நாளை சட்டமன்றத்தில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு, தார்மீக ஆதரவு திரட்டும் வகையில் முதலமைச்சர் விஜய் இன்று (மே 12, 2026) பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.
இதன்படி, சென்னையில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) அலுவலகம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் (சத்தியமூர்த்தி பவன்) ஆகியவற்றிற்குச் சென்று ஆதரவு கோரும் அவர், தொடர்ந்து தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுகவின் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோரை அவர்களது அலுவலகத்தில் சந்தித்துப் பேசுகிறார்.
இதனைத் தொடர்ந்து பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ளும் முதலமைச்சர், மாலையில் தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய்காந்தையும், வேளச்சேரியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) அலுவலகத்தில் திருமாவளவன் உள்ளிட்ட நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து ஆதரவுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவிக்கவுள்ளார்.
சட்டமன்றத்தில் தோழமைக் கட்சிகள் மற்றும் ஆதரவு அளிக்கும் கட்சிகளுடனான இந்தத் தொடர் சந்திப்புகள், நாளைய வாக்கெடுப்பில் தவெக அரசின் பலத்தை உறுதிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
