Home Uncategorized தமிழகம் பல்துறைகளில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது- ஐகோர்ட்டு கருத்து

தமிழகம் பல்துறைகளில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது- ஐகோர்ட்டு கருத்து

சென்னை ஐகோர்ட்டில், கருமலை என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘சேலம் மாவட்டம் காடையம்பட்டி தாலுகாவில் உள்ள தாத்தையாம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி, வீடில்லா ஏழை, எளிய மக்களுக்கு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் குறிப்பிட்டுள்ள அந்த நிலம் பள்ளி கட்டிடம் கட்ட ஒதுக்கக்கோரி மாவட்ட கலெக்டருக்கு, வட்டாட்சியரால் கருத்துரு அனுப்பியுள்ளார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘‘தமிழ்நாடு பல துறைகளில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. மக்கள் நல அரசாக விளங்கும் தமிழக அரசு வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீடுகளை வழங்க வேண்டும். அதேசமயம் அனைத்தும் இலவசமாக கிடைக்கும் என்ற எண்ணத்தையும் மக்களிடையே ஏற்படுத்தி விடக்கூடாது’’ என்று கருத்து தெரிவித்தனர். 

பின்னர், வீட்டு மனை ஒதுக்கக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மனுதாரர் மீண்டும் மனு கொடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் வீடற்ற ஏழை, எளியோருக்கு நிலம் அல்லது வீடு வழங்குவது தொடர்பாக விரிவான செயல் திட்டத்தை தமிழக அரசு வகுக்க வேண்டும். இதற்காக மாவட்ட வாரியாக நிலங்களை அடையாளம் காண வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

Exit mobile version