மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவாக சித்ரா பவுர்ணமியன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வுக்காக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதற்காக கள்ளழகர் வேடம் புரிந்து, தங்கப்பல்லக்கில் அழகர்கோயிலில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு கள்ளழகர் மதுரை புறப்பட்டார்.
கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் வாசலில் சிறப்பு பூஜைக்கு பின், அங்கிருந்து புறப்பட்டு, பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி சுந்தர்ராஜன்பட்டி, கடச்சனேந்தல், வழியாக இரவு முழுவதும் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
நேற்று அதிகாலை மூன்றுமாவடிக்கு வந்த கள்ளழகரை, மதுரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து புதூர், ரிசர்வ்லைன், தல்லாகுளம் பகுதியில் எதிர்சேவை நடைபெற்றது. இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு வந்தார்.
இன்று அதிகாலை 2.30 மணிக்கு தல்லாகுளம் பிரச்சன்ன வெங்கடாஜலபதி கோயிலில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு, தங்கத்குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டு, வழியில் உள்ள கருப்பண சுவாமி கோயில் அருகே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.
பின்னர் அதிகாலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்கினார். அழகரை தெற்குமாசி வீதி வீரராகவப்பெருமாள் வரவேற்கிறார். ஆற்றில் இருந்து புறப்பட்டு பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டகப்படியில் பக்தர்களின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பின்பு வழிநெடுக பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளும் கள்ளழகர் இரவு வண்டியூர் பெருமாள் கோயிலை சென்றடைகிறார். #

