..!
அந்தப் படத்தில் தான் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் ஒரு குழந்தை நட்சத்திரமாக .. அறிமுகமானார்…!
1960 ல் களத்தூர் கண்ணம்மா வெளியாகி பெரும் வெற்றி பெற்றது!..
இசை அமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி திரையுலகில் வளர்வதற்கும் …. வெற்றி பெறுவதற்கும் இயக்குனர் பீம்சிங் அவர்கள் உறுதுணையாக இருந்தார்!..அவர்கள் இசையமைப்பில் வெளி வந்த பாடல்கள் சாகாவரம் பெற்றவையாக மாறின! .
‘பா’ என்ற எழுத்தில் துவங்கும் பல படங்களை இயக்கினார் !
பல வெள்ளி விழாக்களையும் கண்டார்!.
பா வரிசையில் ‘பதிபக்தி’ 1958 ..லும் ‘பாகப்பிரிவினை’ 1959.. லும் வெளியாகு.. வெற்றி படைத்தன!.. பாகப்பிரிவினையில் ஒரு மாற்றுத் திறனாளி உணர்வுகளை அற்புதமாக சித்தரித்திருந்தார்!
அதைத் தொடர்ந்து 1960 இல் ‘படிக்காத மேதை’
1961 … இயக்குனர் பீம்சிங் அவர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான வருடம்!..
அந்த வருடத்தில் ‘பாசமலர்’ … ‘பாலும் பழமும்’… ‘பாவ மன்னிப்பு’…. என மூன்று வெள்ளி விழா படங்களை இயக்கினார்..!
ஒரு இயக்குனர் ஒரே வருடத்தில்.. மூன்று பிரம்மாண்ட வெற்றிப் படங்களை படைப்பது என்பது சாத்தியமே இல்லாத விஷயம்!
அதை இயக்குனர். பீம்சிங் அவர்கள்.. சாதித்துக் காட்டினார்!..
‘பாசமலர்’ …. அண்ணன் தங்கை உறவை கவித்துவமாக.. சொன்ன படம்!
‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’ இந்தப் பாடல் இன்றும் நம் இல்லங்களில் ஒலிக்க தவறுவதில்லை!
‘காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பாடல்.. இன்றும் காதல் இதயங்களை இதமாக வருடி கொடுத்துக் கொண்டிருக்கிறது!
‘நதியில் விளையாடி …கொடியில் தலை சீவி… நடந்த இளம் தென்றலே…’ என்றெல்லாம் கவியரசு கண்ணதாசன் அவர்கள்… தன் கவி நயம் உச்சத்தில் பிரதி பலிக்கும்படி.. திரைப் பட பாடல்களுக்கு இலக்கிய அந்தஸ்து வரும்.. வகையில் …பாடல்களை படைத்திருப்பார்!
நடிப்புக்கு இலக்கணமாக திரு.சிவாஜி கணேசன் அவர்களும் திருமதி. சாவித்திரி அவர்களும் நடித்திருப்பார்கள்!
‘பாசமலர்’..படத்தில்..பணக்கார முதலாளி..ஏழைத் தொழிலாளி … நிலையை வர்ணித்து.. திரு. ஆருர்தாஸ் அவர்கள்.. எழுதிய வசனங்களில் ஆழமான கம்யூனிசத்தை பறை சாற்றினார் !..
படத்தின் முடிவு அனைவரையும் உறைந்து போக வைக்கும்!
‘ கைவீசம்மா …கை வீசு..’ என்றபடி அண்ணன் இறந்து.. போக.. அதே.. நொடியில்.. தங்கை.. தன்.. உயிரையும் விட்டு விடுவாள்!.. மக்களை கண்ணீர் வெள்ளத்தில் மூழ்க வைத்த அற்புத கிளைமேக்ஸ் …அது!..
வாழ்க்கையில் எல்லாமே நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது நமக்கு நாமே சோதனையும் வரவழைத்துக் கொள்வோம்!. இல்லையா?
அதே மாதிரி திரைப் படத் துறையை பொறுத்த வரை ஒரு துறையில் வெற்றிகரமாக இருப்பவர்கள் … அந்த துறையிலிருந்து இன்னொரு துறைக்கு மாறும் போது அவர்கள் திரையுலக வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படும் … திரையுலகிலேயே இல்லாத சூழல் உருவாகி விடும் !…திரைப்படத் துறையில் உள்ள இந்த எழுதப்படாத விதி… சில கலைஞர்கள் வாழ்வையும்.. கலங்க வைத்துவிடும்!..
அந்த வகையில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்த இயக்குனர் பீம்சிங் அவர்கள் தயாரிப்பாளராகி எடுத்த ஒரு படம் அவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டது!..
‘அப்துல்லா’….!
நகைச்சுவை நடிகர் சந்திரபாபு அவர்கள் தனக்காக அப்துல்லா என்கின்ற பெயரில் ஒரு கதை எழுதியிருந்தார்!..அந்தக் கதையைக் கேட்ட இயக்குனர் பீம்சிங் அவர்கள்.. அதே பெயரில்.. படத்தை தயாரித்து இயக்கினார்..!.
நாலரை லட்சம் ரூபாய் வரை செலவு செய்து… 2000 அடிகள் வரை.. படத்தை எடுத்திருந்தார் இயக்குனர் பீம்சிங் அவர்கள்!..
ஆனால் எடுத்த காட்சிகளை போட்டு பார்த்து அவருக்கு திருப்தி கிடைக்கவில்லை!
படத்தை தொடர்ந்து எடுக்க அவர் விரும்ப வில்லை! படத்தை கைவிட்டால். குருவி போல சேர்த்து வைத்திருந்த நான்கரை இலட்சத்தையும்.. இழக்கும்.. நிலை.. வந்து விடும்?
குழம்பிய.. நிலையில் இயக்குனர். பீம்சிங்.. தவித்த.. வேளை..
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்
