ஒவ்வொரு மீட்டலிலும் சுருதியும் லயமும் ஜீவனும் சேர்த்து கோடானு கோடி சங்கீத ரசிகர்களின் உள்ளங்களை மீட்டிய அந்த உயிரின் இழை இதே செப். 19ல்தான் அறுந்து போனது. மாண்டலின் ஸ்ரீனிவாஸ் 1969-ம் ஆண்டு ஆந்திராவில் உள்ள கோதாவரி மாவட்டம் பாலகோலில் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி பிறந்தார்.
தனது 6வது வயதில் மாண்டலினை கையில் எடுத்தவர் ஸ்ரீனிவாஸ். அவரது திறமை கண்ட அவரது தந்தை சத்யநாராயணா, தனது குரு ருத்ரராஜூ சுப்பராஜூவிடம்ஸ்ரீனிவாசை ஒப்படைத்தார். ருத்ரராஜூவுக்கு மாண்டலின் இசைக்கத் தெரியாது என்பதால், அவர் பாடுவதை ஸ்ரீனிவாஸ் தனது மாண்டலினில் இசைத்து பயிற்சி பெற ஆரம்பித்தார்.
குருவின் முயற்சியில் ஸ்ரீனிவாஸ் திறமை மேம்பட ஆரம்பித்தது. மாண்டலின் ஸ்ரீனிவாசின் முதல் மேடைக் கச்சேரி கடந்த 1978ம் ஆண்டு குடிவாடா என்ற இடத்தில் நடந்த தியாகராஜ ஆராதனை விழாவில் நடந்தது. தொடர்ந்து 1981ம் ஆண்டு சென்னையில் கச்சேரிகளை நடத்தத்துவங்கினார்
ஸ்ரீனிவாஸ். ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா, தென்மேற்கு ஆசியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா, சனாதன சங்கீத புரஷ்கார், தமிழக அரசின் ஆஸ்தான வித்வான், சங்கீத பால பாஸ்கரா, ராஜிவ் காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது உள்ளிட்ட விருதுகளை ஸ்ரீநிவாஸ் பெற்றுள்ளார்
