திருத்தணி முருகன் கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சமீபகாலமாக இந்த கோவிலில் குரங்குகள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்கள் சாப்பிடும் பொழுது அதை குரங்குகள் பறித்து செல்கின்றன. மேலும் பக்தர்கள் கையில் கொண்டு வரும் பார்சல்களை குரங்குகள் திடீரென பாய்ந்து பறித்து விடுகிறது.
இந்நிலையில் நேற்று, முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வந்த தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த மேனகா (45) என்பவர் தீபம் ஏற்றும் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது குரங்குகள் திடீரென பாய்ந்து அவரது கையில் கடித்தன. அதே போல் மலைக்கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் சதீஷ்குமார் (28), குமார் (33) ஆகியோரையும் குரங்குகள் கடித்துள்ளன.
மேலும் இரண்டு பெண் பக்தர்கள் குரங்குகள் கடித்துள்ளதாக கூறுகின்றனர். காயம் அடைந்த ஐந்து பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட பக்தர்களை குரங்குகள் கடித்துள்ளன. எனவே முருகன் கோவிலில் பக்தர்கள் அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்க கோவில் இணை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
