Thursday, May 21, 2026
Homeசெய்திகள்சமையற்காரர் மகனில் இருந்து அமைச்சர் வரை: ரமேஷின் அரசியல் அதிரடி பயணம்!

சமையற்காரர் மகனில் இருந்து அமைச்சர் வரை: ரமேஷின் அரசியல் அதிரடி பயணம்!

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில், மிக முக்கிய இலாகாவான இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சியின் விஐபி தொகுதியான ஸ்ரீரங்கத்தில் அன்பில் மகேஷ், கே.என். நேரு போன்ற திமுக அமைச்சர்களின் நேரடிப் பலத்தையும் மீறி, சுமார் 33,500 வாக்குகள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்று அரசியல் களத்தைத் தன் பக்கம் திருப்பியவர் இந்த 31 வயது இளம் சாமானியர் ரமேஷ்.

ஸ்ரீரங்கத்தைத் சொந்த ஊராகக் கொண்ட இவரது தந்தை சீனிவாசன் ஒரு சமையற்காரர், தாய் அவருக்கு உதவியாளர்; இத்தகைய எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த ரமேஷ், தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னை எஸ்.ஆர்.எம் (SRM) பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற தனது குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆவார்.

கல்லூரிப் படிப்பின் போதே, கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னை விஜய் மக்கள் இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர், பின்னர் த.வெ.க-வின் மாநில ஊடக மற்றும் செய்தித் தொடர்பு அணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்; மேடைகளில் இவரது துடிப்பான பேச்சு, டைமிங் சென்ஸ் மற்றும் திமுக அரசின் காலை உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டக் குறைபாடுகளைக் கையிலெடுத்து இவர் முன்வைத்த விவாதங்கள் த.வெ.க தொண்டர்களிடையே பெரும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தின.

தேர்தல் பிரமாணப் பத்திரப்படி, அவருக்கும் அவரது மனைவிக்கும் சேர்த்து வெறும் 31 லட்ச ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் மட்டுமே உள்ள சூழலில், எவ்விதப் பணபலமும் இன்றித் தனது கடுமையான உழைப்பாலும், பேச்சுத் திறமையாலும் சட்டமன்ற உறுப்பினராகி, தற்போது தமிழகத்தின் மிக முக்கியப் பாரம்பரியத் துறையான இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ரமேஷின் இந்த அரசியல் வளர்ச்சி தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments