இந்திரனும் – ஏ.ஐ. தொழில்நுட்பமும்
மு.பழனிவாசன்
சமூக வலைதளங்களில் ஜெகஜாலம் காட்டிவரும் என் நண்பர் ஒருவரின் சமீபத்தைய புலம்பல் “போங்கப்பா நீங்களும் உங்க சட்டமும்”.
இன்று உலகமே “Artificial intelligence (A.I)” எனப்படும் “செயற்கை நுண்ணறிவு” வலையில் சிக்கி இருக்கிறது. அதி நவீன விஞ்ஞான யுகத்தில் என்னென்னவோ சாத்தியப்படுகின்றன. சிறு குழந்தைகள் கூட ஏ.ஐ (A.I) நுட்பத்தில் பிரமிப்பூட்டும் வகையில் கலக்குகின்றன. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால், இதற்கும் என் நண்பரின் புலம்பலுக்கும் என்ன தொடர்பு?
மத்திய அரசு சமீபத்தில் ஏ.ஐ நுட்பத்தை பயன்படுத்துவோருக்கு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அதாவது சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ஏ.ஐ. தொழில் நுட்பத்தினால் குறிப்பாக புகைப்படம் அல்லது வீடியோ என எதை உருவாக்கினாலும், ”அந்த ஏ.ஐ. வடிவமானது, ஏ.ஐ.தொழில் நுட்பத்தினால்தான் தயாரிக்கப்பட்டிருக்கிறது” என தெள்ளத்தெளிவாக குறியீட்டுடன் வெளியிட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்குத்தான் நண்பரின் புலம்பல். அதாவது மத்திய அரசு ஊடக சுதந்திரத்தை பறிக்கிறது என்பதே நண்பரின் குற்றச்சாட்டு.

ஏ.ஐ. தொழில் நுட்பம் உண்மையில் மிரட்டலான ஒன்றுதான் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், அது வர்த்தக ரீதியிலாகவோ அல்லது பொழுதுபோக்கு அம்சமாகவோ பயன்படுத்தும்போது அசலான பிம்பங்களுக்கும், ஏ.ஐ. என்னும் நகல் பிம்பத்திற்கும் வேறுபாடுகளை காணமுடியாத அளவிற்கு இருக்கிறது. இதனால், துஷ்பிரயோகம் மிகுந்து, பல்வேறு குழப்பங்களுக்கு ஆளக நேரிடும். விவரம் அறியா மக்கள் (மெத்த படித்தவர்கள் கூட) போலியான, வதந்தியான ஒரு செய்தியை அச்சு அசலாக தோற்றமளிக்கும் வகையில்காணப்படும் பதிவுகளைக் கண்டு ஏமாறுகிறார்கள். இதனால் சட்டரீதியிலான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன. இதனால்தான் மத்திய அரசு சிற்சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. பலரும் அஞ்சி நடுங்கும் அளவிற்கு ஒட்டுமொத்தமாக ஏ.ஐ.தொழில் நுட்பத்தையே தடை செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இதைப்பற்றி ஏதோ எனக்குத் தெரிந்த வகையில் நண்பரிடம் விளக்கியபோது என் மூளைக்குள் பல்பு மின்னி மின்னி எரிந்தது! அதாவது இந்த ஏ.ஐ. தொழில்நுட்பம் என்ன புதிதாகவா வந்துள்ளது? ஏற்கனவே நம் நாட்டில் இருந்ததுதானே! என மனம் குறுகுறுத்தது! என் நினைவில் வந்தது கெளதம முனிவர் – அகலிகை – இந்திரன் ஆகிய மூவரையும் உள்ளடக்கிய கதை.
கெளதம முனிவரும் அகலிகையும் கணவனும் மனைவியுமாவர். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் இருந்தது. தேவர்களின் தலைவன் இந்திரன் ஒரு மல்லுவேட்டி மைனர். பேரழகியாக விளங்கிய அகலிகை மீது அவனுக்கு கொள்ளை ஆசை. அவளை எப்படியாவது அடைந்துவிட தக்க சமயத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. உடனே அதை செயல்படுத்திவிட களத்தில் குதித்தான்.

ஒருநாள் நள்ளிரவு நேரம். இந்திரன் சேவல் போன்று கூவுகிறான். ”அடடா.. பிரம்ம முகூர்த்தம் நெருங்கி விட்டது போல. அதனால்தான் சேவல் கூவுகிறது” என்று நதியில் நீராடுவதற்காக செல்கிறார்.”தான் எதிர்பார்த்த தக்க தருணம் இதுவே” என இந்திரன், கெளதம முனிவரின் ஆசிரமத்திற்குள் செல்கிறான். தன் கணவர்தான் வந்துவிட்டாரென அகலிகை மதிமயங்கி விடுகிறாள். அந்த சந்தர்ப்பத்தை இந்திரன் பயன்படுத்திக்கொள்கிறான். நீராடச் சென்றபோது, தான் மிகச்சீக்கிரமாக வந்துவிட்டதை உணர்ந்து மீண்டும் ஆசிரமத்திற்கே வருகிறார். சட்டென சுதாரித்த இந்திரன் ஒரு பூனையின் வடிவெடுத்து அங்கிருந்து நழுவி விடுகிறான். அங்கே வந்து சேரும் கெளதம முனிவர் அனைத்தையும் யூகித்துவிடுகிறார். தவறிழைத்த அகலிகை கல்லாக மாறும்படி சாபம் கொடுத்து, இராமபிரான் பாதம் எப்போது அந்த கல்லின் மீது படுகிறதோ.. அப்போது சாபத்திலிருந்து விமோசனம் பெறமுடியும் என்றும் தெரிவித்து விடுகிறார். அதன் பின் நடந்தவை அனைத்தும் எல்லோருக்கும் தெரியும். ஆகவே இத்துடன் நிற்க.
இதுவரை சொல்லப்பட்டவற்றில் இந்திரன் சேவலாகா மாறியது, பூனையாக மாறியது எல்லாம் தற்கால சி.ஜி (Computer Graphics – கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்), கெளதம முனிவராக உருமாறி வந்தது தற்கால ஏ.ஐ (செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligent) ஆகியவற்றிற்கு சமமாகும்.
ஆக, அசல் எது? சித்தரிக்கப்பட்டது எது என்கிற வேறுபாடுகளற்ற நிலைதான் அகலிகை ஏமாந்து போவதற்கு காரணமாகும். ஒருவேளை அத்தகைய வேறுபாடு ஏதாவது ஒருவகையில் தெரியுமாறு நுட்பக்குறியீடு இருந்திருந்தால் எவ்வித பிரச்சினைக்குமே இடம் இல்லாமல் போயிருக்கும்.

தற்கால அறிவியல் முன்னேற்றத்தின் ஆகச்சிறந்த பரிமாணமான ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் ”பூனைக்கு நான் மணி கட்டுகிறேன்? என்றூம், போலிகளால் யாரும் ஏமாந்து போய்விடக்கூடாதென்றுதான் தற்போதைய மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நன்மைதானே தவிர, அவர்கள் பாதிக்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. சோப்பு, குளிர்பானம், இன்னும் பல்வேறு பொருட்களுக்கு வணிக முத்திரை வழங்குவதுடன், “இப்படி இருந்தால்தான் எங்கள் ஒரிஜினல் சரக்கு” என்று எச்சரிக்கையும் அறிவிப்பும் தருவது போன்றுதான்.
உண்மையில் இன்றைய காலநிலவரம் என்னவென்றால், ஆணோ, பெண்ணோ எவராயினும் தங்கள் புகைப்படத்தையோ, வீடியோவையோ எப்போது? எங்கே? எதில் பதிந்தோம்? என தங்களுக்கே நினைவில் நில்லாத வகையில் பொதுவெளியில் பதிவிடுவது.. தாங்களே ஆப்பில் சென்று அமர்வது போன்றுதான் என்பதை இளைய தலைமுறை உணர வேண்டும்.
Also Read:

