Home Uncategorized இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்

இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்

பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு, உரிமை வழங்க வலியுறுத்தி மத்திய அரசு சார்பில் ஜன. 24ல் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

2008ல் இத்தினம் உருவாக்கப்பட்டது. ஆண் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி, சுகாதாரம், சத்தான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும், பாலின பாகுபாடின்றி பெண் குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது. 

இந்நிலையில் பெண் குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக ஒரு தினம் வேண்டுமா என்கிற கேள்வி பலருக்கும் எழலாம். மொத்தமாக குழந்தைகள் தினம் என ஒரு நாள் ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டு வருகிறதே. எதற்காக பெண் குழந்தைகள் தினம்? என்னும் சந்தேகம் உதிக்கலாம். சொல்லப்போனால் இந்த தினம் கொண்டாடப்படுவதற்காக என்று சொல்வதை விட, பெண் குழந்தைகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்த விவாதங்களை முன்வைக்கவும், அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கவும் இந்த தினம் நிச்சயம் வேண்டும்.

முந்தைய காலத்தில் தான் பெண் குழந்தைகள் உரிமை மறுக்கப்பட்டது, பெண் சிசுவை கொலை செய்வது போன்ற செயல்கள் அரங்கேறின. இப்போதெல்லாம் அப்படி இல்லை என்று கூறினால், அது நம் அறியாமையை காண்பிக்கும்.நாம் மேற்கூறிய வரிகளை வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட நம் தேசத்தில், ஒரு இடத்தில் குழந்தைத் திருமணம் என்னும் கொடுமைக்கு ஒரு பெண் குழந்தை ஆளாகி இருக்கும். இன்னும் நம் சமூகம் பெண் குழந்தைகள் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பல்வேறு தீங்குகளை விளைவித்துக்கொண்டு தான் இருக்கிறது.

பெண் பிள்ளை பிறந்தால் வீட்டுக்கு லக்ஷ்மி வந்ததாக அர்த்தம், பெண் குழந்தைகளே அனைத்து விதமான செல்வங்களையும் கொண்டு வரும் தேவதைகள் என்று அவர்களை போற்றிப் பாடும் துதியை முதலில் நிறுத்துவோம். ஆணோ, பெண்ணோ எந்தக் குழந்தையாக இருப்பினும் சமமாக நடத்துவதில் தான் நம் தேசத்தின் சமநிலை இருக்கிறது. அதையே பெண் குழந்தைகள் தினமும் நமக்கு எடுத்துரைக்கிறது.

இருந்த போதிலும் பெண் குழந்தையை சுமையாக கருதாமல், அவர்களை கொண்டாடும் இளம் தலைமுறை பெற்றோர்களால் தற்போதைய சமூகம் மாறத் தொடங்கி இருக்கிறது என்பதும் உண்மை.

Exit mobile version