அப்பக்குடத்தான் பெருமாள் அருள் புரியும் திருப்பேர் நகர்
அறந்தாங்கி சங்கர்
அருள்மிகு இந்திரா தேவி, கமல வல்லி தாயார் உடனுறை அப்பக்குடத்தான்
திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம்.
திருப்பேர் நகர்,கோவிலடி, என்ற ஊரில் அமைந்திருக்கிறது
சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவிலாக கோவிலடி அருள்மிகு அப்பக்குடத்தான் கோயில் இருக்கிறது.
இக்கோவிலின் இறைவனான பெருமாளின் மூலவர் அப்பக்குடத்தான் என்றும், உற்சவர் அப்பால ரங்கநாதர் எனவும் அழைக்கப்படுகிறார். தாயார் இந்திரா தேவி, கமல வல்லி என்கிற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்கும் முற்பட்ட கோயிலாக இருக்கிறது கோவிலடி அப்பக்குடத்தான் திருக்கோயில்.

ஆழ்வார்களில் நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயிலாக இது இருக்கிறது.
கோவில் புராணப்படி உபமன்யு என்கிற அரசன் துர்வாச முனிவரிடம் சாபம் பெற்று தனது அனைத்து செல்வங்களையும் இழந்தான். இதனால் மனம் கலங்கிய உபமன்யு துர்வாசரிடம் தன்னை மன்னித்து தனக்கு சாப விமோச்சனம் அளிக்கும் படி கெஞ்சினான். இதனால் மனமாறிய துர்வாச முனிவர் பலசவனம் எனும் இத்தலத்தில் லட்சம் பேருக்கு அன்னதானம் அளித்தால் உனது சாபம் நீங்கும் என கூறி சென்றார்.
அவர் கூறிய படியே உபமன்யு இத்தலத்தில் அரண்மனை நிர்மாணித்து தினந்தோறும் அன்னதானம் அளித்து வந்தான்.
ஒரு நாள் பெருமாளே ஒரு ஏழை அந்தணர் வடிவில் உபமன்யுவின் அன்னதான பந்தலுக்கு வந்து உணவருந்தினர்.
உபமன்யுவின் விருந்தோம்பல் குணத்தை சோதிக்க எண்ணிய பெருமாள் அனைத்து உணவுகளையும் அவர் ஒருவரே தின்று முடித்தார்.

இதை கண்டு அதிசயித்த போதிலும், அந்த அந்தண பெரியவரிடம் உபமன்யு வேறேதாவது வேண்டுமா என கேட்க, அவரும் தனது பசி அடங்க அப்பம் செய்து கொண்டுவருமாறு கூறினார்.
அப்பங்கள் தயாரிக்கப்பட்டு, அந்த அப்பங்கள் நிறைந்த குடத்தை அந்தணர் வடிவிலிருந்த பெருமாளிடம் கொடுத்த போது உபமன்யுவின் சாபம் நீங்கி மீண்டும் தனது செல்வங்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்றான்.
அப்பக்குடத்தை இத்தலத்தில் பெற்றதால் இந்த இறைவனுக்கு அப்பக்குடத்தான் என்கிற பெயர் உண்டானது.
திருமால் ரங்கநாதர் வடிவில் இருக்கும் ஸ்ரீரங்கபட்டணம், ஸ்ரீரங்கம், கும்பகோணம், திருஇந்தளூர் ஆகியவற்றோடு இந்த கோவிலடி அப்பக்குடத்தான் கோவிலும் சேர்ந்து “பஞ்சரங்க” தலங்களாக விளங்குகிறது.
ஒருமுறை அப்ப குடத்தான் பெருமாளை தரிசனம் செய்து உங்களுடைய வாழ்வில் வளமும் நலமும் பெற வேண்டுகிறோம்..
ஓம் நமோ நாராயணாய..
அறந்தாங்கி சங்கர்
Also Read:
Rcommendations:

