நடிகர் வடிவேலு புதிய படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். இந்நிலையில் வடிவேலு நடிப்பில் உருவாகவுள்ள படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை தியாகராயநகர் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக நான் அனுபவித்துள்ள துன்பத்தை வேறு யாரும் அனுபவிக்க முடியாது. வைகைப் புயல் என என்னை சொல்வார்கள் , இடைப்பட்ட ஆண்டுகளில் என் வாழ்வில் பல சூறாவளிப் புயலையே சந்தித்து விட்டேன். கடந்த 4 ஆண்டில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்ததற்கு கடவுள்தான் காரணம்
கொரோனா தொற்று எல்லோரையும் மிரள வைத்துவிட்டது. கொரோனா காலத்தில் எனது காமெடி மக்களுக்கு மருந்தாக அமைந்ததை எண்ணி மனைதே தேற்றி கொண்டேன். சுபாஷ்கரன் எனக்கு வாழ்க்கை கொடுத்து சபாஷ்கரன் ஆகிவிட்டார். எனது பயணம் நகைச்சுவை பயணமாக இனி தொடரும். சாகும் வரை நகைச்சுவை நடிகனாக தொடர வேண்டும் என்பதே எனது ஆசை.
முதல்வரை நேரில் சென்று சந்தித்தேன். முதல்வரை பார்த்த பிறகு எனது வாழ்க்கை பிரைட் ஆகி விட்டது. இப்போது எனக்கு எல்லாமே நல்லதாக நடக்கிறது. திமுக ஆட்சி நன்றாக இருக்கிறது , மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். நாய் சேகர் கதாபாத்திரத்தை உருவாக்கிய மூளை என்னுடையதுதான். இப்படத்தில் நயன்தாரா நடிப்பதாக எல்லாம் எனக்கு எந்த தகவல் இல்லை. இந்த படத்தில் கதாநாயகி கிடையாது. இந்த படத்தின் இரு பாடல்களில் ஒரு பாடலை நான் பாடுகிறேன்.
எனக்கு முடிவே கிடையாது. இடைப்பட்ட காலத்தில் கால் வைத்த இடமெல்லாம் கண்ணி வெடியாக அமைந்தது. என் மூலம் நட்டம் ஏற்பட்டதாக இயக்குநர் சங்கர் சொன்னது எல்லாம் பொய். சங்கரின் சாவகாசமே இனி எனக்கு வேண்டாம் , சங்கர் இருக்கும் ஏரியா பக்கமே இனி போக மாட்டேன். வரலாற்று படம் நடிப்பதற்கு இனி வாய்ப்பில்லை. அரசியல் குறித்து எந்த முடிவும் இல்லை.
எனக்கு ரெட் கார்ட் போடப்பட்டது என்பதே பொய். வாய்மொழியாக கூறப்பட்ட வார்த்தை இது. முன்பு நடித்ததை விட இனி பிரமாண்டமாக நடிப்பேன். நடிகைகள் பலரிடமிருந்து என்னுடன் நடிப்பதற்கான அழைப்பு வருகிறது. லாரன்ஸ் , அர்ஜூன் போன்றவர்களும் புதிய படம் தொடர்பாக பேசி வருகிறார்கள். மீம்ஸ் மூலம் உடனுக்குடன் கவுண்ட்டர் கொடுக்கிறார்கள். மீம்சில் இருந்து யாரும் தப்ப முடியவில்லை. எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்கள் சந்திரபாபு , தங்கவேலு , தேங்காய் சீனிவாசன் சுருளிராஜன் ஆகியோர். சூரி, யோகிபாபுவும் நன்றாகவே நடிக்கின்றனர்.
இதுவரை இணையத் தொடரில் நடிக்கவில்லை. ”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்”.. என்று பாடத் தோன்றுகிறது. உதயநிதி ஸ்டாலின் கூட நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். விவேக் எனக்கு அருமையான நண்பன் . அவரது இறப்பு பெரும் வேதனையை தந்தது. அவர் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. இவ்வாறு வடிவேலு கூறினார்.

