நான் சினிமாவில் இயக்குநர் பிரிவில் இணை இயக்குனராகப் பணியாற்றினாலும் திரைப்படங்கள் சார்ந்த விமர்சனங்கள் எதையும் எழுத்தாகுவதில்லை. பொதுவாக நண்பர்களுடன் கதை விவாதத்தில் ஈடுபடும்போது மட்டும் மைக்ரோ அனலைஸிங் செய்வது உண்டு. முதன்முறையாக “35 சின்ன விஷயமில்ல..” என்கிற படத்தை ”Z திரைச் சேனலில்” முழுமையாகப் பார்த்தேன்.
அந்த படம் பார்த்து சில தினங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் அந்த படத்தின் கதையோட்டம் மனதைவிட்டு அகலவேயில்லை!
சில படங்கள் மட்டுமே இப்படி “ப்ப்சக்”கென்று மனச்சுவரில் பபுள்கம் போல் ஒட்டிக்கொள்ளும். இந்த படமும் அப்படித்தான்!
அவன் 35 மதிப்பெண்களைப் பெற்று இலக்கைத் தொட்டானா? இல்லையா? என்பதே க்ளைமாக்ஸ். (நீங்கள் அந்தப்படத்தை தேடிப்பிடித்து பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே முழுக்கதையையும் விவரமாக எழுதவில்லை)
அந்த படம் ஒரு திரைப்படம் கிடையாது. திரையில் நடத்தப்படும் பாடம்! மாணவ-மாணவியர் நல்லுறவு எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியர் – குழந்தைகளுக்கிடையே நல்லிணக்கம் பேணுவது எப்படி? பள்ளியின் நடக்கும் பிரச்சினைகளை அந்த பள்ளியின் ஒரு தலைமை நிர்வாகியாக அறிவுப்பூர்வமாக எப்படி அணுகவேண்டும்? குழந்தைகள் எப்படி ஒற்றுமையாக பள்ளியில் இருக்க வேண்டும்? ஒரு தாயின் போராட்டம் எப்படி வலிமை மிகுந்ததாகவும், தியாக சிந்தனையுடனும் இருக்க வேண்டும்? என்பதோடு மட்டுமல்லாமல், ஒரு திரைப்படத்தை எப்படி நேர்த்தியுடன் உருவாக்க வேண்டும்? என்பன போன்ற பல்வேஅறு கேள்விகளுக்கும் பதில் சொல்லும் படம்“35சின்ன விஷயமில்ல!”
கணவன் மனைவியருக்குள் கமலஹாசன் பாணியில் காமரசம் சொட்டும் சல்லாபக் காட்சிகள் இல்லை!
ஆசிரியர்களுக்கிடையே வஞ்சமோ காதலோ இல்லை!
வேறு எந்த கிளையாகவும் காதல்கதை என்கிற பெயரில் கலாச்சார சீரழிவுக் காட்சிகள் இல்லை!
பள்ளிக் குழந்தைகளுக்கிடையே வன்முறை மனோபாவம் இல்லை!
சண்டைக்காட்சிகளோ, குத்தாட்டங்களோ இல்லை!
தலையில் அடித்துக்கொள்கிற மாதிரியான பஞ்ச் வசனங்கள் இல்லை!
கடத்தல் இல்லை! கொலை இல்லை! பழி தீர்க்கத் துடிக்கும் குடும்ப, நட்புகள் இல்லை!
நசுக்கிட்டான்.. பிதுக்கிட்டான்.. என்கிற சாதிய ரீதியிலான கூப்பாடுகள் இல்லை!
மதரீதியிலான வன்மங்கள் இல்லை!
அரசியல் சூழ்ச்சிகள் இல்லை!
இப்படி எதுவுமில்லாமலே ஒரு அருமையான திரைப்படத்தை இயக்குனர் ”நந்தா கிஷோர் எமானி” அவர்கள் உண்மையிலேயே உலகத்தர வரிசைக்கு உயர்த்தப்பட வேண்டும். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசையமைப்பு, பாடல் வரிகள், ஒப்பனை, உடையலங்காரம், கலை போன்ற ஒரு திரைப்படத்திற்குத் தேவையான அனைத்து பக்கபலங்களையும் கச்சிதமாக வேலை வாங்கியிருக்கிறார் என்பது வணங்கத்தக்க விஷயம்.
இப்படிப்பட்ட திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகி இருக்கிறது என்பது வருந்தத்தக்க விஷயம். இது போன்ற படங்கள் தியேட்டர்களில் ரிலீஸாக வேண்டும். வெகுஜனக்கூட்டம் சென்று பார்க்க வேண்டும். ஆனால், நிலைமை வேறாக இருக்கிறது.
குடும்ப உறுப்பினர்களை பழிவாங்குவதையே ழுமூச்சாகக் கொண்ட தொ(ல்)லைக்காட்சித் தொடர்களைப் பார்த்து நாசமாகும் தமிழகத்து தாய்மார்கள் அவசியம் இது போன்ற திரைப்படங்களைப்பார்க்க வேண்டும்.
முன்பெல்லாம் பள்ளிகளில் தேசபக்திப்படங்கள் மற்றும் ஜெமினி கணேசன் நடித்த “ராமு” போன்ற திரைப்படங்கள் காட்டப்படும். இந்த படமும் அந்த வரிசைக்கு உட்பட்டதே!
சிறந்த நடிகர் உள்ளிட்ட விருதுகள் வழங்கும் அனைத்து கவுண்டர்களும் ஓ.டி.டி.யில் வெளிவரும் சமூக அக்கறையுள்ள “35 சின்ன விஷயமில்ல” போன்ற படங்களுக்கு தேடிச்சென்று விருதுகள் வழங்க வேண்டும். குறிப்பாக மத்திய, மாநில அரசு விருதுகள் வழங்கப்பட வேண்டும். அத்தகைய திரைப்பாடங்களுக்கு மதிப்பு கூடும். மக்கள் மத்தியில் அதிக அளவில் சென்று சேரும். இதையெல்லாம் செய்வதால் திரைத்துறை மிளிரும்.
இத்திரைப்படத்தின் இயக்குனர் மீது எனக்கு பொறாமையும், சிறந்த கலைஞனாகிய அவருக்கு வாய்ப்பு வழங்கிய இத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு எனது நன்றியும் உரித்தாகுக!
ஏனென்றால் இது போன்ற நல்ல திரைப்படங்கள் வருவது ”சின்ன விஷயமில்ல..”
மு.பழனிவாசன்
