இந்துமுன்னணி கருப்பு கொடி போராட்டம்
இடிக்கப்பட்ட இரண்டு விநாயகர் கோவில்களை மீண்டும் கட்டாமல் நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்தை திறந்தால் விழா நாளன்று இந்துமுன்னணி கருப்பு கொடி போராட்டம் நடத்தும்
திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முற்றிலுமாக இடிக்கப்பட்டு புதியதாக கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் இரண்டு முகப்புகளில் பாக்கியவிநாயகர், கல்யாண விநாயகர் கோவில்கள் இருந்தன. அரச மரத்தடியில் அருள்பாலித்த அந்த இரு விநாயகர் கோவில்கள் மிகப்பிரசித்தி பெற்றவை.
பேருந்து நிலைய புதுப்பிப்பு பணிகள் போது அந்த இரண்டு கோவில்களும் இடிக்கப்பட்டு பேருந்து நிலையம் திறக்கப்படும் போது இரண்டு புதிய கோவில்கள் அமைக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் உறுதியளித்தது.
அந்த இரண்டு கோவில்களும் தமிழக அரசின் இந்துசமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் ஆகும்.
ஆனால் பேருந்து நிலைய பணிகள் நிறைவடைந்து திறக்கப்படும் நிலையில் உள்ளது. ஆனால் உறுதியளித்தது போல இரண்டு கோவில்கள் கட்டப்படவில்லை. அதற்கான பூர்வாங்க பணிகள் கூட துவங்கப்படவில்லை.
கடந்த இரண்டு வருடங்களாக இந்துமுன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மேயர், இந்து சமய அறநிலையத்துறை என பலரிடம் பலமுறை மனு கொடுத்தும் பணிகள் துவங்ப்படும் என்ற ஒரே பதிலை பல வருடமாக தெரிவித்து வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நாங்கள் துறையில் அதை செய்தோம் இதை செய்தோம் என வெற்று அறிக்கை விடுகிறார். ஆனால் அரசால் இடிக்கப்பட்ட அறநிலையத்துறை கோவிலையே கட்ட முடியவில்லை என்பதிலிருந்தே இந்து சமய அறநிலையத்துறையின் பொறுப்பற்ற தன்மை தெளிவாகிறது.
நியாயமாக பல முறை மனு கொடுத்தும்இடிக்கப்பட்ட இரண்டு கோவில்களும் கட்டப்படாத நிலையில் பேருந்து நிலையத்தை திறந்தால் இந்துக்களை ஏமாற்றும் நெல்லை மாவட்ட மற்றும் நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேருந்து நிலைய திறப்பு விழா அன்று இந்துமுன்னணி சார்பில் நெல்லை மாநகர இந்துக்களை ஒன்று திரட்டி கருப்பு கொடி ஏந்தி அறப்போராட்டம் நடத்தப்படும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் அறிவிக்கையில் தெரிவித்துள்ளார்.

