மாதர் சங்க மாநில தலைவர்களில் ஒருவரான கஸ்தூரி அவர்களுடைய நினைவு நாளை ஒட்டி செப்டம்பர் 14 தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத சட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து சிறப்பாக செயல்படுத்திட வலியுறுத்தியும் பொது வினியோகத்தில் கைரேகை வைக்கும் பயோமெட்ரிக் முறையை முறைப்படுத்தி அனைத்து அத்தியாவசிய பொருட்களும் முறையாக, தரமாக வழங்கிட வலியுறுத்தியும் அரசு அலுவலகங்கள் முன்பு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் ஒரு கோடியே 25 லட்சம் விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 70 லட்சம் விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது சட்ட கூலியாக 273 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால் எங்கேயும் குடும்பத்திற்கு 100 நாட்கள் வேலை கிடைக்கவில்லை. 30 முதல் 80 நாட்கள் வரை மட்டுமே வேலை கிடைக்கிறது. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில ஊராட்சிகளில் மட்டுமே 100 நாட்களும் வேலை வழங்கப்பட்டுள்ளது. சம்பளம் குறைந்தபட்சம் 80 ரூபாய் முதல் 230 ரூபாய் வரை கிடைத்துள்ளது. சட்ட கூலியான 273 ரூபாய் வழங்கப்பட்டதாக எங்கும் பயனாளிகள் கூறவில்லை. மண்ணின் தன்மைக்கு ஏற்ப வேலை கொடுக்காமல் ஏகமாக ஒரே மாதிரியான அளவுகளை தமிழகம் முழுவதும் வழங்கப்படுகிறது.
கூலியைக் குறைத்துக் கொடுப்பதற்காகவே இப்படிப்பட்ட அளவீடுகள் அமையும்.வயதானவர்கள் மாற்றுத் திறனாளிகள் கற்பினி பெண்கள் போன்றவர்களுக்கும் இதர பயனாளிகளை போலவே அளவீடுகள் வழங்கப்படுகிறது. தற்போது தமிழக அரசு புதிய மாநகராட்சிகள் அறிவித்த பகுதிகளில் ஏராளமான ஊராட்சிகள் இணைகிறது. இந்த ஊராட்சிகளில் பணிபுரிந்த 100 நாள் வேலை பயனாளிகளுக்கு தொடர்ந்து வேலை வழங்கப்படுமா அல்லது நிறுத்தப்படுமா என்ற சந்தேகம் தொழிலாளர்கள் மத்தியில் உள்ளது. எனவே தற்போது 100 நாள் வேலையை முறையாக அமல்படுத்த வேண்டும். முழுமையான சம்பளம் வழங்கப்பட வேண்டும். சட்டத்தில் கூறப்பட்டுள்ள முதலுதவிப் பெட்டி,நிழற் கொட்டகை ,குடிநீர், குழந்தைகள் காப்பகம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அமைக்கப்பட வேண்டும். இச்சட்டத்தை பேரூராட்சிகளுக்கும் நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

