Home ஆன்மீகம் “சதுரங்கம் விளையாடிய சிவபெருமான்”-ஆன்மீக தகவல்!

“சதுரங்கம் விளையாடிய சிவபெருமான்”-ஆன்மீக தகவல்!

சதுரங்கம் விளையாடிய சிவபெருமான்

அறந்தாங்கி சங்கர்

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் அந்த தென்னாடுடைய சிவன் இந்த பூலோகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் முக்கியமாக மனித இனம் பல்வேறு வகையான இன்பங்களையும் அனுபவிக்க ஏற்ற வகையிலே ஒரு அற்புதமான பூந்தோட்டமாக இந்த உலகை படைத்தான் . அதில் பல்வேறு வகையான சந்தோஷங்களையும் உண்டாக்கி இருக்கிறான் ..

அதேபோல இந்த உலகத்தில் உள்ள அனைத்து விதமான விளையாட்டுகளையும் மக்களுடைய பொழுதுபோக்குக்காக உருவாக்கியவனும் அந்த இறைவன் தான் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை..

அந்த இறைவன் தானே விளையாடிய ஒரு விளையாட்டு தான் சதுரங்கம் எனப்படும் செஸ் விளையாட்டாகும். சதுரங்க வல்லப நாதர் என்ற பெயரில் திருவாரூர் மாவட்டம் பூவனூரில் கோவில் கொண்டுள்ள இறைவன் தன்னுடைய தேவியை மணப்பதற்காக சதுரங்கம் விளையாடி அதில் வென்று தேவியை மணந்ததாக வரலாறு கூறுகிறது..

அந்த அற்புதமான நிகழ்வை நாம் கீழே காண்போம்..

வசுதேவன் என்ற மன்னன் தன் மனைவி காந்திமதியுடன் குழந்தை பாக்கியம் வேண்டி சிவாலயங்கள் தோறும் சென்று வணங்கி வந்தான். அதேபோல திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று இருவரும் மனமுருகி பிரார்த்தனை செய்தனர் . இவர்களுடைய பிரார்த்தனையை வேண்டுதலை ஏற்ற அந்த தென்னாடுடைய சிவபெருமான் பார்வதி தேவியை அவர்களுக்கு குழந்தையாக பிறக்கும் படியும் அந்த குழந்தையை பாதுகாப்பதற்காக பராசக்தியின் அம்சமாகிய சாமுண்டியை குழந்தைக்கு செவிலி தாயாக இருக்கும் படியும் அருள் புரிந்தார்.

அதன்படி ஒருமுறை மன்னன் வசதேவன் தன் மனைவியுடன் தாமிரபரணி நதியில் நீராடும்போது பார்வதி தேவி அங்கிருந்த தாமரைப் பூவில் சங்கு வடிவில் தோன்றினாள். மன்னன் அந்த சங்கை கையில் எடுத்தவுடன் அது ஒரு பெண் குழந்தையாக மாறியது. இதனால் மன்னனும் அவனுடைய ராணியும் மனம் மகிழ்ந்து குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்ற பெயரிட்டு அருமையாக பெருமையாக வளர்த்து வந்தனர்.

இறைவன் அருளியபடி சப்த மாதர்களில் ஒருவரான சாமுண்டீஸ்வரி தேவி குழந்தைக்கு வளர்ப்பு தாயாக இருந்து குழந்தையை மிகவும் அற்புதமாக வளர்த்து வந்தாள். குழந்தை சகல கலைகளையும் கற்றுத் தேர்நதாள். குறிப்பாக சதுரங்க விளையாட்டில் தன்னை வெல்பவர் யாருமில்லாத படி அந்த ராஜராஜேஸ்வரி திகழ்ந்தாள் . இதை அறிந்த மன்னன் தனது மகளை சதுரங்க விளையாட்டில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கு மணமுடித்து தரப்படும் என்று அறிவித்தார் .

ஆனால் அவளை சதுரங்கத்தில் யாருமே ஜெயிக்க முடியவில்லை. முனிவர் ஒருவருடைய அறிவுரையின்படி தன் மகள், மனைவி, வளர்ப்புத்தாய் சாமுண்டி மற்றும் பரிவாரங்களுடன் மன்னர் தல யாத்திரை மேற்கொண்ட போது பூவனூர் என்ற இந்த தலத்திற்கு வந்து வழிபாடு செய்தார்.

அப்போது அங்கு சித்தர் வேடத்தில் வந்த இறைவன் பார்வதி தேவியை மணமுடிக்க மனம் கொண்டு தான் சதுரங்க ஆட்டத்தில் வல்லவன் என்றும் ராஜராஜேஸ்வரி யோடு போட்டியிட்டு அவளை மணக்க விரும்புவதாகவும் மன்னரிடம் தெரிவித்தார்.

மன்னர் தன் மகளுடன் விளையாடுமாறு இறைவனை வேண்ட இறைவனும் இறைவியும் சதுரங்க ஆட்டம் ஆடி அந்த சதுரங்க ஆட்டத்தில் மன்னர் மகளை இறைவன் வென்று தனது உண்மையான வடிவத்துடன் அனைவருக்கும் தரிசனம் தந்தார். இறைவனே தன் மகளை மனம் புரிய வந்திருக்கிறார் என்பதை அறிந்த மன்னன் மகிழ்ந்தார். தன் மகளை இறைவனுக்கு மணமுடித்துக் கொடுத்தார் .இதனால் இந்த தளத்து இறைவன் சதுரங்க வல்லவ நாதர் என்று வழங்கப்படுகிறார்.

அம்பிகை ராஜேஸ்வரியும் வளர்ப்புத் தாயின் சாமுண்டியும் இந்த ஆலயத்தில் தனித்தனி சன்னதிகளில் இருந்து அனைவருக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக்கொள்ள இறைவனும் அவ்வாறே அருள் புரிந்தார்.

இதன்மூலம் இறைவனே சதுரங்க விளையாட்டு விளையாடினார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது …அது தவிர இந்த சதுரங்க விளையாட்டு நமது தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

மேலும் இத்தலத்தை இறைவன் சுயம்புலிங்கமாக அருள் பெறுகிறார் என்பது சிறப்பு செய்தி.

மைசூரில் உள்ள சாமுண்டி மலையை அடுத்து இந்த தளத்தில் தான் சாமுண்டீஸ்வரி தேவி தனி சன்னதியில் வடக்கு நோக்கி பிரம்மாண்டமாக வீற்றிருக்கிறாள்.

சிவனின் தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 103 வது தலம் ஆகும்.

இந்த தலத்தில் மகாவிஷ்ணு பிரம்மா இந்திரன் விநாயகப் பெருமான் முருகப்பெருமான், சுக முனிவர் அகத்தியர் பெருமான் ஆகியோர் இறைவனை பூஜை செய்துள்ளனர்.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் குணமாகிவிடும் என்பது நம்பிக்கை.

பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்தாலோ திருமண தடை நீங்கவும் குழந்தை பாக்கியத்திற்கும் சாமுண்டீஸ்வரி தேவியை வழிபாடு செய்வது சிறந்த பலனை தரும்.

மேலும் எலிக்கடி மற்றும் விஷக்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து இங்கு தரக்கூடிய வேர் ஒன்றை கையில் கட்டிக்கொண்டு கோயிலின் எதிரில் உள்ள தீர்த்தத்தில் நீராடி நலம் பெறுவதாக கூறுகின்றனர்.

மேலும் சதுரங்க விளையாட்டில் சிறந்து விளங்க ஆசைப்படுகிறவர்கள் இறைவனே சதுரங்கம் விளையாடிய இந்த ஆலயத்துக்கு வந்து அந்த இறைவனை பிரார்த்தனை செய்தால் சதுரங்க விளையாட்டிலே திறமை பெறலாம் திறன் பெறலாம் என்பது என்னுடைய கருத்து …உலகலாம் உணர்ந்து ஓதற்கு அரிய அந்த இறைவன் நிச்சயமாக நம்முடைய கோரிக்கையை நிறைவேற்றுவான் என்பது திண்ணம்.

அருள்மிகு சதுரங்க வல்லப நாதர் திருக்கோவில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகாவில் பூவனூரில் அமைந்துள்ளது.

ஆலய தொடபுக்கு அழைக்க வேண்டிய எண் 94423 99273.

ஒரு முறையேனும் இந்த ஆலயத்தில் அமைந்து அருள் பாலிக்கும் இறைவனை நேரில் சென்று வணங்கி பிரார்த்தனை செய்தால் நமது வாழ்வில் வளமும் நலமும் கூடும் ..ஓம் நமச்சிவாய..

அறந்தாங்கி சங்கர்

Exit mobile version