லெபனான் தெற்குப் பகுதிகளிலும் தலைநகர் பெய்ரூட்டின் பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லாவின் தகவல் பரிமாற்ற கருவிகளான வாக்கிடாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், எத்தனை வாக்கி-டாக்கிகள் வெடித்தன என்பது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.
மேலும், கிழக்கு லெபனானின் பல்வேறு இடங்களில் லேண்ட்லைன் தொலைபேசிகளும் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போதைய விசாரணைகளின்படி, கையால் பிடிக்கப்பட்ட வயர்லெஸ் ரேடியோ சாதனங்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு, பேஜர்கள் வாங்கிய அதே இடத்தில்தான் இவற்றையும் வாங்கியதாக
புது தகவல் வெளியாகி உள்ளது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே 5 ஆயிரம் பேஜர்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளனர். தைவானை சேர்ந்த கோல்ட் அப்பலோ என்ற நிறுவனம், இந்த பேஜர்களை தயாரித்துள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
