எம்பெருமான் சிவபெருமானின் 64 உருவத்தோற்றங்களில் ஒன்றுதான் சரபேஸ்வரர்.
தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார்.
ஆக, மனிதன், பறவை, மிருகம் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர் உருவம். பாலகன் பக்தபிரகலாதனின் தந்தையான இரண்யகசிபுவை வதம் செய்ய பாற்கடல் நாராயணன் தூணிலிருந்து நரசிம்மராக வெளிப்பட்டார். இரண்யகசிபுவின் வயிற்றைக்கிழித்து, குடலை எடுத்து, இரத்தம் குடித்ததால் நரசிம்மரின் உக்ரமானது மேலும் பன்மடங்கானது. ஆக்ரோஷம் அடங்காமல் கர்ஜித்த நரசிம்மரை சாந்தப்படுத்த தேவர்கள் சிவனை வேண்டினர்.
இதனால் சூழலின் அவசியம் கருதி சிவன் எடுத்த ஒரு உக்ரமான தோற்றமே “சரபேஸ்வரர்” தோற்றம். பார்வதியின் உக்ர வடிவமான சூலினி ஒரு இறக்கையில் சூட்சமமாக இருக்க, சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ப்ரத்யங்கரா தேவி மற்றொரு இறக்கையில் சூட்சமமாக இருக்க, இவர்கள் இருவரின் உதவியுடன், கேட்போரின் குலைநடுங்கச்செய்யும் ஓங்காரமான குரலெழுப்பினார் சரபேஸ்வரர். அந்த குரலும், விசித்திரத்தோற்றமும் நரசிம்மருக்கே அச்சமூட்டியது. அதனால் உடனே நரசிம்மர் சரபேஸ்வரரைத் தாக்க முற்பட்டார். ஆயினும் யுத்தம் ஏதும் புரியாமலேயே, தன் இறக்கைகளை மென்மையாக படரவிட்டு சரபேஸ்பேஸ்வரர் நரசிம்மரை அணைத்துக்கொண்டார்.
அந்த மென்னையான ஸ்பரிஸத்தால் நரசிம்மர் எடுத்திருந்த ஆக்ரோஷ நிலையை கட்டுக்குள் கொண்டுவந்து அனைவரின் அச்சத்தையும் போக்கி, அமைதியை நிலைநாட்டியது சரபேஸ்வரரே.
சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் ஆகிய தீவினைகளிலிருந்தும், பீதியூட்டும் கனவுத்தொல்லைகளிலிருந்தும், தீராத நாட்பட்ட நோய்களிலிருந்தும், இனம் புரியாத அச்சங்களிலிருந்தும், அமைதியற்ற குடும்பச்சூழல்களிலிருந்தும், திருமணத் தடைகளிலிருந்தும், தைரியக் குறைபாடுகளிலிருந்தும், அனைவரையும் மீட்டு, ஆனந்தமான வாழ்வினை வழங்க வல்லவர் சரபேஸ்வரர்.
இவருக்கு பட்சிகளின் அரசன், சாலுவேஸ்வரன், நடுக்கம் தீர்த்த பெருமான் என பல்வேறு பெயர்களாலும் வணங்கப்படுகிறார். ஞாயிற்றுக் கிழமைகளில் இராகுகால நேரமான மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக இவரை வணங்குவது மிகவும் சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.
மூன்றாம் குலோத்துங்கச் சோழன் இன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருபுவனம் எனும் ஊரில் சிவபெருமானுக்கு கம்பகரேசுவரர் எனும் திருப்பெயருடன் ஒரு கோவிலை கட்டி எழுப்பினான்.
இந்த கோயிலில் சரபேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது.
