மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்
விளக்கம்:
நறுமணத் திரவியம் பூசிய கூந்தலை உடையவளே! பாலும் தேனும்போல் தித்திக்கும் சொற்களைப் பேசுபவளே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது பாதங்களையும் உச்சியையும் காண முடியாத பெருமையை உடையவராய் மலை வடிவாய் நின்றவர் சிவன். ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய்.
நாம் மட்டுமல்ல. இவ்வுலகில் உள்ள மற்றவர்கள், விண்ணுலகத் தேவர்கள், ஏன் இன்னும் இடைப்பட்ட உலகங்கள் இருந்தால் அங்குள்ளவர்கள் என அனைவரின் அறிவிற்கும் அப்பாற்பட்டவன் சிவன்.
அப்படிப்பட்ட பெருமைக்குரியவனின் கோலத்தையும் எளியவர்களான நம்மையும் ஆட்கொள்ளும் அவன் சீலத்தையும் பாடி உணர்ச்சிப் பெருக்குடன் சிவனே சிவனே என்று ஓலமிட்டு நாங்கள் அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறாயே?`
என்று தோழியை எழுப்புகிறார்கள் வந்த பெண்கள்.
(‘மாலறியா நான்முகனும் காணா’ என்ற சொற்றொடர் திருமாலும் பிரம்மனும் சிவபெருமானின் அடிமுடி தேடிய புராணத்தைச் சொல்கிறது. திருமால் லட்சுமியின் கணவர். பிரம்மன் சரஸ்வதியின் கணவர். செல்வத்தாலோ கல்வியாலோ கடவுளை அறிய இயலாது. பக்தியால் மட்டுமே அறிய இயலும் என்பது இந்தக் கதையின் உட்பொருள். செல்வத்தாலும் கல்வியாலும் விளையும் ஆணவம் கடவுளை அறியத் தடையாய் நிற்கும் என்பது இப்பாடலில் உணர்த்தப்படுகிறது.)
