மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறை வெளியிட்டுள்ள புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 22%, 25%, 27% மற்றும் 30% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் எரிபொருட்களுக்கு (Ethanol blended petrol) மத்திய கலால் வரியிலிருந்து (Central Excise Duty) முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கோடும் ஜூன் 10, 2026 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின்படி, இந்தியத் தர நிர்ணய அமைப்பின் (BIS – IS 19850) விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் இந்த உயிரி எரிபொருள் கலவைகளுக்கு ‘பூஜ்ஜியம்’ (Nil) கலால் வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 78% பெட்ரோல் மற்றும் 22% எத்தனால் கலந்த எரிபொருள், 75% பெட்ரோல் மற்றும் 25% எத்தனால் கலவை, 73% பெட்ரோல் மற்றும் 27% எத்தனால் கலவை, மற்றும் 70% பெட்ரோல் மற்றும் 30% எத்தனால் கொண்டு தயாரிக்கப்படும் எரிபொருட்களுக்கு இந்த வரிவிலக்கு முழுமையாகப் பொருந்தும்.
கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், உள்நாட்டிலேயே எத்தனால் உற்பத்தியை ஊக்குவித்து பசுமை ஆற்றலை நோக்கி நாட்டை நகர்த்தவும் மத்திய அரசு எடுத்து வரும் தொடர் முயற்சிகளின் மிக முக்கிய அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்த புதிய வரிவிலக்கு அறிவிப்பு பார்க்கப்படுகிறது
