Home செய்திகள் தமிழக மக்களின் அன்பால் நிகழ்ந்த அதிசய வெற்றி: தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சி!

தமிழக மக்களின் அன்பால் நிகழ்ந்த அதிசய வெற்றி: தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சி!

தமிழக அரசியல் களத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தலைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு, மக்கள் அளித்துள்ள பேராதரவு இந்திய அரசியலையே அதிர வைத்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கட்சி ஆரம்பித்த நாள் முதல் சந்தித்த ஏளனங்களையும், விமர்சனங்களையும் கடந்து, எவரையும் சாராமல் மக்களை மட்டுமே நம்பி நின்ற தில்லான பயணத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தாயன்போடு வெற்றியைப் பரிசாக அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, இந்தப் போரில் பணநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு, நேர்மையான ஜனநாயகம் வென்றுள்ளது என்றும், மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாகத் தவெக உருவெடுத்திருப்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் ஆழமாக நிரூபித்துள்ளன என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குக் காரணமான தமிழக மக்கள், கழகத் தோழர்கள், நிர்வாகிகள் மற்றும் ‘Virtual Warriors’ ஆகியோருக்குத் தனது வாழ்நாள் நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், இம்முறை வாக்களிக்கத் தவறிய மக்களின் மனங்களையும் வரும் காலங்களில் தவெக வென்றெடுக்கும் என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version