Wednesday, March 11, 2026
HomeUncategorizedஉள்ளாட்சி தேர்தல் : அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை வழக்கு

உள்ளாட்சி தேர்தல் : அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை வழக்கு

*உள்ளாட்சி தேர்தல் : அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை வழக்கு!* *உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!* திமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தும் கோரிக்கை குறித்து செப்டம்பர் 29க்குள் அதிமுகவிற்கு விளக்கம் அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 13 ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியான அதிமுக தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், மாநிலம் முழுவதும் அல்லாமல் 9 மாவட்டங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படுவதால் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த எந்த காரணமும் இல்லை எனவும்,சட்டமன்ற தேர்தலே ஒரே கட்டமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்துவது கள்ள ஒட்டு போடுவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாக போய்விடும் என அச்சம் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும்,கொரோனா விதிகளை அமல்படுத்த வலியுறுத்தியும் அதிமுக வின் இணை ஒருஙகிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14 ம் தேதி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் இன்பதுரை தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, வெளி மாநில தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும்,

மத்திய காவல் படையை பணியமர்த்த வேண்டும், தேர்தலை முழுமையாக சிசிடிவி பதிவு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை மாநில தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும் பதிலளிக்கவில்லை என வாதிட்டார்.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், அரசு பிளீடர் முத்துக்குமார் ஆஜராகி, 14900 வாக்குச்சாவடிகளுக்கும் போது பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பிற்கு போடப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நியாமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி அமர்வு, தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவது அவசியம் என கருத்து தெரிவித்தனர்.

மேலும் மாநிலத்தில் பிரதான கட்சி என்ற முறையில் அதிமுக அளித்த கோரிக்கை மனுவை பரிசீலித்து, அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை, மனுதாரருக்கு செப்டம்பர் 29க்குள் தெரிவிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments