சவால் விடும் அண்ணாமலை திராணி இருந்தால் தொட்டு பார்க்கட்டும்’ முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என திமுக.,வுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சமீபகாலமாக திமுக அரசு, பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு முறைகேடாக மின்சார ஒப்பந்தம் செய்துள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். இதனை எதிர்த்து பி.ஜி.ஆர் நிறுவனம் அண்ணாமலை மீது 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல், தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம் தொடர்பாகவும் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளா் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலையிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை அதிமுக அமைச்சர்களை பிளாக் மெயில் செய்து பணம் வசூலிப்பதாக என் மீது திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். நான் இன்னும் 6 மணி நேரம் தமிழக பா.ஜ., அலுவலகத்தில் இருப்பேன். திராணி இருந்தால், உண்மையாகவே ஆதாரம் இருந்தால், என்னை கைது செய்யுங்கள். நான் தனி ஆளுதான். தொட்டம்பட்டியில் இருந்து வந்த என்னை தொட்டு பார்க்கட்டும். இல்லையென்றால் நம் மீது தொடுக்கப்படும் பொய்களுள் இதுவும் ஒரு பொய்யாக கருதப்படும்.
திமுக போல கோழைத்தனமாக கண்டன நோட்டீஸ் கொடுப்பதல்லாம் எங்களுக்கு வராது. திமுக எம்.பி., வில்சன் என் மீது ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனவே, பி.ஜி.ஆர் நிறுவனம் ரூ.500 கோடி, ஆர்.எஸ்.பாரதி ரூ.100 கோடி, வில்சன் ரூ.10 கோடி என மொத்தம் ரூ.610 கோடி. என்னிடம் இரண்டு டப்பா, ஊரில் ஆடுகள், மாடுகள் உள்ளது; இதை வேண்டுமானால் பிடித்துக்கொண்டு போங்கள். ஒரு சாதாரண மனிதனை மதித்து 610 கோடி ரூபாய் கேட்கின்றனர். அதற்கு நான் வொர்த் இல்லை. ஆயிரம் நோட்டீசை சந்திக்க தயார். மிரட்டுங்கள் பார்க்கலாம். மிரட்டலில் யார் ஜெயிக்கிறாங்கன்னு பார்ப்போம்.
நான் முதல்வர் ஆவதற்கு பா.ஜ.,வில் இணையவில்லை. அதற்கான தகுதியும் எனக்கு இல்லை. ஆனால், பா.ஜ.,வை சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவேன். அதை செய்த பின், என் கடைசி காலத்தில் சொந்த கிராமத்தில் ஆடு, மாடு மேய்க்க சென்று விடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

