Friday, March 13, 2026
HomeUncategorized64 வது நாயன்மார்

64 வது நாயன்மார்

ஒருமுறை சனாதனத்தின் ஆன்மீகச்செம்மலான ஒரு பெரியவர் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அந்த பெரியவர் எப்போதும் தன் நெற்றி நிறைய விபூதி பூசுவது வழக்கம். அன்றும் அதேபோல்தான் மணமணக்க விபூதி பூசியிருந்தார்.

இதனை அதே பெட்டியில் அவருக்கு எதிரில் பயணித்த இளைஞர் ஒருவர் கண்டார். உடனே கிண்டலான தொனியில், “இது என்ன சுவருக்கு வெள்ளை அடிப்பது போல் பட்டை அடித்துள்ளீர்கள்?” என கேட்டார். அதற்கு அந்த பெரியவர், “ஆம் ஐயா… உண்மைதான்.

புழக்கத்தில் இருக்கும் வீட்டுச்சுவற்றில்தான் வெள்ளை அடிப்பார்கள். அதேபோல் இறைவன் குடியிருக்கும் உள்ளத்திற்குச் சொந்தமானவர்கள்தான் நெற்றியில் வெள்ளை (விபூதி பூசுவார்கள்) அடிப்பார்கள் . புழக்கத்தில் இல்லாத பாழடைந்த குட்டிச் சுவருக்கு யாரும் வெள்ளை அடிக்கமாட்டார்கள்.” என பதிலளித்தார்.

இதைக்கேட்டதும், அந்த இளைஞன் ”தான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன், ஆகவே தன்னைத்தான் அவர் குட்டிச்சுவர்” என்று கூறுகிறார் என புரிந்து கொண்டு வெட்கித் தலைகுனிந்தான். அந்த ஆன்மீகப் பெரியவர்தான் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள்தான்.

1906 ஆண்டு தமிழகத்தின் காட்பாடி அருகே உள்ள காங்கேய நல்லூர் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் தந்தையும் ஆன்மீகசிந்தனையில் திளைத்தவர். தனது 12 வது வயதிலேயே சுமார் 16000 இறையருள் திறனைப் போர்றும் பாடல்களை மனப்பாடம் செய்தவர்.

கிருபானந்த வாரியாருக்கு 19 வது வயதில் திருமணம் நடைபெற்றது. இதே வயதில்தான் இவர் தனியாக ஆன்மீக சொற்பொழிவு ஆற்றத் தொடங்கினார். தமிழ் இலக்கண, இலக்கியங்களில் ஆழ்ந்த புலமைகொண்டவராக வாரியார் சுவாமிகள் திகழ்ந்தார்.

இவரது சொற்பொழிவு பாணியே மிகவும் அலாதியானது. மெத்த படித்தவர்களுக்கும், மேட்டுக்குடியினருக்கும் புரியும் வகையில் பலரும் ஆன்மீக சொற்பொழிவை ஆற்றிவந்த காலத்தில், படிக்காத பாமரர்களும், சிறு குழந்தைகளுக்கும் புரியக்கூடிய எளியநடையில், அனைவரும் விரும்பக் கூடிய நகைச்சுவை ததும்பும் வண்ணம், சாதாரண பேச்சு வழக்கிலேயே உரையாற்றியவர்.

இது வெகுஜன மக்களை வெகுவாக ஈர்த்தது. தன் சொற்பொழிவின் இடையே அந்தந்த காலகட்டத்தில் நிலவிய சமூக நிலையையும் பொருத்தி, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டி மக்களை நல்வழிப்படுத்தியதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு.

தனது சொற்பொழிவின் இடையிடையே சிறுகதைகள் சொல்வதில் வல்லவர். மேலும் அவ்வப்போது மக்களை நோக்கி கேள்விகள் கேட்டு, சரியாக பதில் சொல்லியவர்களுக்கு ஆன்மீகப் புத்தகங்களை வழங்குவது வழக்கம். தனது சொற்பொழிவுப் பணியில் தன் வாழ்நாளின் இறுதிவரை எவரையும் தனது வாரிசாக அறிவிக்கவேயில்லை என்பதே உண்மை. அப்படி ஒருவேளை அவர்

அறிவித்திருந்தாலும்கூட, அந்த வாரிசு வாரியாரின் வாரிசாக ஒருபோதும் மாறிவிட முடியாது. வாரியார் விட்டுச்சென்ற இடத்தை இன்னொரு பிறப்பெடுத்து வாரியாரே நிரப்பினால்தான் உண்டு என்பதை அவரை நன்கறிந்தவர்கள் நிச்சயம் உணர்வர்.

சனாதனத்தின் சைவநெறியின் ஆதாரங்களாக விளங்கும் தேவாரம், திருவாசகம், அருணகிரிநாதரின் திருப்புகழ், பாலதேவராய சுவாமிகளின் சஷ்டி கவசம் மற்றும் வடலூர் வள்ளல் பெருமான் அவர்களின் சிவநெறி பாடல்களையும் பாமர மக்களிடமும் கொண்டு சேர்த்தவர்.

தனக்கென வாழ்க்கையில் வாரிசு இல்லாத கிருபானந்த வாரியார் அவர்கள் தனது சொற்பொழிவின் மூலம் ஈட்டிய பொருளையெல்லாம் கோயில் திருப்பணிகள், வறியவர்களுக்கான அறச்செயல்கள் ஆகியவற்றிற்கே செலவிட்டவர். பல்வேறு திருக்கோயில்களுக்கு இவரால்

திருக்குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. முழுமையான ஆன்மீகச் செம்மலாக ஊறித்திளைத்த கிருபானந்த வாரியார் அவர்கள், தனது முதுமைகாலத்தில் பல திரைப்படங்களிலும் நடித்து அரிய பல ஆன்மீக கருத்துக்களால் மக்களை தன்பால் ஈர்த்தவர்.

இவர் பங்கேற்ற திரைப்படங்களென்றால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆயினும் தனது இயல்பான தோற்றத்திலேயே காட்சிகளில் பங்கேற்று, ஆன்மீகம் சார்ந்த கருத்துக்களை மட்டுமே பேசி அந்த கதாபாத்திரங்களில் வாழ்ந்தவர். திரைப்பட நடிகராக எம்.ஜி.ஆர் இருந்த காலத்தில் அவருக்கு வாரியார் சுவாமிகள் “பொன்மனச்செம்மல்” என்னும் பட்டத்தினை வழங்கினார்.

எம்.ஜி.ஆர் அவர்களுக்கு, அவரது குணாதிசயங்களுக்கு மணிமகுடம் சூட்டிய இந்தப்பட்டமானது இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடமபெற்றுள்ளது. பலநூறு கட்டுரைகள், நூல்கள் ஆகியவற்றை எழுதிய வாரியார் சுவாமிகள் முருக கடவுளிடம் மிகுந்த பற்றுடையவராக விளங்கினார்.

தனது இறுதிக்காலத்தின்போது தன்னை முருககடவுள் மயில் வாகனத்தினை அனுப்பி அழைத்துக்கொள்வார் என கூறுவதுண்டு. 1993 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆன்மீக சொற்பொழிவிற்காக இங்கிலாந்திற்குச் சென்றார்.

அடுத்து நவம்பர் மாதம் 7 ஆம் தேதி இந்தியாவிற்கு திரும்பும் வழியில் ஆகாயத்தில் அவர் விமானம் பறந்துகொண்டிருந்தபோதே, அவரது உயிர் இறைவனின் திருவடிக்கு சென்று சேர்ந்தது. பொதுவாக நாயன்மார்கள் போன்ற இறையடியார்களை புஷ்பகவிமானத்தில் ஏற்றிச்சென்றதாக ஆன்மீகச் செய்திகள் உண்டு.

அதேபோன்று வாரியார் சுவாமிகளை இறைவன் ஒரு விமானத்திலேயே அழைத்துக்கொண்டான் என்பது பிரம்மிக்கத்தக்க விஷயமாகும்.

இதனால் சைவநெறியில் 63 நாயன்மார்களின் வரிசையில் 64 வது நாயன்மாராக திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வணங்கப்படுகிறார். வாழ்க தமிழ்! வளர்க ஆன்மீக நெறி ! ஓங்குக வாரியார் புகழ் !

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments